Published:Updated:

25 நாள்களில் 10 தொழிலாளர்கள் மரணம்! - தெலங்கானாவில் தொடரும் போக்குவரத்து வேலை நிறுத்தம்

தெலங்கானாவில் வேலை இழந்த போக்குவரத்து ஊழியர்களில் 10 பேர் இதுவரை இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தெலங்கானா போக்குவரத்து
தெலங்கானா போக்குவரத்து ( Twitter/@tsrtcbuses )

தெலங்கானாவில், இந்த மாத தொடக்கம் முதல் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர். அவர்களின் போராட்டம் 25 நாள்களைக் கடந்து தொடர்கிறது. தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழகத்தை (TSRTC) முழுமையாக அரசுடன் இணைப்பது, காலிப் பணியிடங்களுக்குப் போதுமான ஆட்களை நியமிப்பது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்குவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தெலங்கானா ஆர்.டி.சி
தெலங்கானா ஆர்.டி.சி
Twitter/@tsrtcbuses

விடுமுறை நாள்களில் போராட்டத்தில் ஈடுபட்டதால், அதை குற்றம் எனக் கருதிய அரசு, ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதையும் மீறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் எனக் கூறியிருந்தது. ஆனால், ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வேலைக்கு வராத சுமார் 48,000 ஊழியர்களின் வேலை பறிக்கப்படுவதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார்.

பெருகும் ஆதரவு; களத்தில் குதித்த கட்சிகள்; திணறும் மக்கள்! - 15 நாள்களாக ஸ்தம்பித்த தெலங்கானா

இதனால் ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. ஒருபுறம் பேருந்து வசதி இல்லாததால், மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர். இது எதையும் கண்டுகொள்ளாத அரசு, தன் வேலை நீக்க முடிவை இன்னும் திரும்பப் பெறாமல் உள்ளது. இதனால் விரக்தியடைந்த போக்குவரத்து ஊழியர்கள் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்களில் ஒரு பெண் ஊழியர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலங்கானா ஆர்.டி.சி
தெலங்கானா ஆர்.டி.சி
Twitter/@tsrtcbuses

கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த நீர்ஜா என்ற 31 வயது பெண் நடத்துநர், கடந்த திங்கள்கிழமை தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு, இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இது தவிர, இந்த போக்குவரத்து வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டு, கடந்த 25 நாள்களில் மட்டும் சுமார் 7 ஊழியர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து வேலை நிறுத்த பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெலங்கானாவில் இன்னும் பதற்ற நிலையே நீடித்துவருகிறது.