Published:Updated:

ரெண்டு தரப்புக்கும் சிரிப்பு தீபாவளி

உறையில் இருந்து வெளியேறியது 'கத்தி!'

'யார் பெற்ற மகனோ? நீ

யார் பெற்ற மகனோ?

இந்த ஊர் கும்பிடும்

குல சாமி இவன் !

ஊர் செய்த தவமோ? இந்த

ஊர் செய்த தவமோ?

மண்ணைக் காப்பாற்றிடும்

இவன் ஆதி சிவன்!’ - 'கத்தி’ படத்தில் வரும் பாடல் வரிகள் இவை. பட அறிவிப்பு வெளியான நாளில் இருந்து கத்திக்கு வந்த சிக்கலைப் பார்த்தால், அந்த ஆதி சிவனாலேயே காப்பாற்ற முடியுமா என்று நினைக்க வைத்துவிட்டது.

ரெண்டு தரப்புக்கும் சிரிப்பு தீபாவளி

'கத்தி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'லைக்கா’வின் தலைவர், இலங்கைத் தமிழர் சுபாஷ்கரன். ஆனால், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரி மகன் ஹிமல் லீலந்திர ஹெட்டியராச்சி, லைக்காவின் உண்மையான உரிமையாளர் என்று சர்ச்சை கிளம்பியது. ராஜபக்ஷே குடும்ப நிறுவனம் தயாரிக்கும் படத்தைத் தமிழகத்தில் ஓடவிட மாட்டோம் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் பிரச்னையைத் தொடங்கிவைத்தார். அதில் 100-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்பினர் கைகோத்து கத்திக்கு எதிராக சுத்தி தூக்கினார்கள்.

''நாங்கள் படத்தின் இயக்குநர் முருகதாஸுக்கோ, நடிகர் விஜய்க்கோ எதிரானவர்கள் அல்ல. ராஜபக்ஷே குடும்பத்துக்கு எதிரானவர்கள். 'கத்தி’ மட்டுமல்ல... ராஜபக்ஷே குடும்பத்தின் லைக்கா நிறுவனம் வேறு எந்த படத்தைத் தயாரித்தாலும் தமிழகத்தில் ஓடவிட மாட்டோம்!'' என்று வேல்முருகன் அறிவித்தார்.

இதற்கிடையில், லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன், ''எனக்கு இந்தப் படம் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. எங்கள் நிறுவனத்தின் ஒருநாள் செலவுதான் 'கத்தி’ படத்தின் பட்ஜெட். இலங்கையின் ராணுவ விமானத்தில் நாங்கள் பயணம் செய்தது தவறாகப் பார்க்கப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பார்ப்பதற்காக இலங்கை ராணுவ விமானத்தை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தினோம். அதைத் தாண்டி எங்களுக்கும் ராஜபக்ஷே அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை'' என்று சொன்னார்.

தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினரும் 'கத்தி’ வெளியிட தொடர்ந்து எதிர்ப்பைக் காட்டி வந்தனர். இதற்கிடையில், 'கத்தி’ படத்தின் சேட்டிலைட் உரிமத்தை ஆளும்தரப்புக்கு நெருக்கமானவர்களுக்கு கொடுக்கப்பட்டதாகச் செய்தி பரவியது. இதைக் கேள்விப்பட்டு எதிர்ப்புக் காட்டியவர்கள் சற்றே பதுங்க ஆரம்பித்தார்கள். கடந்த 20-ம் தேதி இரவு சென்னையில் சத்யம் தியேட்டர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல்

ரெண்டு தரப்புக்கும் சிரிப்பு தீபாவளி

குண்டுகளை வீசினார்கள். அதில், தியேட்டரின் முன்பக்கக் கண்ணாடிக் கதவுகள் சிதறின. இதுதொடர்பாக, பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வாசுதேவன், ஜெயப்பிரகாஷ், ஜெயக்குமார், அப்பு, கிருஷ்ணா ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர்.  

'கத்தி’ படத்தை வெளியிடுவது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், திடீர் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ''கத்தி படத்தின் விளம்பரங்களில் 'லைக்கா’ பெயரை நீக்கத் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே, இந்தப் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது. இந்தப் படம் வெளிவர எங்களுக்கு ஆதரவு தந்த புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் தமிழக காவல் துறைக்கும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுக்கும் தமிழக அமைப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து 'லைக்கா’ பெயரை நீக்கிய தயாரிப்பாளர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று அவர்கள் கூறினர்.

இந்த பிரச்னை தொடர்பாக மௌனம் சாதித்து வந்த விஜய், ''லைக்கா நிறுவனத்தின் பெயரை நீக்குவதற்கு தயாரிப்பாளர்கள் சம்மதித்துவிட்டார்கள். எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு 'கத்தி’ தீபாவளி விருந்தாக அமையும்'' என்று சொல்லியிருக்கிறார்.

ரெண்டு தரப்புக்கும் சிரிப்பு தீபாவளி

தீபாவளிக்கு முதல்நாள் இரவு வரை 'கத்தி’ படத்துக்கு எதிராக ஆலோசனைக் கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்பு என்று நடத்தி வந்தார் வேல்முருகன். அவரிடம் பேசினோம். ''லைக்கா நிறுவனத்தின் சார்பாக கருணாமூர்த்தி என்னிடம் உறுதிமொழிக் கடிதம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில், 'உங்கள் கோரிக்கையை ஏற்று லைக்கா பெயரை படத்தில் இருந்து நீக்கியிருக்கிறோம். படம் தொடர்பான விளம்பரங்களிலோ, படத்தின் டைட்டில் கார்டிலோ அந்தப் பெயர் இடம் பெறாது’ என்று குறிப்பிட்டிருந்தார். அவரது கடிதத்தை ஏற்று, 'கத்தி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பது என்றும், அதில் குறிப்பிட்ட அந்தப் பெயரோ, லைக்கா சம்பந்தப்பட்ட காட்சிகளோ இல்லை என்றால், எங்கள் போராட்டத்தை முழுமையாக விலக்கிக் கொள்வோம். ஒருவேளை உறுதிமொழியை மீறி இருந்தால் எங்கள் போராட்டம் தொடரும்'' என்று எச்சரிக்கையுடன் முடித்தார்.

'லைக்கா’ பெயரைத் தூக்கினால் போதும் என்பதுதான் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினரின் ஒரே வேண்டுகோள். எப்படியாவது படம் ரிலீஸ் ஆனால் போதும் என்பதே விஜய் தரப்பு எதிர்பார்ப்பாக இருந்தது. எப்படியோ இரண்டு தரப்புக்கும் சிரிப்பு தீபாவளியாக அமைந்து, 'கத்தி’ உறையில் இருந்து வெளியேறிவிட்டது!

- எஸ்.முத்துகிருஷ்ணன், எஸ்.மகேஷ்