Published:Updated:

விவாதிக்கப்பட்ட காஷ்மீர், டெல்லி வன்முறைகள்... மறக்கடிக்கப்பட்ட 10 பிரச்னைகள் - ஒரு பார்வை!

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகிய விவகாரங்களையொட்டி டெல்லியில் ஏற்பட்ட வன்முறை ஆகியவற்றிற்கு இடையே, இந்தியாவில் தலையாயப் பிரச்னைகளாகப் பார்க்கப்படும் 10 பிரச்னைகள் சத்தமின்றி கிடக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், அது இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் நான்கு பேர் உட்பட பல அரசியல் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து அங்கு இன்டர்நெட் வசதி முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. மீண்டும் கடந்த ஜனவரி 25-ம் தேதிதான் காஷ்மீரில் 2G இணைய சேவை வழங்கப்பட்டது. அதன் பிறகு, கடந்த ஏழு மாதங்களில் மார்ச் 4-ம் தேதிதான் சமூகவலைதளங்களை காஷ்மீர் மக்கள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தேசிய அளவில் பெரியதாக விவாதிக்கப்படும் விவகாரமாகவும் இருந்து வந்தது. இதனால், நாட்டின் பொருளாதாரம், வேலையின்மை போன்ற முக்கியமான விவகாரங்கள் விவாதக் களத்திலேயே இல்லை. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதால், இன்றுவரை அதுதான் மிகப்பெரிய பிரச்னையாக விவாதிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டெல்லி ஷஹீன் பாக்கில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, வடகிழக்கு டெல்லியில் கடந்த வாரம் சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது. அதற்கு எதிரான கபில் மிஸ்ரா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பேசிய வெறுப்புப் பேச்சுகள், டெல்லியில் மிகப்பெரிய வன்முறை ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தன. அந்த வன்முறையில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என இரு தரப்புகளையும் சேர்ந்த சுமார் 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பெண்கள் போராட்டம்
பெண்கள் போராட்டம்

டெல்லி வன்முறை தொடர்பான விவாதங்கள் ஊடகங்களில் இன்றுவரை விவாதப்பொருளாக இருந்துவருகிறது. அதிகரித்துவரும் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, வேளாண் பிரச்னைகள் உட்பட பல முக்கியமான பிரச்னைகள் மறக்கடிக்கப்பட்டுள்ளன.

1. `5 ட்ரில்லியன் பொருளாதாரம்!’

2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்தார் நரேந்திர மோடி. அப்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் என்பது 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரமாக வளர்ச்சியடையும் என்று அவர் உறுதியளித்தார். ஆனால், `ஜி.டி.பி எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கவலைப்படும் அளவுக்கு சரிந்துள்ள நிலையில், 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பொருளாதார வளர்ச்சி எப்படி சாத்தியம்?” என்று பொருளாதார வல்லுநர்கள் உட்பட பலரும் கேள்வி எழுப்பினர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அந்த நேரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ``5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் வளர்ச்சி சாத்தியமா என்று கேள்வி எழுப்புபவர்கள், இந்தியர்களின் திறன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். துணிச்சல், புதிய சாத்தியக்கூறுகள், இந்தியத் தாய்க்கு உழைக்கும் விதம், புதிய இந்தியாவுக்கான கனவு என அனைத்தையும் கடைப்பிடித்தால், 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் வளர்ச்சி நிச்சயம் சாத்தியமாகும்” என்றார். இப்படி பிரதமர் மோடி பேசியதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களும் பா.ஜ.க தலைவர்களும் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி குறித்து சத்தமாகப் பேசத் தொடங்கினர். ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரம் எழுந்த பிறகு, 5 ட்ரில்லியன் பொருளாதாரம் பற்றிய பேச்சு காணாமல்போய்விட்டது.

2. விவசாயம்

இந்தியாவில் வேளாண்துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உரம், பூச்சிக்கொல்லி மற்றும் இடுபொருள்களின் விலைகள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பல மடங்கு உயர்த்தப்பட்டதால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். காங்கிரஸ் ஆட்சியில் உயர்த்தப்பட்ட அந்த விலைகள், பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு குறைக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காதது, கடன் போன்ற பிரச்னைகளில் விவசாயிகள் சிக்கித்தவிக்கிறார்கள். இத்தகைய காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்வது பா.ஜ.க ஆட்சியிலும் தொடர் கதையாகிவருகிறது.

விவசாயி
விவசாயி

இந்நிலையில், மத்திய அரசு இந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். ``எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அளித்த பரிந்துரையின்படி வேளாண் விளைபொருள்களுக்கான விலையை நிர்ணயிக்க வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு நிராகரித்துள்ளது” என்று குற்றம்சாட்டும் விவசாயிகள், அதற்காகப் போராட்டங்களையும் நடத்தியுள்ளன. ஆனாலும், விவசாயிகளின் குரல் எடுபடவில்லை.

3. ஸ்டாண்ட் அப் இந்தியா

பட்டியலின, பழங்குடியின இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் புதிய தொழில் தொடங்குவதற்கு ரூ.1 கோடி வரை கடன் வழங்கும் திட்டம்தான், `ஸ்டாண்ட் அப் இந்தியா'. 2016-ம் ஆண்டு இத்திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய மோடி, ``கடவுள் நம் எல்லோருக்கும் பாரபட்சமின்றி திறமைகளை அளித்துள்ளார். ஒரு தரப்பினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. தலித், பழங்குடியின மக்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு நல்ல தொடக்கத்தையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் `ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

Representational Image
Representational Image

மேலும், ``இந்தத் திட்டத்தில் பட்டியலின, பழங்குடியின இளைஞர்களும் பெண்களும் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை தொழில் கடன் பெறலாம். இதன்மூலம் வேலைவாய்ப்பைத் தேடுவோர், வேலை வழங்குபவர்களாக மாறுவார்கள். நாட்டில் புதிதாக 2.5 கோடி தொழிலதிபர்கள் உருவாவார்கள். இத்திட்டத்தால் பட்டியலின, பழங்குடியினரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்” என்றார் பிரதமர் மோடி. ஆனால், இத்திட்டத்தின் மூலம் எத்தனை பேருக்கு கடன் வழங்கப்பட்டது, எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பது பற்றிய சரியான புள்ளிவிவரங்கள் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவந்தன. ஆளும் தரப்பிடமிருந்தும் இதற்கு வலுவான பதில் முன்வைக்கப்படவில்லை.

4. வேலையின்மை விவகாரம்

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. இது குறித்து கடந்த பல மாதங்களாகவே செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் அதிக அளவில் இருப்பதாக சமீபத்தில் ஒரு புள்ளிவிவரம் வெளியானது. இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் சி.எம்.ஐ.இ (Centre for Monitoring Indian Economy) என்ற அமைப்பின் அறிக்கை மார்ச் 3-ம் தேதி வெளியானது.

தொழிற்சாலை
தொழிற்சாலை

அந்த அறிக்கையில், ``இந்தியாவில் வேலையின்மை கடந்த ஆண்டு மார்ச் மாதம், நகர்ப்புறத்தில் 7.72 சதவிகிதமாகவும் கிராமப்புறத்தில் 6.15 சதவிகிதமாகவும் இருந்தது. இது, இந்த மாதம் நகர்ப்புறத்தில் 8.65 சதவிகிதமாகவும் கிராமப்புறத்தில் 7.37 சதவிகிதமாகவும் உள்ளது. கடந்த நான்கு மாதங்களில் பிப்ரவரி மாதம் வேலையின்மை 7.78 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் சர்வதேச பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. இதன் தாக்கம், இந்திய பொருளாதாரத்திலும் பிரதிபலித்துள்ளது. பொருளாதார மந்த நிலை தொடருமானால், வேலையின்மை மேலும் அதிகரிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. ``ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு புதிதாக வேலை வழங்குவோம்'' என்று 2014-ம் ஆண்டு வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோல்வியடைந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. தற்போதைய அரசியல் சூழலில், வேலையின்மை பிரச்னை விவாதத்துக்குரிய ஒன்றாக கருதப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

5. சிறு - குறு தொழில் பாதிப்புகள்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு தொழில்களுக்கு முக்கியப் பங்குண்டு. இந்தியாவின் ஜி.டி.பி-யில் 30 சதவிகிதம் அளவுக்கு சிறு, குறு தொழில்கள் பங்களிப்பை ஆற்றுகின்றன. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சிறு, குறு தொழில்கள் பல்வேறு காரணங்களால் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி போன்றவையே இதற்குக் காரணம் என்று தொழில்துறையினர் குற்றச்சாட்டுகிறார்கள்.

சிறுதொழில்
சிறுதொழில்

இந்நிலையில், சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதிப்புகளிலிருந்து மீட்டெடுப்பதற்கு பல அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். ஆனாலும், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் நிலை மோசமாக இருப்பதாகவே அந்தத் துறையினர் சொல்கிறார்கள். இந்தப் பிரச்னை குறித்து பெரிய விவாதங்கள் இல்லை என்பது கவலைக்குரியது.

6. நீளும் நீட் விவகாரம்

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது அ.தி.மு.க, தி.மு.க உட்பட பெரும்பான்மை கட்சிகளின் நிலைப்பாடாக இருந்துவருகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு அவர் கடிதம் எழுதினார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

மாணவிகள்
மாணவிகள்
ஜூ.வி பைட்ஸ்: சின்னத்தாய் அவள், நீட் வைரஸும் அதிரவைக்கும் `36' பேரும், ஆர்.டி.ஐ கொலைகள்!

மேலும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று கோரி தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த மசோதாவை 2017-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியே திருப்பி அனுப்பிவிட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார். மசோதா திருப்பி அனுப்பப்பட்டது என்ற தகவல் மாநில அரசுக்கே தெரியவில்லை என்பது பெரும் அதிர்ச்சியுடன் பார்க்கப்பட்டது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இந்த விவகாரம் இன்னும் நீறுபூத்த நெருப்பாகவே இருந்துவருகிறது.

7. தேசிய கல்விக்கொள்கை

2014-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, தேசிய கல்வி கொள்கைக்கான பரிந்துரைகளை வழங்க மத்திய அரசின் முன்னாள் செயலாளர், டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தேசிய கல்விக்கொள்கை வரைவைத் தாக்கல் செய்தது. அதற்கு பரவலான எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து, இஸ்ரோவின் முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கன் தலைமையில் வேறொரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 484 பக்கங்கள் கொண்ட வரைவு தேசிய கல்வி கொள்கையைக் கடந்த ஆண்டு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.

தேசிய கல்விக்கொள்கை
தேசிய கல்விக்கொள்கை

அந்த அறிக்கையில் 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசால் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது உட்பட பல பரிந்துரைகள் இடம்பெற்றன. அவற்றுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த வரைவு அறிக்கையை எதிர்க்கும் கல்வியாளர்களும் அமைப்புகளும் நாடு முழுவதும் கருத்தரங்குகளையும் விவாதங்களையும் நடத்திவந்தனர். சி.ஏ.ஏ விவகாரம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்த பிறகு, தேசிய கல்விக்கொள்கை பிரச்னை அமுங்கிவிட்டது.

8. சர்வமும் தனியார்மயம்

பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்பது காங்கிரஸ் ஆட்சிக்கு மட்டுமல்ல, பா.ஜ.க ஆட்சிக்கும் தாரக மந்திரமாக இருக்கிறது. ரயில்வே உள்ளிட்ட அரசுத் துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பது என்பதில் நரேந்திர மோடி அரசு தீவிரம் காட்டிவருகிறது.

Representational Image
Representational Image

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருவதைச் சரிசெய்வதற்கான திட்டங்களை வகுக்காமல், இந்தத் தேசத்தின் சொத்துகளான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவார்க்கும் வேலையை மட்டுமே பா.ஜ.க அரசு செய்துவருகிறது என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. தற்போதைய அரசியல் சூழலில், இதற்கெதிராக ஒலிக்கும் குரல்கள் பொதுவெளியில் கேட்கவில்லை.

சாமான்யர்களின் ஆதரவு... பெர்னி சாண்டர்ஸ் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஆவாரா?

9. விலைவாசி உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் உணவுப்பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. பெட்ரோல், டீசல் விலைகளும் உயர்ந்துள்ளன. சமீபத்தில், சமையலுக்கு அத்தியாவசியமான வெங்காயத்தின் விலை உயர்வு இந்திய மக்களைக் கதறவைத்தது.

Representational Image
Representational Image

வெங்காயம் மட்டுமல்லாமல், பெரும்பாலான காய்கறிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்தன. இந்த விலை உயர்வு தற்போது ஓரளவுக்கு குறைந்திருந்தாலும் சகஜநிலைக்கு வரவில்லை.

10. பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

இந்தியாவில் பெண்களின் நிலை எந்தளவுக்கு மோசமாக, கொடூரமாக இருக்கிறது என்பதற்கு மத்திய அரசின் என்.சி.ஆர்.பி வெளியிட்டுள்ள புள்ளி விவரமே முக்கியமான ஆதாரமாக இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார் என்ற அதிர்ச்சிகரமான புள்ளி விவரம் என்.சி.ஆர்.பி அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

வன்முறை
வன்முறை

இத்தகைய புள்ளி விவரங்கள் என்.சி.ஆர்.பி-யால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும். ஆனால், இந்தப் புள்ளிவிவரம் மிகவும் தாமதப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், சில விவரங்களும் அதில் காணாமல் போயிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த விவரங்கள் கடந்த ஜனவரியில் வெளியானது. ஆனால், இது பற்றிய விவாதமே நடக்கவில்லை.

அடுத்த கட்டுரைக்கு