Published:Updated:

ரூ.1 கோடியிலிருந்து ரூ.100 கோடியாக உயர்ந்த சொத்து! - யார் இந்த ஐஸ்வர்யா?

எம்.குமரேசன்

வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமாரை கைது செய்து அமலாக்கத்துறையினர் விசாரித்துவருகின்றனர். இந்த வழக்கின் அடிப்படையில் சிவக்குமார் மகளுக்கும் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிவக்குமார் மகள் ஐஸ்வர்யா
சிவக்குமார் மகள் ஐஸ்வர்யா

டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யா பெயரில் சிங்கப்பூரில் பல கோடிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஐஸ்வர்யாவின் பெயரில் ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துகளே இருந்தன. தற்போது, ரூ.100 கோடி மதிப்பில் ஐஸ்வர்யாவுக்கு சொத்துகள் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு சிங்கப்பூருக்கு மகளுடன் சென்ற சிவக்குமார், பணத்தை அங்கே முதலீடு செய்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சொல்கின்றனர்.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

இதற்கிடையே, விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகுமாறு ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. தொடர்ந்து, இன்று காலை 10.30 மணியளவில் டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகளிடத்தில் ஐஸ்வர்யா ஆஜரானார்.

அவரிடத்தில் சிங்கப்பூரில் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஐஸ்வர்யாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணையில் அவரிடமிருந்து சில ஆவணங்களையும் அதிகாரிகள் பெற்றனர்.

டி.கே. சிவக்குமார்
டி.கே. சிவக்குமார்

ஐஸ்வர்யா, மேலாண்மைப் படிப்பில் பட்டம் பெற்றவர். தந்தை சிவக்குமார் நடத்தும் கல்வி அறக்கட்டளை இவரின் மேற்பார்வையில் இயங்குகிறது. இந்த அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் உள்ளன. இன்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்லூரிகளும் உள்ளன. ஐஸ்வர்யாவின் கட்டுப்பாட்டில்தான் இவை அனைத்தும் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.