அரசியல்
அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

தனி நாடு கட்டமைத்திருப்பதாகச் சொல்லும் சாமியாரின் உடல்நிலை, கவலைக்கிடமாக இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அது உண்மையோ, பொய்யோ… ஆனால், தமிழகம் தொடங்கி பல மாநிலங்களில் அந்தச் சாமியாருக்குச் சொந்தமாக இருக்கும் பல கோடி மதிப்புள்ள நிலங்களை வளைக்க, திடீரென முயற்சிகள் நடக்கின்றனவாம். ‘சாமியாரே விற்க நினைக்கிறார்’ எனவும் சொல்லப்படுகிறது. அரசியல் ஆலோசகராகக் காட்டிக்கொள்ளும் ஒருவரின் கைங்கர்யங்களும் இந்த விவகாரத்தில் நிறையவே இருக்கின்றனவாம். #குருவே சரணம்!

கிசுகிசு

‘டிசம்பர் மாதம் உறுதி’ என க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுவிட்டதாம் ஆளும் கட்சி வாரிசுக்கு. பட்டாபிஷேகம் பட்டையக் கிளப்ப, அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஆஃப் தி ரெக்கார்ட் ஆர்டரும் போடப்பட்டுவிட்டனவாம். மகனுக்கான மகுடாபிஷேகத்தை டெல்லியின் கவனத்துக்குச் சொல்லித்தான் நடத்தவிருக்கிறாராம் முதன்மையானவர். உறவுக்காரரை நேரில் டெல்லிக்கு அனுப்பி, ஆசி வாங்கும் சாக்கில் ஒப்புதல் வாங்கி, டிசம்பர் மாதத்தை பிக்ஸ் பண்ணினார்களாம். #சின்ராச இனி கையில பிடிக்க முடியாது!

கிசுகிசு

கதர்க் கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கு நடக்கவிருக்கும் தேர்தலைக் காட்டிலும், தமிழகத்தில் அடுத்த தலைவர் யார் என நடக்கிற போட்டிதான் பெரிதாகப் பரபரக்கிறது. இப்போதைய தலைவர் மூன்றாண்டுகளை நிறைவுசெய்துவிட்டதால், மீண்டும் அவர் நீடிக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது. பிரகாசமான பெண் எம்.பி தொடங்கி கவிஞர் பெயர்கொண்ட எம்.பி வரை பலருடைய பெயர்கள் பட்டியலில் அடிபடுகின்றன. ‘தி.மு.க-வுடன் சரியான முறையில் இணக்கத்தை மெயின்டெயின் பண்ணக்கூடிய ஆள்தான் சரிப்படும்’ எனத் தீர்மானித்திருக்கும் கதர்க் கட்சியின் வாரிசு, அரசர் பெயரை அறிவிக்க நினைக்கிறாராம். ஆனால், அதற்கு உள்ளடி எதிர்ப்புகள் கடுமையாக இருக்கின்றனவாம். அதனால், இளைய தலைமுறைத் தலைவர் ஒருவரை அறிவிக்கிற எண்ணத்தில் இருக்கிறாராம் வாரிசு. #சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க பாஸு!

கிசுகிசு

டெல்டா மாவட்டங்களில் சகஜமாக நடக்கும் மொய் விருந்து விழாவை, காவிக் கட்சியின் மாஜி காக்கி தலைவர் பெரிய சர்ச்சையாக்கிவிட்டார். டெல்டா மாவட்டத்தின் கடைக்கோடி தொகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் பத்து கோடியை மொய்யாக வாங்க, அதையடுத்துத்தான் சர்ச்சையை உருவாக்கினார் மாஜி காக்கி. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ ‘என்மீது எந்தத் தவறும் இல்லையே... காலங்காலமா எல்லாரும் செய்யறதுதானே’ எனப் புலம்புகிறார். ஆனால் முதன்மையானவர், “10 கோடி பணத்தை ஒரு எம்.எல்.ஏ மொய்யா வாங்கியிருக்கார்னா, மக்கள் எரிச்சல் அடையத்தான் செய்வாங்க. ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கிறாங்க?” என வறுத்தெடுத்துவிட்டாராம். இதனால், டெல்டா மாவட்டங்களில் நிறைய மொய் செய்துவைத்திருக்கும் ஆளுங்கட்சி நிர்வாகிகள், விழா நடத்தத் தயங்கி வசூலைத் தள்ளிப்போட்டிருக்கிறார்களாம். #முகந்திரிந்து நோக்கக் குழைந்தது விருந்து!

கிசுகிசு

மனைவியை முக்கியப் பொறுப்புக்குக் கொண்டுவர நினைக்கிறாராம் கப்பல் தலைவர். “இப்போதைக்கு அது முக்கியம் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலிலும், கூட்டணியிலும் கவனம் செலுத்துவோம்” என மனைவி சொல்ல, “இதுதான் சரியான நேரம். கட்சி நிர்வாகிகளை அழைத்து நான் பேசுறேன்…” என்றாராம் கப்பல் தலைவர். விரைவில் அம்மணிக்கு அடுத்தகட்ட பதவிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். #கூட்டணிக்கு நேரமாச்சு என்று கொட்டு முரசே!