சினிமா
தொடர்கள்
Published:Updated:

பிரசாந்த் கிஷோர் எனும் கேட்டலிஸ்ட்!

பிரசாந்த் கிஷோர்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரசாந்த் கிஷோர்

இணைய உடன்பிறப்புகளின், மம்தாவின் தொண்டர்களின் கனவுகளைத் தூக்கிச் சுமக்கும் பிரசாந்த் கிஷோர்தான் மோடி மாடலை உலகறியச் செய்தவர்

ஞாயிற்றுக்கிழமை சட்டமன்றத் தேர்தல் முடிவு விவாதங்களில் அனல் பறந்துகொண்டிருந்தபோது, வட இந்திய ஊடகங்களில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாகப் பேசிக்கொண்டிருந்தார் பிரசாந்த் கிஷோர். ‘தேர்தல்கள் கார்ப்பரேட் மாஃபியாக்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. அதில் ஜனநாயகமே இல்லை’ என மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் பிரசாந்த் கிஷோரின் ஆக்ரோஷ பேச்சும் டிவியில் ஒலித்துக்கொண்டிருந்தது. தமிழகம் முழுக்கவே தற்போது அறியப்பட்ட ஒரு பெயர் PK என்னும் பிரசாந்த் கிஷோர். ‘போக்கிரி’ படத்தில் விஜய் சொல்லும் வசனம்தான். “எனக்கு எல்லோரும் ஒண்ணுதான். நீ பணம் கொடு, இதோ இவனத் தூக்கணும்னாலும் தூக்கறேன்’’ என யாருக்கு அடியாளாக வந்திருக்கிறாரோ அவரையே சுடத் துணிவார் விஜய். அவ்வளவுதான் பிரசாந்த் கிஷோர். ஜோதிடக் கணக்குகளையே இதுவரை நம்பிவந்த அரசியல் பிரமுகர்கள், இப்போதெல்லாம் நம்புவது பிரசாந்த் கிஷோரின் கணக்குகளைத்தான்.

இணைய உடன்பிறப்புகளின், மம்தாவின் தொண்டர்களின் கனவுகளைத் தூக்கிச் சுமக்கும் பிரசாந்த் கிஷோர்தான் மோடி மாடலை உலகறியச் செய்தவர். குஜராத் என்னும் இந்திய மாநிலத்தை, பீகாரிலிருந்து வந்த பிரசாந்த் கண்களின் வழியேதான் அன்று இந்தியாவே பார்த்தது. போட்டோஷாப்பை உருவாக்கிய அடோப் நிறுவனத்தைவிட அன்று போட்டோஷாப் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது குஜராத் மாடலுக்குத்தான். சில காலம்தான். மோடிக்கு எதிராக நிதிஷ்குமாருக்காகக் களமிறங்கினார் பிரசாந்த். மோடிக்கு ‘சாய் பெ சர்ச்சா’ (டீயுடன் உரையாடுவோம்) என்றால், நிதிஷுக்கு ‘ஹர் கர் தஸ்தக்.’ பீகார் தேர்தலில், பாஜக தலைவர்கள் ஹெலிகாப்டர்களில் பறந்துகொண்டிருக்க, வீடு வீடாகச் சென்று கதவுகளைத் தட்டி ஓட்டுக்களை அள்ளியது நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம். அதுதான் தற்போது ‘நிராகரிப்போம் அதிமுகவை’ வரை நீண்டிருக்கிறது.

இதுபோன்ற தேர்தல் ஆலோசகர்களையெல்லாம் வெறும் பேச்சுத்துணைக்கு வைத்திருக்கிறோம் என்றார் திமுகவின் துரைமுருகன். ஆனால், தேர்தல் நாளில்கூட ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தது பிரசாந்த் கிஷோரிடம்தான். இத்தனை ஆண்டுக்காலம் ஸ்டாலின் என்றாலே அவரைத் துரத்தும் முதல் விஷயம், அவரின் உடல்நிலைதான். லண்டன் செல்கிறாராம், சிங்கப்பூர் செல்கிறாராம் என வதந்திகள் ஸ்டாலினுக்கு முன்பாக வந்து நிற்கும். இந்த முறையோ ஆர்யாவுடன் போட்டி போட்டிக்கொண்டு மகாபலிபுரம் வரை சைக்கிளிங் செல்கிறார் ஸ்டாலின். குடியரசு தினமா, சுதந்திர தினமா என்கிற அளவுக்கு வாய் குழறும் ஸ்டாலினுக்கு இந்த முறை அப்படியான வீடியோக்கள் எதுவும் வெளியே வரவில்லை. சுழன்று சுழன்று பிரசாரம், கைத்தட்டல் வாங்கும் பேச்சு, கூல் செல்ஃபிக்கள் என எல்லாமே மாறிப்போயிருந்தன ஸ்டாலினிடம். எல்லாவற்றுக்கும் காரணம் பிகே எனச் சொல்லவில்லை. ஆனால், பிகே வந்தபின்புதான் மாற்றங்கள் கண்கூடாகத் தெரிய ஆரம்பித்தன. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் கேள்விகள் முதல், தேர்தல் அறிக்கை வரை எல்லாவற்றிலும் பிரசாந்த் கிஷோரின் கைகள் இருந்தன என்கிறார்கள்.

பிரசாந்த் கிஷோர் எனும் கேட்டலிஸ்ட்!

பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்தில் மும்முனைப் போட்டி நடைபெற்றது. ஸ்டாலின், எடப்பாடி, கமல் என மூவருமே பிரசாந்த்துக்கு யாத்திரை சென்றார்கள். ஆனால், பிகே தேர்ந்தெடுத்தது திமுகவை. பிகே சாமர்த்தியசாலி. வேதியியலில் சொல்வதுபோல் அவர் ஒரு கேட்டலிஸ்ட். ஊர்க்குளத்தில் சிறிதளவாவது தண்ணீர் இருந்தால்தான், அவரால் அதை ‘தீம் பார்க்’ என விற்க முடியும். குளமே இல்லாதவர்களையும், ஊரே இல்லாதவர்களையும் எல்லாம் பிகே கைதூக்கிவிட எத்தனிப்பதுகூட இல்லை. அதுதான் இரண்டு சீசன் ஓடி முடித்த அதிமுகவையும், ஓட்டப் பந்தயத்துக்குக் காலணிகூட இல்லாத கமலையும் விடுத்து, தயாராக இருந்த ஸ்டாலினின் முதுகில் அவர் ஏறியதற்குக் காரணம். இப்போது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் ஸ்டாக் வேல்யூ இன்னும் எகிறியிருக்கும்.

“நூறு ஆண்டு பழைமையான காங்கிரஸ் கட்சி தன் தவறு எங்கே என உணர்ந்து அதைத் திருத்திக்கொள்ள வேண்டும். ‘எங்களுக்குப் போதிய பலமில்லை, மீடியா எங்களுக்குத் துணையில்லை; நீதிமன்றங்கள் எங்களுக்கு ஆதரவாயில்லை’ என்றெல்லாம் புலம்பிக்கொண்டிருந்தால் வெல்ல முடியாது. காங்கிரஸுக்கு அறிவுரை சொல்ல நான் யார். என்னைப் போன்றவர்கள் சொல்வதையெல்லாம் காங்கிரஸ் கேட்கப்போகிறதா என்ன’’ என பிரசாந்த் பேசுவதிலிருந்து, மூழ்கும் கப்பலைத் தூக்க அவர் தயாரில்லை என்பது திட்டவட்டமாகிறது. அல்லது இப்படித்தான் கிழட்டுச் சுறாக்களுக்குத் தூண்டில் வீசப்படுமா என்பது ஏஜென்ஸிக்காரர்களுக்குத்தான் வெளிச்சம்.

“பாஜக மேற்கு வங்கத்தில் நூறு சீட்டுகளைத் தாண்டிவிட்டால், என் தேர்தல் ஆலோசகர் பணியைத் துறந்துவிடுகிறேன்” எனப் பகிரங்கமாக சவால் விட்டார் பிகே. இப்போது, “பாஜக வெல்லவில்லை. அந்த மகிழ்ச்சியில், நான் ஐபேக் நிறுவனத்தை விட்டு விலகுகிறேன். அங்கு இருப்பவர்கள் அந்தப் பணியைத் தொடர்வார்கள். நான் எனக்குப் பிடித்ததைச் சில காலம் செய்யப்போகிறேன்’’ எனப் பேட்டியளித்திருக்கிறார் பிகே. இன்னும் சில மாதங்களில் பஞ்சாபுக்கு சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. காங்கிரஸின் கேப்டன் அமரிந்தர் சிங்குக்கு மீண்டும் ஆலோசகராக இருக்கிறார் பிகே. அமரிந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக மார்ச் மாதமே அவர் நியமிக்கப்பட்டுவிட்டார்.

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்றது சிலப்பதிகாரம். ‘அரசியலில் பிழைக்க பிகே கூட்டு வேண்டும்’ என்கிறது இந்தியத் தேர்தல் ஜனநாயகம்.