அலசல்
Published:Updated:

அதிகாரம்... அந்தரங்கம்! - கேட்டது ஆட்டோகிராப்... எழுதியதோ காதல் கவிதை!

அதிகாரம்... அந்தரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
அதிகாரம்... அந்தரங்கம்

- மாஸ்க் மேன்

“கட்சியின் கொள்கைகளை அவரைப்போல அருமையாகப் பேச முடியாது... அவர் நாவில் நடனமாடும் தமிழுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு!” என்று அந்த வி.ஐ.பி-க்கு எதிர்க்கட்சியினரே புகழாரம் சூட்டுவார்கள். ஆனால், வி.ஐ.பி விரும்புவதோ ரசிகைகள் பட்டாளத்தைத்தான். வயது அறுபதைக் கடந்தும் அவரது ஆசை மட்டும் அடங்கவில்லை.

1970-களின் தொடக்கத்தில் மொழிப்போர் போராட்டத்தில் ஆரம்பித்தது நம் வி.ஐ.பி-யின் அரசியல் பயணம். `கணீர்’ குரலும், அடுக்குமொழிப் பேச்சும் இளைஞர்கள் மத்தியில் அவருக்குத் தனி அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. கூடவே, ஊர்ப் பெயரையும் அடைமொழியாகச் சேர்த்தே அவரை அழைக்கத் தொடங்கியது கட்சி. அதுவே இன்று டெல்லி வரை அவரது அடையாளமாக மாறிப்போனது!

அரசியல் களத்தில் வி.ஐ.பி வளர்ந்துவந்த நேரத்தில், அவர் சார்ந்திருந்த கழகம் எதிர்க்கட்சியாக இருந்தது. கட்சிக்கு இளைஞர்களை ஈர்க்கவேண்டிய நேரம் என்பதால், தலைமை அவரைக் கல்லூரி விழாக்களில் உரையாற்ற அனுப்பியது. மேடைகளில் அவரது உதடுகள் கழகக் கொள்கைகளை கர்ஜிக்க... கண்களோ கல்லூரிப் பூவையர்மீது வட்டமிட்டன. அவரது பேச்சில் மயங்கிய பூவையர் பலரும் ஆட்டோகிராப் கேட்டு அடம்பிடிக்க... நம் வி.ஐ.பி காதல் கவிதையே எழுதித் தந்தார்.

கட்சிக்குள் அப்போதுதான் மகளிரணி மெதுவாக வளர்ந்துவந்தது. அன்றைக்கு மகளிரணியில் கர்நாடக எல்லையிலிருந்து பழம்பெரும் நடிகையின் பெயர்கொண்ட ஒரு பெண்மணி வேகமாக வளர்ந்துவந்தார். ஒருமுறை அந்த மாவட்டத்துக்கு உரையாற்றச் சென்றார் வி.ஐ.பி. பட்டு வேட்டி... பளபளக்கும் சட்டை... கறுப்புக் கண்ணாடி என மைனர் மாப்பிள்ளையாகக் காட்சியளித்த வி.ஐ.பி-யைப் பார்த்த அந்த மகளிரணி நிர்வாகியின் பார்வை அவரிடமே நிலைகொண்டது. வி.ஐ.பி-க்கு இந்த வாய்ப்பு போதாதா... அன்றைய கூட்டத்தில் அவரது பேச்சின் வீச்சு அணையுடைத்த ஆறாகப் பொங்கியது. கொள்கை உரையின் இடையிடையே இன்பச்சுவையூட்டும் நற்றிணையின் சங்கப்பாடல் வரிகளை நயம்பட வீசினார். கூட்டமே வி.ஐ.பி-யின் பேச்சில் லயித்திருந்தாலும், அந்தக் காதல்வரிகள் மட்டும் அந்தப் பெண்ணுக்கானது என்பது இரு மனங்கள் மட்டுமே அறிந்த ரகசியம்!

விசில் சத்தம் பறக்கத் தனது உரையை நிறைவு செய்துவிட்டு கீழே இறங்கும்போது அந்தப் பெண் நிர்வாகியிடம் “கட்சி விஷயமாகப் பேச வேண்டும்... வர முடியுமா?” என்று மென்மையாக அழைப்பு விடுத்தார். அர்த்தம் புரிந்த பெண் நிர்வாகியும் மறுக்காமல் அன்றைய மாலையே அவரைத் தேடி அறைக்குச் சென்றார். அடுத்த இரண்டு நாள்கள் வி.ஐ.பி-யின் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்து ரத்து செய்யப்பட்டன. கதவையே திறக்காமல் இரண்டு நாள்கள் இரவும் பகலுமாகப் பாடமெடுத்தார் நம் வி.ஐ.பி. அப்புறமென்ன... அடுத்து சிலபல ஆண்டுகள் நம் வி.ஐ.பி எங்கு சென்றாலும் கூடவே செல்வார் மகளிரணி நிர்வாகி. வி.ஐ.பி-யின் ஆசியால் கோட்டைக்குள் பேசும் வாய்ப்பும் அந்த மகளிரணி நிர்வாகிக்கு வாய்த்தது.

அதிகாரம்... அந்தரங்கம்! - கேட்டது ஆட்டோகிராப்... எழுதியதோ காதல் கவிதை!

அப்போது கட்சிக்குப் பேச்சாளர்களை உருவாக்க, கட்சித் தலைமை சில பயிற்சி வகுப்புகளை நடத்தியது. அப்படியான ஒரு வகுப்புக்குச் சென்றார் வி.ஐ.பி. `புது’ மாவட்டத்தில் அழகு தமிழில் உரையாற்றினார் அந்த இளம்பெண். உரையை முடித்ததும், வி.ஐ.பி-யிடம் ஆசி வாங்க அருகே சென்று குனிந்தார். பாசமாகத் தலையை வருடியபடியே “உனக்குப் பிரமாதமான எதிர்காலம் இருக்கு” என்று காதுமடலில் உதடு உரசச் சொன்னார் வி.ஐ.பி. அடுத்த மாதமே மாமல்லபுரம் அரசு மாளிகையின் பின்புறமுள்ள கடற்கரையில் கைகோத்து வலம்வந்தது ஜோடி. தென்னை மரங்களிடையே இருவரும் ஊஞ்சல் கட்டி ஆடிய காட்சிகளையெல்லாம் இன்றும் சொல்லிச் சொல்லி வியக்கிறார்கள் காஞ்சி மாவட்டத்தின் கழகக் கண்மணிகள். இன்றைக்கும் கட்சியின் பிரசார முகமாகவே மவுசுடன் வலம்வருகிறார் அந்தப் பெண்மணி!

சீஸனுக்கு சீஸன் டெஸ்ட் மேட்சுகளை நடத்தினாலும், செல்லும் ஊர்களிலெல்லாம் ஒன் டே மேட்ச் ஆடவும் தவறவில்லை வி.ஐ.பி. இப்படிச் செல்லுமிடமெல்லாம் மரத்தைச் சுற்றி டூயட் பாடியதால், கடுப்பான கட்சித் தலைமை இவரை டெல்லிக்குத் தள்ளிவிட்டது. தமிழகத்தின் பருவநிலைக்கே சூடான ஸ்வெட்டர் கேட்பவர், டெல்லி குளிருக்கு சும்மா இருப்பாரா! அங்கும் அடித்தது யோகம். அவைக்குள் இவரது ஆங்கில உரையைக் கேட்ட சுந்தர தெலுங்கு தேசத்து பெண் பிரதிநிதி அப்படியே சொக்கிப்போனார். சாணக்யாபுரி பூங்கா புல்வெளியிலும், இந்தியா கேட் பூந்தோட்டத்திலும் ஜோடிக்கிளிகள் காதல் மொழி பேசி கைகோத்து வலம்வந்ததைப் பொறாமையுடன் பார்த்தார்கள் இவரின் சக டெல்லி பிரதிநிதிகள்!

வி.ஐ.பி-யின் வலையில் மாற்றுக்கட்சியினர் மயங்கிய கதையெல்லாம் நடந்தன. சில வருடங்களுக்கு முன்பு டெல்லிக்குக் காலடி எடுத்துவைத்தார் எதிர்க்கட்சியின் பெண் நிர்வாகி. தாறுமாறாக கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆனதில் மத்திம வயதைக் கடந்தும் மன்மத வானில் சிறகடித்துப் பறந்தன காதல் ஜோடிகள். யார் கண்பட்டதோ இடையிலேயே முட்டிக்கொண்டு பிரிந்தது ஜோடி! அதன் பிறகும் அடங்கவில்லை வி.ஐ.பி. அழகு நிலையம் ஒன்றுக்குச் சென்றவர் அங்கிருந்த யுவதியிடம் மயங்கினார். மயக்கம் தெளிவதற்குள் யுவதியின் தோழியையும் வீழ்த்தினார். தோழிகளுக்குள்ளான யுத்த சத்தத்தில் வி.ஐ.பி-யின் மொத்த மானமும் காற்றில் பறக்கிறது... மனம் தளராத மணவாளனாக இப்போதும் அடுத்த ஜோடியைத் தேடிவருகிறார் வி.ஐ.பி!