
முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆவலாகக் காத்திருந்த நிலையில், யூத்தான நிர்வாகிக்கு டெல்லி செல்லும் அதிர்ஷ்டம் அமைந்திருக்கிறது.
விசில் கட்சியில் போட்டியிட்டு, கவனம் ஈர்க்கும்விதத்தில் வாக்கு வாங்கிய நிர்வாகி, சீனியர் அமைச்சர் ஒருவரைச் சந்தித்து, ஆளுங்கட்சியில் சேர விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். ‘பத்தாயிரம் பேருடன் இணைகிறேன்’ என்றவர், அதற்குக் கைம்மாறாக ஒரு பதவியைக் கேட்டாராம். “எனக்கே சரியான பதவியை வாங்க முடியாமப் போராடிக்கிட்டிருக்கேன். போய் மகன், மருமகன் யாரையாச்சும் பாருங்க” எனச் சொல்லி அனுப்பினாராம் சீனியர் அமைச்சர். #பெத்த பெரியவருக்குப் பெருமை இல்ல... தேருக்குத் தெருபாக்க திருவிழா இல்ல!
தியேட்டர் திறப்பைத் தள்ளிப்போடலாம் என முதன்மையானவருக்கு நிழலாக இருக்கும் அதிகாரிகள் எச்சரித்தார்களாம். ஆனால், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் வாரிசு நிர்வாகியை அணுகி தியேட்டர் திறப்புக்கு வழிசெய்யச் சொன்னார்களாம். அதனால், அதிகாரிகள் எச்சரிக்கையைச் சட்டை செய்யாமல் வாரிசு மனதைக் குளிரவைக்க, தியேட்டர் திறப்புக்கு ஓகே சொல்லப்பட்டதாம். #கொரோனா என்னாத்த... தீபாவளிக்கு `அண்ணாத்த!’
காவிக் கட்சியின் சீனியர் புள்ளிக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டதில், மற்ற புள்ளிகளுக்கு எவ்வித வருத்தமும் இல்லையாம். காரணம், சில மாதங்களுக்கு முன்னரே சீனியர் புள்ளிக்கு உயரிய அங்கீகாரத்தை டெல்லி வழங்கப்போகிறது என்கிற செய்தி கசிந்துவிட்டதாம். அதனால், அப்போதிருந்தே காவிக் கட்சியின் நிர்வாகிகள் அந்த சீனியருக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருந்தார்களாம். தடால் பார்ட்டியான மன்னர் நிர்வாகிகூட, ‘சரியான நியமனம்’ என சர்டிஃபிகேட் வழங்கியதுதான் ஹைலைட். #ஓ... தேவாவே சொல்லிட்டாரா?
முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆவலாகக் காத்திருந்த நிலையில், யூத்தான நிர்வாகிக்கு டெல்லி செல்லும் அதிர்ஷ்டம் அமைந்திருக்கிறது. ‘நேரடியாக திருமதி முதன்மை தலையிட்டு பெற்றுக்கொடுத்த வாய்ப்பு’ என்கிறார்கள் கட்சிக்குள். வேறு சிலரோ, “அவருடைய பொறுமைக்கும் நிதானத்துக்கும் கிடைத்த அங்கீகாரம் இது. தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டாலே வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுபவர்கள் மத்தியில், அவருடைய உண்மையும் விசுவாசமும் முதன்மையானவரால் கவனிக்கப்பட்டன” என்கிறார்கள் விளக்கமாக. #விசுவாசமான புள்ளி... கோட்டை டு டெல்லி!

அமைச்சர் பட்டியலில் ஆச்சர்யமாக இடம்பிடித்த மிஸ்டர் நேர்மை, துறைரீதியான நடவடிக்கைகளை மிகுந்த நியாயமாகச் செய்ய வேண்டும் என நினைக்கிறாராம். ஆனால், கடந்த ஆட்சியில் தவறான நிகழ்வுகள் நடக்கக் காரணமான சிலர், டெண்டர் விஷயங்களில் அமைச்சருக்குத் தவறான ஆலோசனைகளை வழங்குகிறார்களாம். அவர்களுடைய கருத்துகளை ஏற்று நடக்கும்படி கட்சித் தலைமையும் வலியுறுத்துகிறதாம். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறார் மிஸ்டர் நேர்மை. #தொண்டையில முள்ளு... தைரியமா போய்ச் சொல்லு!
அநியாயத்துக்கு அமைதி காத்துவந்த பணிவானவர், கடந்த இரு வாரங்களாகக் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவது, சின்ன தலைவிக்குத் தூது அனுப்புவது என மிகப் பரபரப்பாக இருக்கிறாராம். பங்களா விவகாரத்தில் எந்த நேரத்திலும், எதுவும் நடக்கலாம் என்பதால்தான் இந்த வியூக நடவடிக்கையாம். கூடவே எங்கும் பூஜை புனஸ்காரங்களும் புகையைக் கிளப்புகின்றனவாம். #மேனி கொதிக்குதடி... தலை சுற்றியே வேதனை செய்குதடி!
பம்பரக் கட்சியில், வாரிசைப் பொறுப்புக்குக் கொண்டுவராமல் காலத்தைத் தள்ளிவந்தார் கறுப்புத்துண்டு தலைவர். நிர்வாகிகள், குடும்பத்தினர் எனப் பலர் சொல்லியும் குடும்பக்கட்சி என்கிற குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது எனத் தயங்கினார் அந்தத் தலைவர். இதற்கிடையில், ‘இனி நான் தீவிர அரசியல் செய்வேன்’ என வாரிசே வெளிப்படையாகச் சொல்ல, பொறுப்பேற்க நாள் குறித்துவிட்டாராம் தலைவர். #தானா சுத்துது பம்பரம்... அதனால சாட்டையும் காட்டுது மும்முரம்!