கழுகார் பதில்கள்!
பொன்விழி, அன்னூர்.

ஜெயலலிதாவின் கைதால் சோ, மனம் வருந்துகிறாரோ?
ரொம்பவே வருந்துகிறார்! 1995-ல் ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகச் சொல்லி விமர்சனங்களைக் கிளப்பி, சும்மா இருந்த மூப்பனாரை சீண்டிவிட்டு, தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்து, ரஜினி மனதில் மூடி வைத்திருந்த கோபத்தை வெளியே வரவைத்து வாய்ஸ் கொடுக்க வைத்து, யாரை எதிர்த்து 1970-களில் இருந்து பத்திரிகை நடத்தினாரோ அந்தக் கருணாநிதியை, 1996-ம் ஆண்டு தேடிப் போய் சந்தித்து ஜெயலலிதாவை வீழ்த்தியவர் சோ!
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.
ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் களம் புகுந்தால், எம்.ஜி.ஆரைப் போன்று மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல்வாதியாக வலம் வந்து ஆட்சி புரிவாரா?
ஜெயலலிதா ஜாமீனில் வெளியில் வந்ததை வரவேற்றுள்ள ரஜினியின் அறிக்கையை நீங்கள் பார்க்கவில்லையா? 'லிங்கா’ ரிலீஸ் அவர் மனக்கண்ணில் வந்து போயிருக்கலாம். காரணமில்லாமல் காரியமில்லை!
ஆர்.ரஞ்சித்குமார், காரமடை.
ஒரு வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு, ஜாமீன் வழங்கும்போது சட்டத்தின் மீதான நம்பகத்தன்மை குறைகிறதே?
ஜாமீன் என்பது சட்டரீதியான உரிமைதான். இந்தியாவின் நீதிமன்ற நெறிமுறை என்பது படிநிலை கொண்டது. கீழ்நிலை நீதிமன்றங்களில் தண்டனை பெற்றாலும் அதனை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி, உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்திய பிறகுதான் ஒருவர் முழுமையான தண்டனையை அனுபவிப்பார். அதற்கு முன், சட்டம் வழங்கும் சலுகையான ஜாமீனை பயன்படுத்தி வெளியில் இருக்கிறார். அவ்வளவுதான்!
பிணை பணம் செலுத்தி, சொத்துகளைக் காட்டி வெளியில் விடுகிறார்களே தவிர, சும்மா விட்டுவிடுவது இல்லை. எனவே, இதனால் நம்பகத்தன்மை குறைவதாகக் கருத முடியாது.
எஸ்.எம்.சுல்தான், கோயம்புத்தூர்.
தமிழக உளவுத் துறை?
அவர்களுக்கு வேறு ஏதாவது வேலை இருந்தால் தரலாம்!
ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.
'பணம் பத்தும் செய்யும்’ என்கிறார்கள். ஆனால், சில சமயம் அந்தப் பணம்கூட கை கொடுப்பது இல்லையே?
'நமது வருமானம் செருப்புகளைப்போல. வருமானம் மிகச் சிறியதாக இருந்தால் காலைக் கடிக்கும். வீங்கவைக்கும். மிகப் பெரியதாக இருந்தால் தடுக்கி விழவைக்கும்’ என்பார்கள். நேர்மையான வழியில் வந்த பணத்தையே இப்படிச் சொல்கிறார்கள் என்றால், நேர்மையற்ற பணம் பற்றிச் சொல்லவே வேண்டாம். பணத்தால் மெத்தையை வாங்கலாம். தூக்கத்தை வாங்க முடியுமா?
இரா.நெல்லை அறிவரசு, ஆவடி.
அரசியல்வாதிகள் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் பணம், பாவப்பட்ட பணம்தானே? அந்தப் பாவங்கள் தங்களது வாரிசுகளைப் பாதிக்காதா?
நிச்சயம் பாதிக்கும். பாவப்பட்ட வழியில் பணம் சம்பாதித்தவர்களின் பெயர்களைப் பட்டியலிடுங்கள். அவர்களது குடும்ப நிலைமையை உன்னிப்பாகக் கவனியுங்கள். உண்மையை உணர முடியும்.
சிவன் தெற்குவீதி சிங்கம், தோப்புத்துறை.
விசாரணைக்கு அழைத்து வந்த நபரை, சுட்டுக் கொன்றிருக்கிறாரே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்?
இது போலீஸுக்குப் புதிதல்ல... வழக்கமாக நடப்பதுதான். இப்படி அரக்கத்தனமாக நடந்துகொண்ட போலீஸ்காரர் மீது 'கொலை வழக்கு’ பதிவு செய்து தண்டித்தால் மட்டுமே இனி இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கும்.
தணிகை மணியன், கொளத்தூர்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க-வின் செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும்?
அ.தி.மு.க தலைமை தன்னுடைய சிந்தனையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. கட்சியில் தனக்கு அடுத்த தலைமை யார் என்பதை முடிவு செய்து, அவரை வளர்த்தெடுத்தால் மட்டுமே கட்சியைத் தொடர்ந்து நடத்த முடியும். ஆட்சி பீடத்தில் அமரவைக்கப்பட்டு இருப்பவரை சுயசிந்தனையோடு செயல்பட அனுமதிக்க வேண்டும்.
அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை.

சுப்பிரமணியன் சுவாமி வில்லனா... கதாநாயகனா?
வில்லன்களுக்கு கதாநாயகன். கதாநாயகர்களுக்கு வில்லன்.
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
கனிமக் கொள்ளை குறித்து விசாரிக்க, சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை செயல்படவே இன்னும் அனுமதிக்கவில்லையாமே?
இந்தக் குழுவை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம். சகாயம் குழுவுக்குத் தேவையான தகவல்களைத் தரவேண்டியது தமிழக அரசின் கடமை. அது தவிர்க்கப்படுமானால், சென்னை உயர் நீதிமன்றத்தை அவமரியாதை செய்வதாக அர்த்தம். நீதிமன்ற விதிமீறல்.
எஸ்.பூவேந்த அரசு, பெரிய மதியாக் கூடலூர்.
பன்னீர்செல்வம் ஆட்சியில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதே?
பாவம்! மழை மீது கோபம் திரும்பிவிடப் போகிறது!
