Published:Updated:

வரிப் பணத்தில் ஜெயிக்க நினைக்கும் கட்சிகள்!

தலையங்கம்

பிரீமியம் ஸ்டோரி

மீண்டும் சூடுபிடித்திருக்கிறது தேர்தல் களம். அடுத்த ஆண்டின் தொடக்கத் தில் உ.பி, பஞ்சாப், கோவா உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, காங்கிரஸும் பாரதிய ஜனதா கட்சியும் தீவிரமாக பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கின்றன. இந்தத் தேர்தலில் குறிப்பாக, உ.பி மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று நினைத்து இந்த இரு கட்சிகளும் இலவசங்களை வாரி வழங்கி வருகின்றன.

காங்கிரஸ் சார்பில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவரும் பிரியங்கா காந்தி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பெண் மாணவிகள் அனைவருக்கும் இருசக்கர வாகனம் மற்றும் லேப்டாப், விவசாயிகள் வாங்கிய அனைத்துக் கடன்களும் ரத்து, மின் கட்டணத்தில் 50% கட்டத் தேவையில்லை; கோவிட் காலத்தில் பயன்படுத்திய மின்சாரத்துக்கான கட்டணம் ரத்து எனப் பல வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன.

இதற்குப் பதிலடியாக, தற்போது இலவசமாக வழங்கப்பட்டுவரும் ரேஷன் பொருள்கள், 2022 மார்ச் வரை நீட்டித்துத் தரப்படும் எனவும், பெண்களுக்கு ஸ்மார்ட் போனும் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனமும் தரப்படும் எனவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருக்கிறார். ரூ.64,000 கோடியில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டத்தை பிரதமர் மோடி உ.பி-யில் தொடங்கியது தேர்தலை மனதில் வைத்துதான்.

காங்கிரஸோ, பாரதிய ஜனதாவோ... ஆட்சியைப் பிடிக்க நினைப்பதில் தவறில்லை. ஆனால், வாக்காளர்களை வளைப்பதற்காக ‘இலவச’ அறிவிப்புகளை சகட்டுமேனிக்கு அள்ளிவிடுவதுதான் தவறு. இலவசம் என்கிற பெயரில் தீட்டப்படும் நலத் திட்டங்கள் மற்றும் சேவைத் திட்டங்களின் தேவை, சமூகத்தில் இன்னமும் இருக்கவே செய்கிறது. ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களைக் கைதூக்கிவிட இந்தத் திட்டங்கள் அதி அவசியம். ஆனால், வாக்குகளை வளைக்கும் நோக்கில் ஏழை-பணக்காரர் என்கிற பேதமில்லாமல் அனைவருக்குமே அள்ளி வழங்குவதுதான் அநியாயம். மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிப் பணத்தின் மூலமாகத்தான் இத்தகைய திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அனைவருக்கும் பொதுவான அந்தப் பணத்தை, ஏதோ ஒரு அரசியல் கட்சியின் சுயநலத்துக்காக மட்டுமே, பயன்படுத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது!

இனிவரும் தேர்தல்களில், அரசியல் கட்சிகள் தரும் வாக்குறுதிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதிக்க வேண்டும். முறையற்ற, தேவைற்ற வாக்குறுதிகளை அள்ளிவிடும் அரசியல்கட்சிகள், தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும் என்கிற அளவுக்கு கடுமை காட்ட வேண்டும். அப்போதுதான் பொய்யான, தேவையற்ற வாக்குறுதிகளைத் தருவது தடுத்து நிறுத்தப்படுவதுடன், மக்களின் வரிப்பணம் சூறையாடப்படுவதையும் தடுத்து நிறுத்தப்படும்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு