அலசல்
அரசியல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

திரை விருது விழாவை முதன்மையானவர் புறக்கணிக்க முக்கியக் காரணமே, விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்தது இலைக் கட்சி ஆட்சியாளர்கள் என்பதுதான். அதனால்தான் விழா சமயத்தில் கேரளாவுக்குக் கிளம்பிப் போனார். அதில்தான் இப்போது ஒரு சிக்கல். 2014-ம் ஆண்டு வரைக்குமான விருதுகளை அறிவித்தவர்கள், 2015-ம் ஆண்டுக்கான அறிவிப்புகளை வெளியிடத் தவறிவிட்டார்களாம். அந்த வருடத்துக்கான விருதுகளையும் இலைக் கட்சி ஆட்சியாளர்கள் ஏற்கெனவே தேர்ந்தெடுத்து ஆவணப்படுத்திவிட்டார்களாம். அறிவிப்புக் குளறுபடியில் 2015-ம் ஆண்டு மட்டும் விடுபட்டுப்போன, விஷயம் இப்போதுதான் முதன்மையானவர் கவனத்துக்குப் போனதாம். ‘விழா ஏதும் வேண்டாம். அறிவிப்பை மட்டும் வெளியிட்டு உரியவர்களுக்கு விருதுகளைச் சேர்த்துவிடுங்கள்’ எனச் சொன்னாராம். # ‘பாடும்... பாடித் தொலையும்...’ மொமன்ட்!

கிசுகிசு

சின்ன தலைவி சில சொத்துகளை விற்க சைலன்ட்டாக மெனக்கெடுகிறார். பலவிதங்களிலும் பணத்தை வெளியே எடுக்க முடியாத நிலை நிலவுவதால், சொத்துகளை விற்பதைத் தவிர வேறு வழியில்லையாம். சட்டரீதியான சிக்கல் இல்லாத சொத்துகளை மட்டும் பரிவர்த்தனை செய்து பணப் பிரச்னைக்குத் தீர்வு காண நினைக்கிறார் சின்ன தலைவி. இதில் உறவுகளுக்கு மட்டும் உடன்பாடு இல்லையாம். ‘சொத்துகளைப் பங்கு பிரித்துத் தருவார் என நினைத்தால், இப்படி விற்க ஏற்பாடு செய்கிறாரே’ என முடிந்த மட்டும் அதற்குக் கட்டையைப் போட்டுக்கொண்டிருக்கிறார்களாம். ‘சொத்தில் வில்லங்கம் இருக்கிறது’ எனக் கிளப்பிவிட்டு, சின்ன தலைவிக்கே செக் வைக்கிறார்களாம். இதனால், சொல்ல முடியாத சோகத்தில் இருக்கிறாராம் சின்ன தலைவி. #என் சோகக் கதையே கேளு தாய்க்குலமே!

கிசுகிசு

கிச்சனில் செல்வாக்கு பெற்றிருக்கும் இனிஷியல் அமைச்சர், கட்சியின் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் பொறுப்பைக் குறிவைத்துப் பல காலமாகக் காய்நகர்த்திவருகிறார். இப்போது அந்தப் பொறுப்பில் இருக்கும் மில்க் சீனியர், தன் மகனுக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தகிடுதத்தம் போட்டுவருகிறார். ஆளுக்கு ஒரு அசைன்மென்ட் என நடக்கிற இந்தப் போட்டியில், இனிஷியல் அமைச்சரின் கை இப்போதைக்கு ஓங்கியிருக்கிறது. அதனால், மில்க் சீனியருக்கு இறங்கு முகம் என்கிறார்கள். ‘பிறகு எப்படி மில்க் சீனியருக்கு விருது கொடுத்து கௌரவிக்கிறார்கள்?’ என அப்பாவியாக உடன்பிறப்புகள் சிலர் கேட்க, ‘முதன்மையானவரின் பாணியே தெரியாமல் இருக்கீங்களே…’ எனச் சிரிக்கிறார்களாம் அறிவாலயத்தில். #என்னா ஒரு வில்லத்தனம்!

கிசுகிசு

இலைக் கட்சியில், பணிவானவருக்கு எதிராக ஆரம்பத்திலேயே பாய்ந்தவர் முருகப்பெருமான் பெயர்கொண்ட சட்ட மாஜிதான். அவ்வப்போது சின்ன தலைவிக்கு எதிராகக் கொந்தளிக்கவும் அவர் தவறவில்லை. துணிவானவரின் சட்டப் போராட்டத்துக்கும் துணையாக நின்றார். ஆனால், இடையில் என்ன நடந்ததோ, சட்ட மாஜிக்கும் துணிவானவருக்கும் இடையேதான் இப்போது முட்டிக்கொண்டு நிற்கிறதாம். வாரக்கணக்கில் பேசிக்கொள்ளாத அளவுக்கு இருவருக்கும் இடையே மௌன யுத்தம் நடக்கிறது. ‘மொத்தக் குளறுபடிகளுக்கும் அவர்தான் காரணம்’ எனத் துணிவானவர் கொந்தளித்துச் சொன்ன வார்த்தைகள், சட்ட மாஜி கவனத்துக்கு அப்படியே கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டனவாம். இருவரையும் சமாதானப்படுத்த ஒரு குழுவே தீவிரமாக இயங்கிவருகிறது. #நீயா பேசியது... என் அண்ணே... நீயா பேசியது!

கிசுகிசு

அமைச்சர்களின் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், அது குறித்து முதன்மையானவர் கவனத்துக்குத் தெரிவிக்கவும் ஆஃப் தி ரெக்கார்ட் ஆட்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே அவர்கள் கொடுத்த தகவல்களைவைத்து அமைச்சர்கள் சிலரைக் கடுமையாக பரேடு எடுத்தார் முதன்மையானவர். கட்சியில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் சீனியர் அமைச்சரும் முதன்மையானவரின் சீற்றத்துக்குத் தப்பவில்லை. கடந்த வாரம் அந்த ஆஃப் தி ரெக்கார்ட் ஆட்கள் கொடுத்த தகவல், முதன்மையானவரைச் சற்றே ஆசுவாசமாக்கியதாம். எந்த முடிவையும் உரியவர்களிடம் கலந்து பேசி எடுப்பதும், பணரீதியான பெரிய விஷயங்களை உடனடியாகக் கவனத்துக்குக் கொண்டுவருவதும், டிரான்ஸ்ஃபர் உள்ளிட்ட சிபாரிசுகளைக் கேட்டுச் செய்வதுமாக அமைச்சர்களின் நடவடிக்கைகள் ‘அநியாய அடக்கமாக’ மாறியிருக்கின்றனவாம். இதனால் முதன்மையானவர் ஹேப்பி என்கிறார்கள். #குமுதா ஹேப்பி அண்ணாச்சி!