Published:Updated:

அறக்கட்டளையை இழந்து அல்லாடும் அ.தி.மு.க!

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

ரூ.1,000 கோடி சொத்துகள்... ஒரு ரூபாய் எடுக்க வழியில்லை...

அறக்கட்டளையை இழந்து அல்லாடும் அ.தி.மு.க!

ரூ.1,000 கோடி சொத்துகள்... ஒரு ரூபாய் எடுக்க வழியில்லை...

Published:Updated:
அ.தி.மு.க தலைமை அலுவலகம்
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

அ.தி.மு.க-வுக்கு மூன்று அறக்கட்டளைகள் இருந்தும், ஒன்றுகூட கட்சியிடமோ, ஒருங்கிணைப்பாளர்களிடமோ இல்லை. இதனால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி கட்சியின் அடுத்த நிகழ்வுகளுக்குப் பணத்துக்கு என்ன செய்வது, கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் யாரெல்லாம் செலவுகளை ஏற்பது என்கிற இழுபறி கட்சிக்குள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் முக்கியத் துறைகளைக் கையில்வைத்திருந்த முன்னாள் அமைச்சர்கள் சிலரும் பணத்தை வெளியே எடுக்காமல் கைவிரிப்பதால், கட்சி விரைவில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கும் என்பதுதான் ராயப்பேட்டை வட்டாரத்தின் ஹாட் டாபிக்காக இருக்கிறது!

பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க கட்சியைத் தொடங்கிய புதிதில் போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளில் இருக்கும் கட்சியினரை ஒருங்கிணைக்க ‘அண்ணா தொழிற்சங்கப் பேரவை’ என்ற அமைப்பை அறக்கட்டளையாகத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். அவரது மறைவுக்குப் பிறகு கட்சி உடைந்து, பின்னர் கட்சியை ஜெயலலிதா கைப்பற்றினார். 2001-ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்த பிறகு, 2003-ல் பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அறக்கட்டளை என இரு அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டன. மேற்கண்ட மூன்று அறக்கட்டளைகளுக்கும் ஜெயலலிதா, சோ, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகிய மூவரும் டிரஸ்ட்டிகளாக இருந்தனர். ஒருகட்டத்தில் சோ பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். ஜெயலலிதா இறந்த பிறகு மூன்று அறக்கட்டளைகளுக்கும் பூங்குன்றன் ஒருவரே டிரஸ்ட்டியாக இருக்கிறார்.

கடந்த 2017, பிப்ரவரியில் சிறைக்குச் சென்றார் சசிகலா. அவரின் கணவர் எம்.நடராஜன் சிகிச்சையிலிருந்தபோது, முதன்முறை பரோலில் வந்த சசிகலா, பூங்குன்றனை நேரில் வரவழைத்து தனது பெயரையும், தினகரன் பெயரையும் அறக்கட்டளையில் இணைக்கச் செய்தார். அதன் பிறகு நடந்தவைதான், அ.தி.மு.க-வின் தற்போதைய நிதிச் சிக்கல்களுக்கு காரணமாகியிருக்கின்றன என்கிறார்கள் கட்சியின் சில மூத்த நிர்வாகிகள்.

அறக்கட்டளையை இழந்து அல்லாடும் அ.தி.மு.க!

“அ.தி.மு.க செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களுக்கான செலவுகள், கட்சி சார்பில் அளிக்கப்படும் விளம்பரங்கள், அ.தி.மு.க தலைமைக் கழக அலுவலக ஊழியர்கள் சம்பளம், அலுவலக பராமரிப்புச் செலவுகள், விபத்து மற்றும் இயற்கையாக மரணமடையும் கட்சித் தொண்டர்களுக்கு நிதியுதவி, தொழிற் சங்கத்திலுள்ள நலிவடைந்தவர்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை வழங்கப்படும் நிதியுதவி, ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ் நிர்வாகச் செலவுகள் என அனைத்துமே இந்த மூன்று அறக்கட்டளைகளின் நிதியைக்கொண்டே மேற்கொள்ளப்பட்டுவந்தன.

ஆனால், அ.தி.மு.க-விலிருந்து தன்னை ஒதுக்கியதால் ஆத்திரமடைந்த தினகரன், ‘அறக்கட்டளை நிதியை எந்தவகையிலும் அ.தி.மு.க-வுக்கு டிரான்சாக்‌ஷன் செய்யக் கூடாது’ என்று கடிதம் கொடுத்துவிட்டார். இதனால், இன்றுவரை கட்சி செலவுகளை அறக்கட்டளை நிதியிலிருந்து மேற்கொள்ள முடியவில்லை. அதனாலேயே, ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் கட்சி செலவுக்கென ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் ஜாயின்ட் அக்கவுன்ட் ஒன்றைத் தொடங்கினர். அதில் இருவரின் கையிருப்பு மற்றும் கட்சி நிர்வாகிகளிடமிருந்து கட்சி செலவுகளுக்காக பெறப்பட்ட தொகை சுமார் 240 கோடி ரூபாய் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிதியைக்கொண்டே அலுவலக ஊழியர்களின் சம்பளம் தொடங்கி சமீபத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்குக் கொடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் என அனைத்துச் செலவுகளையும் செய்துவருகிறார்கள்.

பூங்குன்றன்
பூங்குன்றன்

அண்ணா தொழிற்சங்கப் பேரவை கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது தான்... ஆனால், அதன் பெயரிலிருக்கும் அறக்கட்டளை கட்சியிடம் இல்லாததால், நலிந்த தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் நிதியுதவியும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதையடுத்து, தற்போது உள்ளாட்சித் தேர்தல் செலவுகள் தொடங்கி அடுத்தடுத்த செலவுகளை யார் செய்வது என்கிற இழுபறி கட்சிக்குள் ஏற்பட்டுள்ளது. இதுநாள்வரை சில செலவுகளை ஏற்றுவந்த கட்சியின் முன்னாள் அமைச்சர்களும், ‘இனி எங்களால் முடியாது’ என்று கைவிரித்துவிட்டனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும், பூங்குன்றனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மட்டுமே அறக்கட்டளை களை மீட்க வாய்ப்பு இருக்கிறது” என்றார்கள் அந்த மூத்த நிர்வாகிகள்.

பூங்குன்றனின் கருத்தை அறிய அவரது மொபைல் எண்ணில் பலமுறைத் தொடர்புகொண்டபோதும் சுவிட்ச் ஆஃப் என்றே வந்தது. ஃபேஸ்புக்கில் அவர் ஆக்டிவ்வாக இருப்பதால், மெசெஞ்சரில் தகவல் அனுப்பியிருக்கிறோம். அவர் சார்பில் பேசியவர்களோ, “சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள சஃபையர் தியேட்டர், திருச்சி, கோவை, மதுரை, நெல்லை என சென்னையைத் தவிர தமிழகத்திலுள்ள அத்தனை மாவட்டத் தலைநகரங்களிலும் இருக்கும் அ.தி.மு.க கட்சி அலுவலகம் அனைத்தும் பூங்குன்றனின் பெயரில்தான் இருக்கின்றன. சசிகலா ஒருபக்கமும், தினகரன் ஒருபக்கமும், பன்னீர்-எடப்பாடி ஒருபக்கமும் எனத் தனித்தனியாகச் செயல்பட்டு வருவதால், எங்கு செல்வதென்று தெரியாமல் நிற்கிறார் பூங்குன்றன். அறக்கட்டளையில் கட்சியின் சொத்துகள் தவிர சுமார் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவை யாருக்கும் பயன்படாமல் இருக்கிறது என்பதுதான் சோகம்!” என்றனர்.

சசிகலா, தினகரன், ஜெயகுமார்
சசிகலா, தினகரன், ஜெயகுமார்

அறக்கட்டளையிலிருந்து ஒரு ரூபாயைக்கூட எடுக்க முடியாத நிலையிலும் அறக்கட்டளை அ.தி.மு.க-வுக்குத்தான் சொந்தம் என்று அடித்துச் சொல்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். “ஏழை, எளிய மக்களுக்கும், நலிவடைந்த நிலையிலிருக்கும் கட்சித் தொண்டர் களுக்கும் உதவி செய்வதற்காகத்தான் அ.தி.மு.க-வில் அறக்கட்டளைகளே தொடங்கப்பட்டன. நாங்கள்தான் அண்ணா தி.மு.க; எங்களிடம்தான் கட்சியின் சின்னம் இருக்கிறது. அதுபோல கட்சிக்காகத் தொடங்கப்பட்ட அறக்கட்டளைகளும் கட்சிக்குத்தான் சொந்தம். விரைவில் சட்டரீதியாக செயல்பட்டு இதிலுள்ள சிக்கல்களைச் சரிசெய்வோம்” என்றார்.