Published:Updated:

கோயம்பேட்டில் ஜெயலலிதா!

கோயம்பேட்டில் ஜெயலலிதா!

தீபாவளிக்கு முதல்நாள் இரவு... வெடி சத்தம் கேட்டு கண் விழித்தேன். 'நான் ஊருக்குக் கிளம்புறேன்.  நைட் 11 மணிக்கு பஸ். உனக்கு டைம் இருந்தால் கோயம்பேடு வா...’ ஹாசினி வாட்ஸ் அப்பில் மெசேஜ். வர்றேன் என்று ரிப்ளை அனுப்பிவிட்டு புறப்பட்டேன். ஆட்டோ பிடிப்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது. ''மீட்டருக்கு மேல ஐம்பது ரூபா வாங்கிக்கோ...'' என்று ஒரு ஆட்டோக்காரரிடம் பேசி ஒருவழியாகக் கிளம்பினேன். தீபாவளிக்கு ஊருக்குக் கிளம்பும் பரபரப்பு ரோட்டில் தெரிந்தது. அவ்வளவு டிராஃபிக்.

கோயம்பேட்டில் ஜெயலலிதா!

அடைமழையால் திடீர் பள்ளங்களாலும், குழிகளாலும் சாலைகள் சின்னாபின்னமாகிக் கிடந்தன. எந்த இடத்தில் பள்ளம் இருக்கிறது என்றே தெரியாத அளவுக்கு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. (சைதை துரைசாமியை நினைத்துக் கொண்டே ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்!) கோடம்பாக்கம் உள்ளே புகுந்து பெரியார் பாதை வழியாக ஆட்டோ போனது. கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் புகுந்தேன். உள்ளே கம்ப்யூட்டர் சகிதமாக 25 சிறப்பு முன்பதிவு கவுன்டர்கள் தொடங்கப்பட்டு இருந்தது. அந்த கவுன்டரில் நடுநாயகமாக மெகா சைஸ் ஜெயலலிதா படம் மாட்டப்பட்டு இருந்தது. அம்மா குடிநீர் சென்டரில் முன்பு ஜெயலலிதா படம் இருக்கும். அதனை சில நாட்களாக  ஸ்டிக்கர் வைத்து மறைத்து இருந்தார்கள். இப்போது அந்த ஸ்டிக்கரை கிழித்துவிட்டார்கள். அதனால்  கோயம்பேட்டில் திரும்பிய பக்கமெல்லாம் ஜெயலலிதா படம் பளிச்சிட்டது.

கோயம்பேட்டில் ஜெயலலிதா!

பயணிகளுக்கு உதவுவதற்கான சிறப்புப் பணியில், போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 460 பேர் சீருடைகளில் வலம் வந்தனர். 32 வாக்கி டாக்கிகளுடன் போக்குவரத்து அதிகாரிகள் பிஸியாக இருந்தனர். அவற்றை எல்லாம்விட, நான் கண்ட இன்னொரு ஆச்சர்யக்காட்சி.... 16 சி.சி.டி.வி-க்கள் பொருத்தப்பட்டு, அவற்றைக் கன்ட்ரோல் ரூமில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தார் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. அடுத்த அறையில், சென்னை  மாநகர போலீஸார், குற்றவாளிகளின் நடமாட்டத்தை சி.சி.டி.வி-க்களில் பார்த்தபடி இருந்தனர். இன்ஸ்பெக்டர் மில்லர் தலைமையில் ஒரு டீம் பேருந்து

கோயம்பேட்டில் ஜெயலலிதா!

நிலையத்தைச் சுற்றி வந்தபடி திருடர்களிடமிருந்து உஷாராக இருப்பதற்கான பாதுகாப்பு டிப்ஸ்களை பொதுமக்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தனர். குற்றத் தடுப்பு பேனர்களை போலீஸார் கைகளில் பிடித்தவாறு பிளாட்பாரங்களைச் சுற்றி வந்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜியும் பேருந்து நிலையத்துக்குள் புகுந்து பணிகளிடமும், ஓட்டுநர்களிடமும் விசாரித்தபடியே இருந்தார். கோயம்பேடு முழுக்க ஜெயலலிதா படம் வைத்தது செந்தில்பாலாஜி ஐடியாவாம்.

கோயம்பேடு ஜங்ஷனை அடையும் பஸ்கள் நெரிசலில் சிக்காமலிருக்க... 10 பஸ்களை வெளியே அனுப்புவதும்... 10 பஸ்களை உள்ளே அனுப்புவதுமாக புதுவித ஏற்பாடுகளை டெபுடி கமிஷனர்கள் மனோகரனும், பன்னீர் செல்வமும் செய்திருந்தனர். அதனால், பஸ்கள் தங்குதடையில்லாமல் சென்று கொண்டிருந்தன. போக்குவரத்துத் துறையும், காவல் துறையும் போட்டிபோட்டுக்கொண்டு இத்தனை ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அந்த நேரத்தில்தான் ஹாசினி வந்து என் முதுகைத் தட்டினார். ''வந்தா போன் பண்ண மாட்டியா... இங்கே யாரை பராக் பார்த்துட்டு இருக்கே...'' செல்லமாகக் கோபித்துக் கொண்டார். பேருந்து நிலையத்தில் செய்யப் பட்டு இருக்கும் ஏற்பாடுகளை ஹாசினியிடம் சொன்னேன். அவரோ, ''அட நீ வேற... கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் 450 பஸ்கள்தான் நிற்க முடியுமாம். தீபாவளி நேரத்துல 4,000 பஸ்கள் அங்கு வந்து போகுது. கடுமையாக டிராஃபிக் பாதிக்கப்படுது. ஸ்பெஷல் பஸ் எல்லாத்தையும் சிட்டிக்கு வெளியில பெருங்களத்தூரிலும், நசரேத்பேட்டையிலும் நிறுத்தி இருக்கலாம். முன்பதிவு செய்யாதவர்களுக்கு பூ மார்க்கெட் பக்கத்துல தற்காலிக பஸ் ஸ்டாண்டை ரெடி பண்ணியிருக்காங்க. அந்த இடம், படுமோசமான அளவுக்கு சேறும் சகதியுமாக இருக்கு. இப்போ நான் அங்கிருந்துதான் வர்றேன். பாவம் எல்லோரும் ரொம்பவும் கஷ்டப்படுறாங்க. இதை அமைச்சர்கிட்ட யாரும் சொன்னாங்களான்னு தெரியலை'' என்று சொன்னார்.

ஹாசினியோடு ஆம்னி பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்தேன். அங்கேயும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்களுக்கு பர்மிட் இருக்கிறதா, டிக்கெட்டுக்கு பணம் எவ்வளவு வசூல் செய்கிறார்கள் என்று சோதனை நடத்தியபடி இருந்தனர். கோவைக்குச் செல்லும் பஸ்ஸுக்கு எவ்வளவு கட்டணம் என்று விசாரித்தேன். ஏ.சி பஸ்ஸில் 1,500 ரூபாய் வரை சொன்னார்கள். ஹாசினிக்கு ஹேப்பி தீபாவளி சொல்லி, டாடா காட்டிவிட்டு தி.நகரை நோக்கிக் கிளம்பினேன். இந்த நேரத்துல தி.நகருக்கு எதுக்கு என யோசிக்கும் மகாஜனங்களே... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சொல்றேன்.

ஓவர் டு தி.நகர்...

அந்த பிரபல ஹோட்டல் வெளியே அமைதியாக இருந்தது. 'ரெய்ன் பார்ட்டி எங்கே நடக்குது?’ - ரிசப்ஷனில் இருந்த அழகு பெண்ணிடம் விசாரித்தேன். 'நீங்க முன்னாடியே புக் பண்ணியிருக்கீங்களா சார்...’ என்று கேட்டார். என்னுடைய மொபைலை எடுத்துக் காட்டினேன். உள்ளே செல்ல வழிகாட்டினார் அவர். அங்கே எனது மொபைல் போன் உட்பட அத்தனை எலெக்ட்ரானிக் ஐட்டங்களையும் வாங்கி ஒரு கவரில் போட்டு பெயரை எழுதி வைத்துக் கொண்டார்கள். யாரும் படம் எடுத்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை. உள்ளே போனால், நீச்சல் குளத்தைச் சுற்றி இளசுகளின் ஆட்டம் சூடுபறந்தது. மழைச் சாரலில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு கையில் மது, இன்னொரு கையில் மாதுவுமாக ஆட்டம் போட்டபடி இருந்தனர். உள்ளே நுழைந்ததும், 'வெல்கம் டிரிங் சார்...’ என்று என் கையில் ஒரு கோப்பையைக் கொடுத்தார்கள். கோப்பையோடு நீச்சல் குளத்தைச் சுற்றி வந்தேன். சில இளசுகள் தண்ணீரில் மிதந்தபடி கையில் சரக்கு பாட்டிலை வைத்திருந்தார்கள்.

கோயம்பேட்டில் ஜெயலலிதா!

அங்கிருந்த ஒரு பையனிடம் பேச்சு கொடுத் தேன். ''இந்த பார்ட்டி திடீர்னுதான் ஏற்பாடு செஞ்சாங்க. ஒவ்வொரு வருஷமும் நடக்கும். செயற்கை மழை உருவாக்குவாங்க. இந்த வருஷம் அதுக்கு வேலை இல்லாம போச்சு. நாலு நாளாக மழை பிச்சு எடுக்குது. பசங்க மட்டும் வந்தால் தலைக்கு 2,000 ரூபாய். பொண்ணுங்களைக்கூட கூட்டிட்டு வந்தால் அவங்க சாப்பிடுற டிரிங்ஸ்க்கு பணம் இல்லை. டிரிங்ஸ், சாப்பாடு எல்லாமே அன்லிமிட். தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே சென்னையில் பல ஹோட்டல்ல இந்த ரெய்ன் பார்ட்டி நடக்கும். தீபாவளிக்காக இதை கொண்டாடுறதால பார்ட்டியோட எண்ட்ல மத்தாப்பு கொளுத்தி முடிச்சுடுவாங்க. நீங்க இப்போதான் ஃபர்ஸ்ட் டைமா...'' என்று என்னைக் கேட்டார். தலையாட்டியதும், ''என்ஜாய் பண்ணுங்க பாஸ்!'' என்று கைகொடுத்துவிட்டு ஜோதியில் ஐக்கியமானார்.

சீரியல் நடிகர் ஒருவர், அரைக்கால் டிராயர் போட்ட பெண்ணுடன் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார். யாருக்கும் நிதானம் இல்லை. ஹோட்டல் ஊழியர்கள்தான் போதை தலைக்கேறியவர்களை கைத்தாங்கலாக அழைத்து வந்து வராண்டாவில் இருந்த சேரில் உட்கார வைத்தனர். பார்ட்டி முடியும்போது மணி இரண்டு. ஒருவருக்கொருவர் கைகுலுக்கி, 'ஹேப்பி தீபாவளி!’ என்று சொன்னபடியே புறப்பட்டனர்.