காப்புக் காடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அரசாணையை ரத்து செய்யக்கோரி, பூவுலகின் நண்பர்கள் தலைமையில் மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்டிபிஐ, திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம், மே 17 இயக்கம், போன்ற கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் இணைத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில்,"தமிழக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு அரசாணை எண் 295ன் மூலம் காப்புக்காடுகள், காட்டுயிர் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள், யானைகளின் வலசைப் பாதைகள் ஆகியவற்றிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவுவரை கனிம சுரங்கங்களுக்கு அதாவது குவாரிகள், செங்கல் சூளைகள், கல்லுடைப்பு ஆலைகள், செயல்பட தடை ஆணையை பிறப்பித்திருந்தது. இதனால் வனப்பகுதிகளில் குவாரிகள் அமைப்பது தடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது தமிழக அரசின் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கடந்த 14.12.2022 அன்று ஒரு அரசாணையை வெளியிட்டிருக்கிறது. இந்த அரசாணையின் வாயிலாக தமிழ்நாடு சிறு கனிம சலுகை சட்ட விதிகள் 1959-ல் ( THE TAMILNADU MINOR MINERAL CONCESSION RULES) பிரிவு 36இல் உட்பிரிவு 1(A)வில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இச்சட்டத்திருத்ததின்படி காப்புக் காடுகளின் எல்லையிலிருந்து 1 கி.மீ. சுற்றளவிற்குள் கனிம சுரங்கங்கள் அமைப்பதற்கான தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது. குவாரி நிறுவனங்களின் நலன் மற்றும் அரசின் வருவாயை அதிகரிப்பது போன்ற காரணங்களுக்காகதான் காப்புக்காடுகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுவரை பிறப்பிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இத்தடை நீக்கப்பட்டிருப்பதன் மூலம் அனுமதி மறுக்கப்பட்ட குவாரிகளும் ஏற்கனெவே 1கி.மீ. சுற்றளவிற்கு செயல்பட்டு வந்த காரணத்தால் மூடப்பட்டிருந்த குவாரிகளும், சுரங்கங்களும், செங்கல் சூளைகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். இதனால் காட்டுயிர்கள் பாதிப்புக்குள்ளாகும்.
அதுபோலவே இத்தடை நீக்கத்தால் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து காடுகளை ஒட்டி உள்ள மலைகளை சிதைத்து கற்களும் மண்ணும் அண்டை மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் அவலம் இனி சட்டரீதியாகவே தொடரும். எனவே தமிழகத்தின் பசுமையைக் காப்பதில் அக்கறையோடு செயல்பட்டு வரும் முதல்வர் அவர்கள் தலையிட்டு காடுகளுக்கும், காட்டுயிர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று அக்கடித்ததில் கோரிக்கை விடுத்துள்ளனர்.