
- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்
ஆளும் கட்சியில், சீனியர் பெண்புள்ளி ராஜினாமா செய்த பதவிக்கு யாரைக் கொண்டுவருவது எனப் போட்டி நடந்தது. பெண்ணுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கும்விதமாக இன்னொரு பெண் புள்ளியைத்தான் நியமிக்க வேண்டும் என்று தலை முடிவு செய்தது. பல காலமாக, தங்கையின் பெயர் அடிபடுகிற பதவி என்பதால், அவருக்கே வழங்கிவிடலாம் என சீனியர்கள் பலரும் முதன்மையானவரிடம் சொல்லியிருக்கிறார்கள். இல்லத் தரப்பும், க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதால், தங்கையின் பெயரை முதன்மையானவர் `டிக்’ செய்துவிட்டாராம்! #பந்தத்த மீறிப்போக சக்தி இல்லையே... பாசத்த பங்குபோட பட்டா இல்லையே!
மீசை அமைச்சரின் தம்பி கொலையான வழக்கை மீண்டும் விசாரிக்க, எஸ்.பி ஒருவரின் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. அது குறித்த அப்டேட்டை அடிக்கடி விசாரித்துவருகிறாராம் முதன்மையானவர். மீசை அமைச்சரைக் காட்டிலும் முதன்மையானவர் காட்டும் அக்கறை அதிகமாம். சமீபத்தில் திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளைச் சேர்ந்த ஆட்கள் பக்கம் விசாரணை நீள, சி.பி.சி.ஐ.டி-யின் உயரதிகாரியிடம், அது குறித்து போனில் விசாரித்தாராம் முதன்மையானவர். “இன்னும் ஒரு மாதத்துக்குள் விசாரணை முடிவுக்கு வந்துவிடும் சார்…” என உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். #பார்ப்போம்!

இலைக் கட்சியில் பணிவானவர் பக்கம் இருக்கும் டெல்டா மாவட்ட ட்ரீட்மென்ட் புள்ளியை, தன் பக்கம் இழுக்க மறுபடி முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார் துணிவானவர். சமுதாயரீதியான ஒருங்கிணைப்பு உருவாகிவிடாதபடி தடுக்க ட்ரீட்மென்ட் புள்ளியை எந்த விலை கொடுத்தேனும் இழுக்க வேண்டிய கட்டாயமாம். மாஜிக்கள் பலரோடும் இன்றளவும் தொடர்பில் இருக்கும் ட்ரீட்மென்ட் புள்ளி, சின்ன தலைவியுடனும் இணக்கம் பாராட்டிவருகிறார். எல்லாவற்றுக்கும் சேர்த்து முற்றுப்புள்ளிவைக்க அவரை வளைப்பதே சரியான வழி என நினைக்கிறாராம் துணிவானவர். பேரங்கள் தொடர்கின்றன. #‘வேரோட புடுங்கு’ மொமன்ட்!

தமிழ் சினிமாவைத் தங்கள் கைப்பிடிக்குள் கொண்டுவந்துவிட்ட வாரிசு நிறுவனம், கமிஷன் என்கிற பெயரில் அடிக்கிற கொள்ளைக்கு அளவே இல்லையாம். படத்தை ரிலீஸ் செய்து கொடுத்துவிட்டு லாபம் வந்தாலும், வராவிட்டாலும் தங்களுக்கான கமிஷன் எனப் பெரிய தொகையைச் சுருட்டிக்கொள்கிறார்களாம். ‘வாரிசின் கவனத்துக்குத் தெரிந்துதான் இதெல்லாம் நடக்கின்றனவா?’ எனப் புரியாமல் அல்லாடும் தயாரிப்பாளர்கள், அவரையே நேரில் சந்தித்து, தங்களின் வேதனையைச் சொல்ல நேரம் கேட்டிருக்கிறார்களாம். #ஐயா... மிரட்டுறாங்கய்யா..!
‘பாரம்பர்ய’ அமைச்சருக்கும் ‘பத்திரமான’ அமைச்சருக்கும் மோதல் தூள் பறக்கிறது. உட்கட்சித் தேர்தலில் பாரம்பர்ய அமைச்சர் முன்னிறுத்திய ஆளைப் பின்னுக்குத் தள்ளி, தன் ஆதரவாளரை மாவட்டச் செயலாளராக்கிக் காட்டிவிட்டார் பத்திரமான அமைச்சர். இதைவைத்து இருவரில் பத்திரமான அமைச்சரைத்தான் முதன்மையானவர் ஆதரிக்கிறார் என்பது அப்பட்டமாகிவிட்டது. இன்னும் சிலரோ ஒருபடி மேலே போய், ‘பாரம்பர்ய அமைச்சருக்கு எதிராக, பத்திரமான அமைச்சரைக் கொம்புசீவிவிடுவதே முதன்மையானவர்தான்’ என்கிறார்கள் பல விஷயங்களை மேற்கோள் காட்டி. #அரசியல் ஜல்லிக்கட்டு!