Published:Updated:

``இதெல்லாம் மக்களின் வரிப்பணம் இல்லையா?'' - ரவீந்திரநாத் குமாருக்கு பத்து கேள்விகள்!

எஸ்.பி.ஜி திருத்த மசோதாவை ஆதரித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரிடம் எழுப்ப 10 கேள்விகள் இருக்கின்றன.

கறுப்புப் பூனை பாதுகாப்பில் ஜெயலலிதா
கறுப்புப் பூனை பாதுகாப்பில் ஜெயலலிதா ( விகடன் )

1984-ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் பிரதமருக்குத் தனியாக ஒரு பாதுகாப்புப் படை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, சிறப்பு பாதுகாப்புப் படையை (Special Protection - SPG) உருவாக்க 1988-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியது. இதன்படி பிரதமருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, எஸ்.பி.ஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார்கள். பிரதமர் குடும்பம் தவிர முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தினருக்கும் எஸ்.பி.ஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டன. அதன்படிதான் ராஜீவ்காந்தியின் மனைவி சோனியா காந்தி, அவரின் பிள்ளைகள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் 1991-ம் ஆண்டிலிருந்து எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு, சோனியா குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பும் கடந்த ஆகஸ்டு மாதம் திரும்பப் பெறப்பட்டது.

பன்னீருடன் ரவீந்திரநாத் குமார்..
பன்னீருடன் ரவீந்திரநாத் குமார்..
விகடன்

எஸ்.பி.ஜி உருவாக்கப்படுவதற்கு முன்பே தேசியப் பாதுகாப்புப் படை என்கிற (National Security Guard) என்கிற என்.எஸ்.ஜி (N.S.G) படையை 1984-ம் ஆண்டு உருவாக்கினார்கள். அதிகரித்துவரும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு இந்த என்.எஸ்.ஜி படையை ஏற்படுத்தினார்கள். இவர்கள் வி.வி.ஐ.பி-களின் பாதுகாப்பையும் ஏற்றுக்கொண்டார்கள். இவர்களைக் கறுப்புப் பூனை படை என்றும் அழைத்தார்கள். மாயாவதி, கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோருக்குக் கறுப்புப் பூனை படை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தன.

மோடிக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு
மோடிக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு

மன்மோகன் சிங், சோனியா குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெற்றதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. எஸ்.பி.ஜி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தபோது தி.மு.க எம்.பி ஆ.ராசா, ``எஸ்.பி.ஜி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதை, மறு ஆய்வு செய்ய வேண்டும்'' என்றார். ஆனால், அ.தி.மு.க-வின் ஒரே மக்களவை எம்.பி-யான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், எஸ்.பி.ஜி பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தார்.

``எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய தனி நபர்களின் எண்ணிக்கை சாத்தியமானதாக இல்லை. இதனால், எஸ்.பி.ஜி-யின் வளங்கள், பயிற்சி மற்றும் உள்கட்டமைப்புகளில் கடுமையான தட்டுப்பாடுகள் ஏற்படும். எஸ்.பி.ஜி ரத்து நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர். `இது பழிவாங்கும் நடவடிக்கை' என்கிறார்கள். அது உண்மையல்ல... சரியான மறு ஆய்வுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்குவதற்கான செலவு கடந்த காலங்களில் அதிகரித்திருக்கிறது.

கறுப்புப் பூனைகள்
கறுப்புப் பூனைகள்
விகடன்

411 கோடி ரூபாயிலிருந்து 535 கோடியாக அந்த நிதி உயர்ந்திருக்கிறது. எஸ்.பி.ஜி திருத்த மசோதாவால் அந்த நிதி வேறு சில நல்ல திட்டங்களுக்குத் திருப்பிவிடப்படும். செலவை மனதில் வைத்து இந்த மசோதாவை ஆதரிக்கிறேன்'' எனப் பேசியிருக்கிறார் ரவீந்திரநாத் குமார்.

ரவீந்திரநாத் உரை
ரவீந்திரநாத் உரை
`நடக்குற விஷயங்கள கதைக்கச் சொல்லுங்கோ’ - வைரலாகும் பிரபாகரன் பேசிய வீடியோ, எப்போது எடுக்கப்பட்டது?

SPG மீது பொருளாதார நலன் கருதி இவ்வளவு பரிவைக் காட்டியிருக்கும் ரவீந்திரநாத் குமாரிடம் எழுப்ப 10 கேள்விகள் இருக்கின்றன!

1. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, விடுதலைப் புலிகளால் சோனியா குடும்பத்துக்கு ஆபத்து இருந்தது எனச் சொல்லப்பட்டது போலவே ஜெயலலிதாவுக்கும் ஆபத்து எனச் சொல்லி அவருக்குக் கறுப்புப் பூனை பாதுகாப்பைப் பெற்றார்கள். 1991 முதல் ஜெயலலிதா இறக்கும் வரையில் அவருக்கு கறுப்புப் பூனை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் அவருக்கு வழங்கப்பட்ட இந்தப் பாதுகாப்பு தேவையில்லாத செலவுதானே? அப்படித்தானே ரவீந்திரநாத்?

கறுப்புப் பூனைகளுடன் ஜெ.
கறுப்புப் பூனைகளுடன் ஜெ.
விகடன்

2. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. உங்கள் தந்தை பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தி, தனி அணியாகப் பிரிந்து சென்றார். இரண்டு அணியினருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் அரங்கேறின. கல்வீச்சு தாக்குதல்கள் நடந்தன. இதற்காக மோடி அரசு, பன்னீர் செல்வத்துக்கு `ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கியது. `அரசு நிதி விரயமாகிறதே' எனச் சொல்லி அதை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கலாமே?

3. தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட சென்னை துறைமுகம் டு மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் முடக்கியதால் பல ஆயிரம் கோடி இழப்பு. திட்டத்துக்காகப் போடப்பட்ட தூண்கள் மட்டும் நிராயுதபாணியாக இன்றும் நின்றுகொண்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தை முடக்கிய நிதியை விரயமாக்கிய ஜெயலலிதாவின் செயலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

பன்னீர்செல்வம் வீட்டுக்கு மத்திய மத்திய போலீஸ் பாதுகாப்பு
பன்னீர்செல்வம் வீட்டுக்கு மத்திய மத்திய போலீஸ் பாதுகாப்பு

4. கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகத்தை வீம்புக்காக மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றியதால் 76.04 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது. மக்களின் வரிப்பணம் இப்படி விரயமாக்கப்பட்டபோது நீங்கள் எங்கே போனீர்கள்?

5. கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தில் முறைகேடு எனச் சொல்லி நீதிபதி ரகுபதி விசாரணை ஆணையத்தை ஜெயலலிதா நியமித்தார். அந்த விசாரணை அறிக்கை கடைசி வரையில் வரவில்லை. ஆணையமும் கலைக்கப்பட்டுவிட்டது. மூன்று ஆண்டுகள் செயல்படாத ரகுபதி ஆணையத்துக்கு மொத்தமாக 4.11 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் மக்களின் வரிப்பணம் இல்லையா ரவீந்திரநாத் குமார்?

6. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், `நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ விளம்பரத்துக்குக் கொட்டப்பட்ட அரசு கரன்சி 29 கோடி ரூபாய். நான்காண்டு சாதனை விளம்பரச் செலவு - 19.99 கோடி ரூபாய். அந்தப் பணத்தை எல்லாம் நல்ல திட்டங்களுக்குத் திருப்பி இருக்கலாமே. அதை ஏன் செய்யவில்லை... அதை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை?

புதிய தலைமைச் செயலகம்
புதிய தலைமைச் செயலகம்

7. புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாக மாற்றப்பட்ட பிறகு, அதை ஜெயலலிதா நேரில் போய்த் திறக்கவில்லை. வீடியோ கான்பரன்ஸிங் மூலம்தான் திறந்து வைத்தார். அந்தத் திறப்பு விழா விளம்பரத்துக்கு 1.74 கோடி ரூபாயைத் தமிழக அரசு கஜானாவில் இருந்துதான் தரப்பட்டது. இது வீண் செலவு இல்லையா?

8. சென்னை வேப்பேரியில் கட்டப்பட்ட புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகக் கட்டடத் திறப்பு விழாவுக்கு விளம்பரச் செலவாக மட்டும் 71.94 லட்சம் ரூபாயை உங்கள் தலைவி செலவு செய்தாரே... அதை ஏன் கண்டிக்கவில்லை?

கருணாநிதியுடன் கறுப்புப் பூனைகள்...
கருணாநிதியுடன் கறுப்புப் பூனைகள்...
விகடன்

9. ``பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய தனி நபர்களின் எண்ணிக்கை சாத்தியமானதாக இல்லை'' என்கிறீர்கள். பாதுகாப்பு அளிக்க வேண்டிய நபர்களின் எண்ணிக்கைக்குள்தானே உங்கள் தலைவியும் இருந்தார். அப்படியென்றால் ஜெயலலிதாவுக்கு அளித்த பாதுகாப்பு தேவையற்றது என்கிறீர்களா?

விளம்பரம்
விளம்பரம்

10. ``செலவை மனதில் வைத்து இந்த மசோதாவை ஆதரிக்கிறேன்'' என்கிறீர்கள். உங்கள் அப்பா ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா அமைச்சரவையில் நிதி அமைச்சராகத்தானே இருந்தார். அப்போது மக்களின் வரிப்பணம் கண்ணும் கருத்துமாக ஒரு ரூபாய்கூட வீணாகாமல் செலவழித்திருக்கலாமே ஏன் செய்யவில்லை?