Published:Updated:

ரூ.100 கோடி கிரானைட் கடத்தல்: தளி எம்.எல்.ஏ. மீது வழக்கு!

ரூ.100 கோடி கிரானைட் கடத்தல்: தளி எம்.எல்.ஏ. மீது வழக்கு!
ரூ.100 கோடி கிரானைட் கடத்தல்: தளி எம்.எல்.ஏ. மீது வழக்கு!
ரூ.100 கோடி கிரானைட் கடத்தல்: தளி எம்.எல்.ஏ. மீது வழக்கு!

ஒசூர்: ரூ.100 கோடி மதிப்பிலான கிரானைட் கற்களை வெட்டிக் கடத்தியதாக தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. டி.ராமச்சந்திரன் மற்றும் அவரது அண்ணன் வரதராஜன் ஆகியோர் மீது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி காவல் நிலையங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பெரியார் திராவிடர் கழகப் பிரமுகர் பழனிச்சாமி கொலை வழக்கில், எம்.எல்.ஏ. டி.ராமச்சந்திரன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கறுப்பு வைரம் என்று அழைக்கப்படும் கறுப்பு கிரானைட் கற்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதியில் 5 மலைகளில் உள்ளன. இந்த மாவட்டத்தில், தமிழக அரசு நிறுவனமான டாமின் சார்பில் 4 குவாரிகளும், தனியார் நிறுவனங்கள் சார்பில் 190 குவாரிகளும் இயங்கி வருகின்றன.

இந்த குவாரிகளில் இருந்து கறுப்பு கிரானைட் கற்களை வெட்டி, ஒசூர் அருகே உள்ள சூளகிரி கிரானைட் தொழிற்சாலைகளில் பலகை, பலகைகளாக துண்டாக்கி, பாலீஷ் போட்டு வெளிநாடுகளுக்குக் கடத்தியுள்ளனர்.

மதுரையைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரும் கிரானைட் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்தார்.

இதன்படி, 6 துணை ஆட்சியர்கள் தலைமையில் வருவாய் அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகளைக் கொண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

##~~##
இந்த ஆய்வில் ரூ.100 கோடிக்கும் மேல் தளி தொகுதியில் கிரானைட் கற்கள் அனுமதியின்றி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் குத்தகை விட்டதில் அரசுக்கு வருமானமாக ஆண்டொன்றுக்கு ரூ.40 கோடி கிடைத்துள்ளது. ஆனால், தனியாருக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. இதில் அரசு அலுவலர்களின் பங்கு குறித்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் அரசு விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை எனவும், அரசுக்குச் செலுத்த வேண்டிய குத்தகைத் தொகையை சரிவர செலுத்தவில்லை எனவும் தனிப் படையினரின் ஆய்வில் தெரியவந்தது.
தளி தொகுதியில் நாகமங்கலம் கிராமத்தில் சர்வே எண் 560, 563 நிலங்களில் இருந்து முறையே 27 கன மீட்டர், 33 கன மீட்டர் அளவுக்கு கிரானைட் கற்களை அரசு அனுமதியின்றி வெட்டிக் கடத்தியதாக உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் நாகமங்கலம் கிராம நிர்வாகி அலுவலர் ராமசாமி புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராஜன், மனைவி விமலா உள்ளிட்ட 11 பேர் மீது உத்தனப்பள்ளி காவல் ஆய்வாளர் கதிர்வேல் வழக்குப் பதிவு செய்தார்.
இதேபோல, சந்தனப்பள்ளி கிராமத்தில் சர்வே எண் 1766 பட்டா நிலத்தில் அரசுக்குச் சொந்தமான விலை உயர்ந்த கறுப்பு கிரானைட் கற்களை அனுமதியின்றி திருடிச் சென்றதாக தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் தளி எம்.எல்.ஏ. டி.ராமச்சந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் மீது கிராம நிர்வாகி அலுவலர் உமர் கர்தா புகார் அளித்தார்.
இருதுகோட்டையில் சர்வே எண் 11043 நிலத்தில் 177 கன மீட்டர் கறுப்பு கிரானைட் கற்களை அரசு அனுமதியின்றி திருடிச் சென்றதாக தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராஜன், மனைவி விமலா ஆகியோர் மீது கிராம நிர்வாக அலுவலர் தோப்பைய்யா புகார் அளித்தார்.
இந்த புகார்களின் பேரில் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் வழக்குப் பதிந்தார்.
இதனால், கொலை வழக்கில் சேலம் மத்திய சிறையில் உள்ள தளி எம்.எல்.ஏ. ஜாமீனில் வெளியில் வரும்போது, கிரானைட் முறைகேடு செய்ததாக மீண்டும் அவரைக் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.