
அரசியல் பணி என்பது 24 மணிநேர வேலை.
அரசியல்வாதிகளுக்கு டாக்டர் பட்டம் கிடைப்பது எளிதிலும் எளிது. உண்மையாகவே டாக்டராகவும் இருந்து அரசியல்வாதியாகவும் இருப்பவர்களிடம் சுவாரஸ்யமான அனுபவங்கள் பற்றிக் கேட்டேன்.
டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் (தெலங்கானா ஆளுநர்)
“ஒருமுறை நான் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அதே ரயிலில் பயணித்த பயணி ஒருவருக்கு நெஞ்சுவலி. மருத்துவரைத் தேடிவந்த டிக்கெட் பரிசோதகருக்கு, நான் மருத்துவம் படித்த டாக்டரா அல்லது பிஹெச்.டி டாக்டரா என்று குழப்பம். அதனால் என்னிடம் உதவி கேட்கத் தயங்க... நானே முன்வந்து அவரிடம் பேசி நோயாளியையும் பரிசோதித்து, அடுத்த ஸ்டேஷனிலேயே நோயாளியை மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்லவும் உதவினேன். இப்போது ரயில்வே நிர்வாகம், முன்பதிவு செய்கிறபோதே, ‘மருத்துவம் படித்த டாக்டர்’ என்ற விவரத்தை முன்னரே தெளிவாகப் பதிவு செய்துகொள்கிற முறையை அமல்படுத்திவிட்டது.

கஜா புயலின்போது, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கச் சென்றேன். ஆனால், அங்கே சென்றபிறகுதான் அம்மக்களுக்கு நிவாரணம் மட்டுமன்றி மருத்துவ உதவியும் தேவையாயிருந்ததை அறிந்தேன். எனவே, உடனடியாக மருத்துவ முகாம்களை அமைத்து அங்கேயே 13 நாள்கள் தங்கியிருந்து அம்மக்களைப் பரிசோதித்து சிகிச்சை அளித்தேன். அதாவது, ஓர் அரசியல்வாதியாகப் பார்க்கச் சென்ற நான், அங்கே சென்றபிறகு மருத்துவராக மாறிப் போனேன்.
இதேபோல், 2015 சென்னைப் பெரு வெள்ளத்தின்போது, ஈக்காட்டுத் தாங்கல் பகுதியில் கட்சி சார்பிலான நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென வலி வந்துவிட்டது. சம்பவ இடத்திலிருந்த நான் உடனே அந்தப் பெண்ணைப் பரிசோதித்துப் பார்த்தேன். எந்நேரத்திலும் பிரசவமாகலாம் என்ற சிக்கலான சூழ்நிலை அது. எனவே, உடனடியாக அந்தப் பெண்ணை ஒரு படகில் ஏற்றி மெயின் ரோட்டுக்கு அழைத்துச் சென்று, என் காரில் ஏற்றி மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றேன்!’’
ஜெயவர்தன் (அ.தி.மு.க) தென்சென்னைத் தொகுதி முன்னாள் எம்.பி
‘`அரசியல் பணி என்பது 24 மணிநேர வேலை. எனவே, 2014-ல் தென் சென்னைத் தொகுதி எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டதுமே மருத்துவப் பணியை நிறுத்திவிட்டேன். ஆனாலும் நடைமுறையில் ஆபத்தான காலகட்டங்களில் பொதுமக்களுக்குத் தேவைப்படும் மருத்துவ ஆலோசனை மற்றும் உதவி செய்வதில் ஒரு மருத்துவராக என்னுடைய பங்களிப்பை இப்போதும் செய்து வருகிறேன்.

போனவருடம் கடலூர் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு இரவு 11 மணிவாக்கில் காரில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தேன். சென்னை ஹாரிங்டன் ரோட்டில், சாலையை அடைத்துக்கொண்டு மக்கள் கூட்டமாக நின்றிருந்தனர். காரிலிருந்து இறங்கிப் பார்த்தால், இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் விபத்தில் அடிபட்டு மயங்கிக்கிடந்தார். உடனே கூட்டத்தினரை விலக்கி, காற்றோட்டம் வரச் செய்தேன். பொதுவாக, இதுபோன்ற விபத்து சம்பவங்களில், உதவி செய்வதற்கு வரும் பொது மக்களும்கூட தங்கள் அறியாமையால் சில தவறுகளைச் செய்துவிடுவார்கள். அதாவது, பாதிக்கப்பட்ட நபரின் முகத்தில் தண்ணீர் தெளிப்பது, பாதுகாப்பற்ற முறையில் மருத்துவ மனைக்குத் தூக்கிச் செல்வது உள்ளிட்ட விஷயங்கள் கூடுதல் ஆபத்தை விளைவித்துவிடும்.
ஆனால், ஒரு மருத்துவராக இந்த முதலுதவி முறைகள் தெரிந்திருந்த காரணத்தால், அன்றைய தினம் அந்த நபரைப் பாதுகாப்பான முறையில் உட்காரவைத்தேன். ஏனெனில், மூக்கில் ரத்தக் கசிவு இருந்து, படுத்த நிலையிலேயே நபர் இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த நபரை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தேன்.
எம்.பி-யாக இருந்தபோது, சென்னையிலிருந்து டெல்லிக்கு அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்வதுண்டு. ஒருமுறை சென்னையிலிருந்து விமானம் கிளம்பிய ஒரு மணி நேரத்திலேயே வயதான நபர் ஒருவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுவிட்டது. உடனடியாக அந்த முதியவரின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து மாத்திரை வழங்கியதோடு செயற்கை சுவாசம் அளித்து ஆபத்திலிருந்து காப்பாற்றினேன். பின்னர் விமானம் டெல்லியில் தரையிறங்கியதும், அந்த நபரை பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கடந்த வருடம் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களிடையே இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசியதோடு ‘டாக்டர் ஜெயவர்தனை மக்களவை எம்.பி-யாக்கினால், உங்களுக்காகவும் ஓடோடி வந்து உழைப்பார்’ என்று பாராட்டிப் பேசி வாக்கு சேகரித்தது மகிழ்ச்சியாக இருந்தது.’’
டாக்டர் செந்தில்குமார் (தி.மு.க)
தருமபுரித் தொகுதி மக்களவை உறுப்பினர்
‘`தருமபுரியில் இப்போதும் ஸ்கேன் சென்டர் நடத்திவருகிறேன். மருத்துவத்துறையில் நான் ரேடியாலஜிஸ்ட் (கதிரியக்க நிபுணர்) ஆக இருப்பது அரசியல் வாழ்க்கையில் பெரிய சிரமத்தை ஏற்படுத்தவில்லை. அல்ட்ரா சவுண்ட் மாதிரியான பரிசோதனையைத்தான் நானே நேரடியாக இருந்து செய்யவேண்டியதாக இருக்கும். மற்றபடி சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ அறிக்கைகளைக் கணினி வழியே நான் இருந்த இடத்திலிருந்தே பார்த்து ஆலோசனை வழங்கிட முடியும்.
முன்பெல்லாம் நட்பு வட்டத்திலிருந்து நிறையபேர் தங்களது ஸ்கேன் அறிக்கையை அனுப்பிவைத்து ஆலோசனை கேட்பார்கள்.

எம்.பி ஆனபிறகு பொதுமக்களும் மெயில், செல்போன் மெசெஜ் வழியாக அறிக்கைகளை அனுப்பிவைத்து ஆலோசனை கேட்கிறார்கள்.
நமக்கு வந்திருக்கும் நோய்க்கு எந்தவிதமான மருத்துவம் - மருத்துவரைப் பார்க்கவேண்டும் என்ற விவரம் தெரியாமலேயே நிறையபேர் நாள்களைக் கடத்தி ஆபத்தான கட்டத்துக்கு வந்துவிடக்கூடிய சூழல்கள் இருக்கின்றன. எனவே, என் அரசியல் பணிகளுக்கிடையிலும் உரிய நேரத்தில் இம்மாதிரியான ஆலோசனையை வழங்குவதேகூட மனநிறைவாகத்தான் இருக்கிறது.
இதுதவிர, என் தொகுதிக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து மருத்துவ உதவி கேட்டு வரும் மனுக்களை ஆராய்ந்து தகுதியானவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதி கிடைக்கச் செய்ய உதவுகிறேன். மற்ற தொகுதி மக்களும்கூட இதுபோன்ற மனுக்களை எனக்கு அனுப்பிவைத்து உதவி கேட்கும்போது, அவர்களது மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்து ஆலோசனை வழங்குவதோடு, சிகிச்சை உதவிக்கான அரசுத் திட்டங்களில் பயன்பெறுவது குறித்த வழிகாட்டுதலையும் கொடுத்து வருகிறேன்.
நாடாளுமன்ற வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவு இந்த முறை, மக்களவையில் மட்டும் மொத்தம் 42 மருத்துவர்கள் துறை சார்ந்த நிபுணர்களாக இருக்கிறார்கள். எனவே, இவர்கள் அனைவரையும் ஒருங் கிணைத்து ஒரு குழு அமைத்து கூட்டத்தொடர்களின்போது மருத்துவ முகாம் நடத்தலாம் என்ற ஆலோ சனையை நாடாளுமன்ற அமைச் சகத்தில் வழங்கியிருக்கிறோம்!’’
டாக்டர் ஏ.செல்லக்குமார் (காங்கிரஸ்)
கிருஷ்ணகிரித் தொகுதி மக்களவை உறுப்பினர்
‘`1987-ல் காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவர் அணித் தலைவராகப் பொறுப்பேற்றதுமே என்னுடைய மருத்துவச் சேவையை முழுவதுமாக நிறுத்திவிட்டேன். நேரடியாகச் சிகிச்சை அளிப்பதைத்தான் நிறுத்திவிட்டேனே தவிர, இப்போதும் சிற்சில மருத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்காக என்னை அணுகுப வர்களுக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்துதான் வருகிறேன். இப்போதுகூட பக்கவாத பாதிப்புகொண்ட நபர் ஒருவர் என் வீட்டுக்கே வந்து ஸ்கேன் ரிப்போர்ட்களைக் கொடுத்து ஆலோசனை கேட்டார்.
ஆரம்பக்காலத்தில் கட்சிக்கூட்டங்களில் நான் கலந்துகொள்கிறபோது, ‘டாக்டர் இருக்கிறார், டாக்டரிடம் கேளுங்கள்...’ என்றெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை ‘டாக்டர்’ என்ற சொல்லைக் கட்சிக்காரர்கள் உபயோகிப்பார்கள். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஜி.கே.மூப்பனார், ஒருமுறை ‘என்ன, எல்லோரும் டாக்டர் டாக்டர் என்று சொல்கிறீர்கள். டாக்டருக்குப் படித்தால் மட்டும் போதுமா.... ப்ராக்டிஸும் செய்யவேண்டும். செல்லக்குமார் இப்போது முழு நேரமாக அரசியலில்தான் ப்ராக்டிஸ் செய்துகொண்டிருக்கிறார். எனவே அவரை யாரும் டாக்டர் என்று சொல்லக்கூடாது’ என்று சொன்னார். இதன்பிறகும்கூட கட்சிக்கூட்டங்களில் என்னைப் பார்க்கும்போதெல்லாம் இதைக் கிண்டலாகச் சொல்வார்.

இப்போது கொரோனா நிவாரணப் பணிகளுக்காக கிராமப்பகுதிகளுக்குச் சென்றபோது, மக்களிடையே கொரோனாத் தீவிரம் குறித்தும் பாதுகாப்பு விஷயங்கள் குறித்தும் பேசினேன். அப்போது என் அருகில் இருந்தவர்கள், ‘அரசியல்வாதிதானே சொல்கிறார் என்று அலட்சியம் செய்துவிடாதீர்கள். இவர் டாக்டரும்கூட... அதனால் இவர் சொல்வதைக் கேட்டு கவனமாக நடந்துகொள்ளுங்கள்’ என்று மக்களிடம் எடுத்துச் சொன்னார்கள். கால மாற்றத்தை நினைத்து நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்!’’
டாக்டர் மகேந்திரன் மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர்
‘`மருத்துவப் பணியில் எனக்கு இது 30-வது வருடம். போனவருடம் கடலூரில் கட்சிக் கூட்டத்தில் தலைவரோடு (கமல்ஹாசன்) கலந்துகொண்டேன். அப்போது கூட்டத்திலிருந்த ஓர் இளம்பெண் திடீரென மயக்கமடைந்து விழுந்துவிட்டார். அந்தப் பெண்ணின் வயது 12-லிருந்து 17-க்குள்தான் இருக்கும். பொதுவாக இந்த வயதில் உள்ள ஆண் - பெண் குழந்தைகளுக்கு சில சமயங்களில் திடீரென அதீத உற்சாகம் அல்லது கவலை ஏற்படும்போது அவர்களது நாடித்துடிப்பும் ரத்த அழுத்தமும் குறைந்து மயக்கமடைவதுண்டு. மருத்துவத் துறையில் இதனை ‘Vasovagal syncope’ என்பார்கள்.

கூட்டத்திலிருந்தவர்களோ அந்தப் பெண்ணுக்கு வலிப்பு வந்துவிட்டது என்று நினைத்து, பதற்றத்தோடு சாவியைத் தேடுவதும் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புவதுமான முயற்சிகளைச் செய்தனர். அதையெல்லாம் தடுத்து நிறுத்திய நான் அந்தப் பெண்ணை சமதளமாகப் படுக்கவைத்து அவரது காலை மட்டும் உயர்த்திப் பிடித்து, கெண்டைக்கால் தசையை மசாஜ் செய்தேன். 2 நிமிடத்தில் ரத்த ஓட்டம் சீராகி, அந்தப் பெண் கண் விழித்துவிட்டார். பின்னர் அந்தப் பெண்ணுக்குத் தைரியம் சொல்லி, கால் தசைகளுக்கான உடற்பயிற்சி முறைகளைச் செய்துவரச் சொல்லியும் அறிவுறுத்தினேன். ஓர் அரசியல் கூட்டத்தில், மருத்துவராக நான் செயல்பட்ட அந்த நிமிடங்கள் மறக்க முடியாத மகிழ்ச்சித் தருணம்!’’