தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அன்று பரபரப்பு... இன்று மனநிறைவு!

பெண் அரசியல் பிரபலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் அரசியல் பிரபலங்கள்

இது எங்கள் நேரம்

கொரோனா லாக் டெளன் அனைவரையும் வீட்டிலேயே முடக்கியிருக்கிறது. அரசியல் மேடைகள் மற்றும் செய்தித் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பேச்சுத் திறமையால் தெறிக்கவிட்ட பெண் அரசியல் பிரபலங்கள் பலரும் இப்போது என்ன செய்கிறார்கள்? அவர்களிடமே கேட்கலாமே!

சுப்புலட்சுமி ஜெகதீசன் (துணைப் பொதுச்செயலாளர், தி.மு.க)

சொந்த ஊரான ஈரோட்டில் வசிக்கிறேன். இப்போது சமையல், வீட்டு வேலைகளை நானே கவனித்துக்கொள்கிறேன். மாவட்ட ஆட்சியரிடம் முறையான அனுமதி பெற்று சனிக்கிழமைகளில் மொடக்குறிச்சியிலுள்ள எங்கள் தோட்டப் பணிகளையும் கவனித்துக்கொள்கிறேன். 12 ஏக்கரில் 10 ஏக்கர் முழுவதும் வாழை மரங்கள் பயிரிட்டோம். 600 ரூபாய்க்குப் போக வேண்டிய வாழைத்தார்களை, கொரோனா பாதிப்பால் 150 ரூபாய்க்கும் குறைவாகவே கேட்கிறார்கள். செய்த செலவுகளுக்குக்கூட இந்த விலை கட்டுப்படியாவதில்லை. அரசியல் தளத்தில் இருக்கும் எனக்கே இவ்வளவு ஆதங்கம் என்றால், பாமர விவசாயிகளின் நிலை கூடுதல் மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது.

அன்று பரபரப்பு... இன்று மனநிறைவு!

டி.வி-யில் பிடித்த திரைப்படங்களைப் பார்க்கிறேன். அவ்வப்போது தளபதியுடன் (மு.க.ஸ்டாலின்) கள நிலவரங்கள் குறித்து போனில் பேசுவதுடன், கட்சியினரிடமும் ஆலோசனை செய்வேன். ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலையும், நாஞ்சில் நாடன் உட்பட பிரபல எழுத்தாளர்களின் எழுத்துகளையும் வாசிக்கிறேன்.

எங்கள் மாவட்டத்தில் விவசாயிகள், விசைத்தறி மற்றும் நெசவுத் தொழிலாளர்கள்தாம் அதிகம். எல்லோருமே ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுகுறித்து தினமும் கேள்விப்படுவதால், எந்த நாளுமே இனிதே கழிவதில்லை. இந்த கொரோனா பாதிப்பை விரைவில் வெல்வோம்!

பாலபாரதி (மாநிலக்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

திண்டுக்கல், கதிரனம்பட்டி கிராமத்திலுள்ள அண்ணன் வீட்டில் தங்கியிருக்கிறேன். முன்பு புத்தக வாசிப்புக்கு நேரம் ஒதுக்குவது சவாலாக இருக்கும். இப்போது லெனின் வரலாறு, அரசும் புரட்சியும், எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியவை உட்பட நிறைய புத்தகங்களை நிதானமாகப் படித்து முடித்துள்ளேன்.

ஒல்காவின் ‘மீட்சி’ புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது. ராமாயணத்தில் சீதை கடைசியில் பூமியின் வயிற்றுக்குள் சென்றுவிடுவார். ஏன் ராமனுடன் செல்லவில்லை? இதற்கான காரணத்தை, ஆண்கள் (ராமன், ராவணன்) தங்களுக்குள் இருக்கும் பகையை, பெண்களைக் கொண்டு சரிசெய்ய நினைப்பது குறித்து அழுத்தமாக எழுதியிருப்பார் எழுத்தாளர் ஒல்கா. குறிப்பாகப் பெண்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்க வலியுறுத்துவேன்.

அன்று பரபரப்பு... இன்று மனநிறைவு!

அதிக நேரம் கிடைப்பதால் தினமும் யோகா, இரண்டு மணி நேர நடைப்பயிற்சி, கோடைக்கால உணவான கம்பங்கூழ், கேழ்வரகு என உடல்நலத்துக்கென கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்கிறேன். ஃபேஸ்புக்கில் உலவி உலக நிகழ்ச்சிகளைத் தெரிந்துகொள்கிறேன்.

ஆண்டுதோறும் மே 1 அன்று தொழிலாளர் தினத்தை கம்யூனிஸ்ட் தோழர்கள் அனைவரும் எழுச்சியாகக் கொண்டாடுவோம். இந்த ஆண்டு அதற்கு வாய்ப்பு அமையவில்லை. ஒரு குச்சியில் கொடியை ஏற்றி, அதை வீட்டின் அருகிலிருந்த பெரிய தண்ணீர் தொட்டியின் மீது பொருத்தினோம். பிறகு, கொடிக்கு வணக்கம் செலுத்தி மகிழ்ந்தோம்.

கட்சித் தோழர்களுடன் அவ்வப்போது உரையாடுகிறேன். உதவி கேட்கும் மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்கிறேன்.

விஜயதரணி (சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ் கட்சி)

ப்போது நாகர்கோவிலில் உள்ள என் வீட்டில் இருக்கிறேன். தினந்தோறும் 200 குடும்பங்களுக்கு மருத்துவப் பொருள்கள், மளிகைப் பொருள்களைக் கொடுக்கிறேன். என் தொகுதி மக்கள் சிலர் தெலங்கானா மாநிலத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களுக்காக, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்விடம் போனில் பேசினேன். இப்போது உணவும் தங்குமிடத் தேவைகளும் அந்த மக்களுக்குக் கிடைத்திருக்கின்றன.

எங்கள் மாவட்டத்தில் பிறந்த ஒரு குழந்தையின் உடல் நீல நிறமாக மாற, மேல்சிகிச்சைக்காக குழந்தையைக் கேரளாவுக்கு அனுப்பினோம். அந்தக் குழந்தை குணமடைந்து வீடு திரும்பிய மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது.

அன்று பரபரப்பு... இன்று மனநிறைவு!

மக்களின் அழைப்பு, நிவாரண உதவிகளைச் செய்வது, செய்திகள் பார்ப்பது, வழக்கறிஞராக நிலுவையிலுள்ள வழக்குகளை கவனிப்பது என நேரம் போதவில்லை. ஒருமுறை சமையலின்போது போன்வர, அதில் மும்முரமானதில் பாத்திரம் கருகிவிட்டது. அதனால், நான் இப்போது சமைப்பதில்லை. என் தொகுதி தொடர்ந்து பச்சை மண்டலமாகவே இருப்பதற்குக் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். ஒன்பதாவது படிக்கும் மகனும் என்னுடன் தங்கியிருக்கிறான். முன்பைவிட இப்போதுதான் அவனுடன் அதிக நேரம் செலவிடுகிறேன்.

சி.ஆர்.சரஸ்வதி(செய்தித் தொடர்பாளர், அ.ம.மு.க)

சினிமா ஷூட்டிங் ஆரம்பித்து அரசியல் பயணங்கள் வரை பரபரப்பாக இயங்கி பழக்கப்பட்ட எனக்கு, இப்போது வீட்டுக்குள் முடங்கியிருப்பது சற்றே சோர்வைத் தருகிறது. ஆனாலும், சமையல், வீட்டைச் சுத்தம் செய்வது, செய்திகள் பார்ப்பது, கடவுள் வழிபாடு என நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறேன். வேலையாட்கள் இல்லாததால், எனக்கான தேவைகளை நானே பூர்த்தி செய்துகொள்வதில் ஒரு மனநிறைவு கிடைக்கிறது. நான் குடியிருக்கும் வளாகத்திலேயே மாலை நடைப்பயிற்சி செய்கிறேன். தினமும் சில மணி நேரமாவது வாசிப்புக்கு நேரம் ஒதுக்குகிறேன். த்ரில்லர் திரைப்படங்கள் பார்க்கிறேன்.

அன்று பரபரப்பு... இன்று மனநிறைவு!

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகத் திரைப்பட விழா குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். சக உறுப்பினர்களான ரமேஷ் கண்ணா, ‘நட்டி’ நட்ராஜ், ரவி மரியா உள்ளிட்ட நண்பர்களுடன் திரைப்பட விழாவின் பத்து நாள்களிலும் தவறாமல் ஏராளமான படங்களைப் பார்ப்பேன். இப்போது அந்த நண்பர்களுடன் திரைப்படங்கள் குறித்து போனில் அதிகம் விவாதிக்கிறேன்.

வீட்டில் இரண்டு நாய்களை வளர்க்கிறேன். தவிர, சுற்று வட்டாரத்திலுள்ள ஆதரவற்ற 10 நாய்களுக்கும் 12 பூனைகளுக்கும் தினமும் மதியம், இரவில் உணவு கொடுப்பது வழக்கம். இந்தப் பணிகளில் கூடுதலாக நேரம் செலவிட்டாலும், இதைத் தாண்டி உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ முடியாத வருத்தம் வேதனையை உண்டாக்குகிறது.

நிர்மலா பெரியசாமி (செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க)

ன் வீட்டுக்கு வேலையாட்கள் வருவதில்லை. சமையல், துணி துவைப்பது, சுத்தம் செய்வது என வீட்டு வேலைகள் அனைத்தையும் நானே செய்கிறேன். வெளியுலகத்தில் எவ்வளவு பணிகள் இருந்தாலும், இனியும் முடிந்தவரை வீட்டு வேலைகளில் அதிகம் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறேன். குறைந்த தேவையில் நிறைவாக வாழவும் பழகியிருக்கிறேன்.

அன்று பரபரப்பு... இன்று மனநிறைவு!

ஐந்தாம் வகுப்பில் டாக்டர் மு.வரதராசனின் புத்தகங்களை முழுமையாகப் படித்து விவாதம் செய்யும் அளவுக்கு இலக்கிய வாசிப்பில் ஆர்வம் செலுத்தினேன். வளர்ந்த பிறகு, சித்தர் பாடல்கள் உட்பட ஆன்மிக இலக்கியங்களில் ஆர்வம் திரும்பியது. இப்போது ஓய்வு நேரம் அதிகம் கிடைப்பதால், வீட்டில் உள்ள புத்தகங்கள் போக, ஆன்லைனிலும் நிறைய புத்தகங்கள் வாசிக்கிறேன். திரு.வி.க மற்றும் மறைமலை அடிகளின் படைப்புகள், நாலடியார், சீவக சிந்தாமணி உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்களை மீண்டும் படித்து, ஆழமான அர்த்தம் உணர்கிறேன். தமிழ் சார்ந்த புதிய படைப்பை உருவாக்கவும் ஆயத்தமாகிவருகிறேன். பேச்சாளர்கள் பலரின் வீடியோ உரைகளையும் அதிகம் கேட்கிறேன். தமிழோடு என் பொழுதுகள் கழிகின்றன. தவிர, நண்பர்கள், உறவினர்களிடம் போனில் உரையாடுகிறேன். இதனால் எனக்கு மனச்சோர்வு சிறிதும் ஏற்படுவதில்லை!