Published:Updated:

மிஸ்டர் கழுகு: 2ஜி வெடி... திரி ரெடி!

மிஸ்டர் கழுகு: 2ஜி வெடி... திரி ரெடி!

மிஸ்டர் கழுகு: 2ஜி வெடி... திரி ரெடி!

கடந்த இரண்டு மாத காலமாக பெங்களூருவை மையம் கொண்டு இருந்த கழுகார், இப்போது டெல்லி தகவல்களுடன் நம்முன் ஆஜரானார்.

''வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு, இந்தியா முழுக்க அரசியல்வாதிகள் பலரின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை 2ஜி வழக்கின் தீர்ப்பு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளதாக டெல்லித் தகவல்கள் சொல்கின்றன. அதுபற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டி வந்துள்ளேன்!'' என்றபடி ஆரம்பித்தார்.

''2ஜி வழக்கு, டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன் விசாரணையில் இருக்கிறது. 2ஜி சம்பந்தமாக இரண்டு வழக்குகள் ஷைனி முன்பு இருக்கின்றன. முதல் வழக்கு சி.பி.ஐ தாக்கல் செய்தது. அது, விதிமுறைகள் மீறப்பட்டு வழங்கப்பட்ட உரிமங்களின் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்பது. இந்த வழக்கில் இரண்டு தரப்பு வாதங்களும் முடிந்துவிட்டன. 'நவம்பர் 10-ம் தேதி முதல் இறுதிக்கட்ட வாதம் தொடங்கலாம்’ என்று நீதிபதி ஷைனி அறிவித்துள்ளார். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாகித் பால்வா உள்பட 17 பேர்கள். இவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை வைப்பார்கள். அதன் பிறகு சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை வைப்பார். வாதம் முடிந்ததும் தேதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்படும். பிறகு தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும். டெல்லி சி.பி.ஐ வட்டாரத்தை விசாரித்தால், 'ஜனவரி 15-ம் தேதிக்குள் தீர்ப்பு வந்துவிடும்’ என்று சொல்கிறார்கள்!''

''அவ்வளவு சீக்கிரமாகவா?''

மிஸ்டர் கழுகு: 2ஜி வெடி... திரி ரெடி!

''பெங்களூரு வழக்குக்காவது மனுக்கள் மீது மனுக்களாகப் போட்டு இழுத்தடித்தார்கள். ஆனால், 2ஜி வழக்கு ஆரம்ப கட்டத்தில்தான் தடங்கலைச் சந்தித்தது. இப்போது தடங்கல் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்புதான் கருணாநிதிக்கு பெரும் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. 'இந்த தீர்ப்பின் மூலம்தான் தி.மு.க-வின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது’ என்றும் தி.மு.க-வினர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.''

''ம்!''

''சி.பி.ஐ நீதிமன்றத்தில் உள்ள 2ஜி சம்பந்தப்பட்ட இரண்டாவது வழக்கை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்வது இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கிறது. அதாவது இந்த மாதம் 31-ம் தேதி சி.பி.ஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு நடக்கும் என்று கடந்த 20-ம் தேதி ஷைனி அறிவித்துள்ளது, அடுத்த பெரிய நெருக்கடி. '2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உரிமம்பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்குப் பரிகாரமாக சில தனியார் நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டி.வி-க்கு 200 கோடி ரூபாய் அளித்துள்ளது. இதில், கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது’ என்று அமலாக்கத் துறை குற்றம் சாட்டுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்கு தேதி குறித்துவிட்டார் நீதிபதி ஷைனி. முந்தைய சி.பி.ஐ வழக்கில் சாட்சிகளில் ஒருவராக இருந்த தயாளு அம்மாள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கிறார். இதிலும் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி சரத்குமார், கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் உள்ளிட்ட 10 பேர் வருகிறார்கள். முதல் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட பிறகு இந்த வழக்கு வேகம் பிடிக்கும் என்கிறார்கள்!''

''அப்படியானால்?''

''டெல்லியில் இப்போதே, 'ஷைனி சுனாமி’ என்று பெயர் சூட்ட ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த 20-ம் தேதியே குற்றச்சாட்டுப் பதிவு நடந்திருக்க வேண்டும். ஆனால், நீதிபதி, 'உத்தரவு இன்னும் தயாராகவில்லை. அதனால் அக்டோபர் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்’ என்று கூறினார். மத்திய அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞராக ஆனந்த் குரோவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களைத் தாக்கல் செய்வதற்கான அனுமதியைக் கேட்டார். அதற்கு ஷைனி அனுமதி வழங்கினார். அந்த மனுவில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி ரகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி தயாளு அம்மாள் ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை, சி.பி.ஐ நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அதாவது, அவர் விசாரணையை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். இதுவும் கருணாநிதிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி பார்த்தால், நவம்பர் மாதம் முதல் கோபாலபுரத்தை ஷைனி சுனாமி வெகுவாக தாக்கலாம் என்று டெல்லி தகவல்கள் சொல்கின்றன. இந்த வழக்குக்குப் பிறகு ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு சூடுபிடிக்கும் என்று சொல்கிறார்கள்!''

''அதனால்தான் கருணாநிதியும் அடக்கி வாசிக்கிறார்!''

''ம்! மூன்று வாரங்கள்தான் கருணாநிதி அமைதியாக இருந்தார். இதோ, ஆரம்பித்து விட்டாரே! 'ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்’ என்ற தலைப்பில் பெங்களூரு வழக்கின் தீர்ப்பு குறித்த மினி தொடரை தொடங்கிவிட்டார் கருணாநிதி. இதுவரை தனது வழக்கமான பாணியில் அறிக்கை விடாமல் அமைதியாக இருந்தார். அவரை ராமதாஸ் கடுமையாகச் சீண்டிவிட்டார். கட்சி நிர்வாகிகளும் 'தலைவர் இவ்வளவு மௌனமாக இருப்பது நல்லதல்ல’ என்றார்கள். இதுவே தி.மு.க-வின் மிகப்பெரிய பலவீனமாகப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கருணாநிதி இந்தத் தொடரைத் தொடங்கிவிட்டார். உடன்பிறப்புக்குக் கடிதம் பாணியில் எழுதப்படும் இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து தி.மு.க தலைமைக் கழகம் சார்பில் தனிப் புத்தகமாகவும் கொண்டு வரப்போகிறார்கள். குன்ஹாவின் தீர்ப்பை முழுமையாக மொழிபெயர்த்து 'முரசொலி’யில் வெளியிட்டு வருகிறார்கள். அதுவும் புத்தகமாக வரப்போகிறது. ஏற்கெனவே, தீர்ப்புக்கு முன்னதாக இந்த வழக்கு பற்றி கருணாநிதி எழுதிய கடிதங்கள் அப்போதே புத்தகமாக வந்துவிட்டது. இந்த மூன்றையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல கருணாநிதி கட்டளையிட்டுள்ளாராம்!''

மிஸ்டர் கழுகு: 2ஜி வெடி... திரி ரெடி!

''ரஜினிகாந்த் அறிக்கையைப் பார்த்தீரா?''

''ம்! அரசியல், அரசியல்வாதிகள் பற்றிய சர்ச்சைகளில் சமீப காலமாக இறங்காத ரஜினி வலியப் போய் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதி உள்ளார். 'தாங்கள் மீண்டும் போயஸ் தோட்ட இல்லத்துக்குத் திரும்பி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களுக்குச் சிறப்பான நேரம் அமைய பிராத்திக்கிறேன். தாங்கள் எப்பொழுதும் நல்ல உடல் நலமும் அமைதியும் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன். மேலும், எனது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று ரஜினி அந்தக் கடிதத்தில் மையமாக எழுதி இருக்கிறார். 'தாங்கள் மீண்டும் போயஸ் தோட்ட இல்லத்துக்குத் திரும்பி இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’ என்பது சிறையில் இருந்து ஜாமீன் வந்ததற்கான வாழ்த்தாக அமைந்துவிட்டது. இதற்குப் பதில் அளித்து ரஜினிக்கு ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், 'தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் தெரிவித்துள்ள கனிவான, அன்பான உணர்வுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நீண்ட ஆயுள், நல்ல உடல்நலம், செல்வ வளம் மற்றும் அனைத்துச் செயல்பாடுகளிலும் வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாகப் பார்த்தால் சாதாரணக் கடிதம்தான். ஆனால் எழுதிய சூழ்நிலை முக்கியமானதாக அதனை ஆக்கிவிட்டது!''

''ரஜினியின் நோக்கம் என்னவாம்?''

''பி.ஜே.பி-யில் சேரப்போகிறார், பி.ஜே.பி தன்னுடைய முதலமைச்சர் வேட்பாளராக ரஜினியை அறிவிக்கப் போகிறது, ரஜினி வீட்டுக்கு தமிழிசை தூது போகிறார், அமித்ஷா அடிக்கடி ரஜினியிடம் பேசுகிறார்.... இப்படி பரவும் தகவல்களை ரஜினியே ரசிக்கவில்லை என்கிறார்கள். 'நம்மளோட நிலைமையை மோடி சார் வந்தப்பவே சொல்லியாச்சே! அப்புறம் ஏன் இந்த மாதிரி தகவல் பரப்புறாங்க?’ என்று ரஜினி கேட்டுள்ளார். 'கலைஞர் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னேன், என்னைப் பார்க்க அழகிரி வந்துட்டுப் போனார், விஜிட்ட(விஜயகாந்த்) அப்பப்போ பேசுவேன், ராம்ஜெத்மலானி எழுதிய புக்கைக் கொடுத்துட்டு வைகோ பேசிட்டுப் போனார். இப்படி எல்லோரையும் ஒரே மாதிரித்தான் நான் நினைக்கிறேன். இதுல ஒருத்தராகத்தான் மேடத்தை நான் பார்க்கிறேன்’ என்று சொன்னாராம் ரஜினி. 'கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த அரசியல் முடிவுகளையும் ரஜினி எடுக்க மாட்டார்’ என்பதுதான் ரஜினியை அறிந்தவர்கள் சொல்வது!''  

மிஸ்டர் கழுகு: 2ஜி வெடி... திரி ரெடி!

''எப்படி இருக்கிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்?''

''அப்படியேதான்! வழக்கமான தாடியுடன் வலம் வருகிறார். அவரை முதல்வராக அங்கீகரிக்கிறார்களா என்பதைவிட முதல்வராக அவர் தன்னை நினைக்கிறாரா என்பதே சந்தேகம்தான்! ஒவ்வொரு துறையிலும், பணிகள் என்னென்ன நடைபெற்றுள்ளன என்று அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்குவதற்காகவே பொருட்காட்சி அரசு சார்பில் நடத¢தப்படுகிறது. தற்போது தஞ்சையில் பொருட்காட்சி நடக்கிறது. ஒவ்வொரு துறை சார்பில் வைக்கப்படும் விளம்பரத்தில் ஓ.பன்னீர்செல்வம் படத்தை பிரதானமாக வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள். அதிலும் பொதுப்பணித் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் மெகா சைஸ் படம் வைக்கப்பட்டிருக்கிறது. 'அரசு நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் அதற்கான விளம்பரங்கள், ஃபிளக்ஸ் அளவுகள் எல்லாம் முதல்வரின் அலுவலகத்தில் இருந்துதான் வரும். அப்படித்தான் பொதுப்பணித் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கும் அங்கிருந்துதான் வந்தது. அந்த அளவுப்படிதான் வைத்திருக்கிறோம்’ என்று சொல்கிறார்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலர்கள். 'முதல்வராக இருந்தாலும், நான் பொதுப்பணித் துறை அமைச்சராகத்தான் இருக்கிறேன். எல்லாமே அம்மாதான்’ என்று காட்டுவதற்காகவே இப்படி ஒரு விளம்பரத்தை பொதுப்பணித் துறை சார்பில¢ விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்’ என்று சொல்கிறார்கள்!''

மிஸ்டர் கழுகு: 2ஜி வெடி... திரி ரெடி!

''ஓஹோ!''

''இதில் ஒரு சர்ச்சையும் வந்துவிட்டது. தஞ்சை பொருட்காட்சியின் வரவேற்பு வளைவில் ஓ.பி.எஸ் படத்தை பெரிய அளவிலும் ஜெயலலிதா படத்தை சின்ன அளவில் எப்படி போடலாம் என்று அ.தி.மு.க-வினர் தலைமைக்குப் புகார் அனுப்ப ஆரம்பித்துவிட்டார்களாம்'' என்று கழுகார் சொல்ல...

''ஜெயலலிதா படத்தை வைக்கும் பிரச்னைக்கு, ஜெயலலிதாவே ஒரு கட்டளையைப் பிறப்பித்தால் மட்டுமே கட்சிக்காரர்களும் அதிகாரிகளும் நிம்மதியாக இருப்பார்கள்!'' என்று நாம் சொல்ல, தலையாட்டியபடி எழுந்த கழுகார், ''மேலிடத்தைச் சுற்றிவரும் மூன்றெழுத்து உயர் அதிகாரி, பரப்பன அக்ரஹாராவில் வீடு பிடித்து தங்கியபடி, டெல்லிக்கும் பெங்களூருக்குமாகப் பறந்தாராம். இந்த விஷயத்தை மத்திய உளவுத் துறையினர் கவனிக்கத் தவறவில்லையாம்'' என்றபடி பறந்தார்!

அட்டைப் படம்: கே.கார்த்திகேயன்

படம்: கே.குணசீலன்

''கலெக்டராக இருந்த எனக்கு தாசில்தார் போஸ்ட் வேண்டாம்!''

மிஸ்டர் கழுகு: 2ஜி வெடி... திரி ரெடி!

நெல்லை மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஆரியாஸ் ஹோட்டலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளரான கருப்பசாமி பாண்டியனின் எதிர்கோஷ்டியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகரான ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சரான டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் அந்த அணியைச் சேர்ந்தவரான பூங்கோதை இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளரான கருப்பசாமி பாண்டியன் பேசியது பிரிவு உபசார நிகழ்ச்சிபோல இருந்தது. ''கட்சியில் ஒரு சிலர் எனக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தாலும், நான் அவர்களுக்காகவும் சில நேரங்களில் கட்சித் தலைமையிடம் பேசி இருக்கிறேன். கட்சியில் யார் மீதும் எந்த நேரத்திலும் எனக்கு வருத்தமோ கோபமோ கிடையாது. எனது பணியைச் சிறப்பாகச் செய்து இருக்கிறேன். நமது கட்சியில் மட்டுமே ஜனநாயகம் இருக்கிறது. அதனால்தான் முறைப்படி உள்கட்சி தேர்தல் நடத்துகிறோம். தற்போது மாவட்ட நிர்வாகத்தை மூன்றாகப் பிரிக்க கட்சித் தலைமை முடிவு செய்து இருக்கிறது. இன்னும் 45 நாட்களில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனது பொறுப்புக்கான கால அவகாசமும் அதுதான். இப்போது பிரிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பானது சில தொகுதிகளை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்கும். நான் 18 தொகுதிகளைக் கொண்ட பரந்த மாவட்டத்தின் செயலாளராகப் பொறுப்பு வகித்து இருக்கிறேன். மாவட்ட கலெக்டராக பணிபுரிந்துவிட்டு, எப்படி தாசில்தாராக பொறுப்பு வகிக்க முடியாதோ அதே போன்ற நிலைமை இருப்பதால் மீண்டும் மாவட்டப் பொறுப்பு வகிக்க விரும்பவில்லை'' என்று பேசினார். ஆனாலும், கருப்பசாமி பாண்டியன் தனது மகன் சங்கரையும் ஆவுடையப்பன் தனது மகன் பிரபாகரனையும் அரசியல்வாரிசாக களம் இறக்கி உள்ளனர்.