Published:Updated:

'காங்கிரஸ் இல்லா இந்தியா!'

அமித் ஷா ஆபரேஷனில் வீழ்ந்த மகாராஷ்டிரா, ஹரியானா!

'காங்கிரஸ் இல்லா இந்தியா!'

அதிர்வேட்டுகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் பெயர்போன சீசன் இது. அதுவும் பி.ஜே.பி-யினருக்கு சரவெடி கொண்டாட்டம்தான். காரணம், சட்டசபையில் பெரும்பான்மையோடு கால்பதிக்கவே திணறிய மாநிலங்களில், கூட்டணியின்றி சிங்கிளாக களத்தில் இறங்கி, தற்போது ஆட்சிக்கட்டிலில் அமர ஆரம்பித்துள்ளது பி.ஜே.பி.

காங்கிரஸிடமிருந்து கைநழுவிய மாநிலங்கள்

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது காங்கிரஸ். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்து, ''இரு மாநிலங்களிலும் மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் பணிவோடு ஏற்றுக்கொள்கிறது'' என்று சோனியாவும், ''மாற்றத்துக்காக வாக்களித்துள்ள பொது மக்களின் தீர்பை முழுமனதோடு ஏற்கிறேன். இனிவரும் காலங்களில் அவர்களுடைய நம்பிக்கையை காங்கிரஸ் மீண்டும் பெறும்'' என்று ராகுல் காந்தியும் கூறியுள்ளனர். தங்களுக்குத் தாங்களே சமாதானம் செய்து கொள்வதைத் தவிர, வேறு வழியில்லை அவர்களுக்கு. கட்சியைக் காப்பாற்ற பிரியங்கா வரவேண்டும் என்ற குரல் மீண்டும் எழுகிறது.

கூட்டணிக்கு காத்துக் கிடக்கும் சிவசேனா

25 வருடங்களாக மராட்டியத்தில் சிவசேனாவும் பி.ஜே.பி-யும் மாறி மாறி தேர்தல்களைச் சந்தித்தன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர்கூட, ''288 தொகுதிகளில் 150 தொகுதிகளிலாவது நாங்கள் போட்டியிடுவோம். அதை ஒருபோதும் குறைக்க முடியாது'' என்று உத்தவ் தாக்கரே திட்ட வட்டமாக அறிவித்தார். அதனால், கூட்டணியில் இருந்து விலகியது பி.ஜே.பி. அதனை உணர்ந்தே 26 பொதுக்கூட்டங்களை நடத்தி, சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதன் பயனாக,  122 தொகுதிகளைக் கைப்பற்றி மராட்டிய சட்டமன்றத்தில் நுழையப் போகிறது பி.ஜே.பி. வெறும் 63 தொகுதிகளைக் கைப்பற்றிய சிவசேனாவின் நிலைமையோ கேலிக்குரிய கேள்விக்குறியாக ஆகிவிட்டது. இரண்டு கட்சிகளும் இணைந்து நின்றிருந்தால் இன்னும் கூடுதலான தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கக்கூடும். காங்கிரஸ் 'சிங்கிள் டிஜிட்’ ஆகியிருக்கக்கூடும்.

'காங்கிரஸ் இல்லா பாரதம்’

ஆட்சி அமைக்கத் தேவையான 144 இடங்களை எந்தக் கட்சிகளாலும் பெற முடியவில்லை. சிவசேனா அல்லது தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றின் ஆதரவு இருந்தால் மட்டுமே, மராட்டியத்தில்  ஆளமுடியும் என்ற இக்கட்டான சூழலில் பி.ஜே.பி சிக்கியுள்ளது.  சிவசேனாவை முந்திக்கொண்டு தேசியவாத காங்கிரஸ் பி.ஜே.பி-க்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்து விட்டது. ஆனாலும், பி.ஜே.பி-யின் மேல்மட்ட தலைவர்களின் ரத்த பாசம் சிவசேனாவுடன் மீண்டும் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்பதே.  இந்த நிலையில், ''இந்தியாவிலிருந்து காங்கிரஸை விரட்டியடித்து, காங்கிரஸ் இல்லா பாரதமாக இந்தியாவை மாற்றுவோம்'' என்கிறார் பி.ஜே.பி தலைவர் அமித்ஷா. அதற்காக எந்த முடிவையும் பி.ஜே.பி  எடுக்கத் தயாராகவும் இருக்கிறது.  

'காங்கிரஸ் இல்லா இந்தியா!'

நான் முதல்வராகக் கூடாதா?

பி.ஜே.பி - சிவசேனா கூட்டணி முறிவுக்குப் பிறகு, ''டீ விற்றவர் இந்திய நாட்டின் பிரதமராகும்போது, நான் ஏன் முதலமைச்சராகக் கூடாது?'' என்று கடுமையாக மோடியை விமர்சித்ததுடன், தனக்கும் முதல்வராகும் கனவு இருப்பதை பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. தேர்தல் முடிவுகளுக்குப் பின், ''நானாகச் சென்று பி.ஜே.பி-யிடம் பேச மாட்டேன். கூட்டணி பற்றிப் பேச அவர்கள் எப்போது வேண்டுமானாலும் என் வீட்டுக்கு வரலாம்'' என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக மோடி மற்றும் அமித் ஷாவிடம் தாக்கரே பேசியுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. பி.ஜே.பி-யில் முதல்வர் பதவிக்குக் கடுமையான போட்டி நிலவுகிறது. உத்தவ் தாக்கரேயும் முதல்வர் கனவில் மிதக்கிறார். அதனால் முதல் மந்திரி தேர்வுக் குழு கூட்டம் இழுத்துக்கொண்டே போனது.

தந்தைக்குப் பெருமை சேர்த்த வாரிசுகள்

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பீட் தொகுதியில் பி.ஜே.பி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கோபிநாத் முண்டே. அவருக்கு மத்திய அமைச்சரவையில் இலாக்கா

'காங்கிரஸ் இல்லா இந்தியா!'

ஒன்றையும் ஒதுக்கியது பி.ஜே.பி. அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்ட சில வாரங்களிலேயே கார் விபத்தில் அவர் மரணமடைந்தார். அவருக்கு மூன்று மகள்கள். அதில் மூத்த மகளான பங்கஜா முண்டே பி.ஜே.பி சார்பில், பார்லி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இளைய மகளான பிரீத்தம் முண்டே தந்தையின் பீட் நாடாளுமன்றத் தொகுதியில், போட்டி யிட்டுத் 'தேர்தல் வரலாற்றிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெண்’ என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஏழு லட்சம் வாக்குகள் வித்தியாசம்!        

கருணாநிதியைப் பின்னுக்குத் தள்ளிய கண்பத்ராவ்!

கடந்த 10 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உண்டு. ஆனால், அதையும் மராட்டிய மாநிலம், சங்கோலா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் கண்பத்ராவ் தேஷ்முக் முறியடித்துள்ளார். உழவர் மற்றும் ஊழியர்கள் கட்சி சார்பில் 11-வது முறையாக சங்கோலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவரை, ''எளிமையானவர் அரசியலுக்கு வந்து 52 ஆண்டுகளாகின்றன. இன்றும்கூட சாதாரண வீட்டில்தான் வசிக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அவரை நேரில் சென்று பார்க்கலாம். இத்தனை ஆண்டுகளில் அவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டைக்கூட சொல்லமுடியாது'' என்கின்றனர் தொகுதிவாசிகள்.      

அமித் ஷாவின் அடுத்த செக் லிஸ்ட்

பி.ஜே.பி-யில் அமித் ஷா தலைவரான பின்பு, காங்கிரஸ் கொஞ்சம் ஆட்டம் கண்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்கள் ஒவ்வொன்றும் பி.ஜே.பி வசம் வந்த நிலையில், தற்போது மராட்டியமும், ஹரியானாவும் கூடுதலாகச் சேர்ந்துள்ளதால், அமித் ஷாவின் அடுத்த செக் லிஸ்ட் தயாராகிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த இரண்டாண்டுகளில், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், பீகார், அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடக்கவிருக்கின்ற சட்டமன்றத்  தேர்தல்களுக்கான ஆரம்பகட்ட வேலைகளை பி.ஜே.பி இப்போதே முடுக்கிவிட்டுள்ளது. நாளுக்குநாள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இது கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் கடுமையாக எதிரொலித்து இருந்தது. இதனை பி.ஜே.பி தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 2017-ல் வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் வலுவான டீமை உருவாக்க அமித் ஷா திட்டமிட்டு உள்ளாராம்.

- நா.இள.அறவாழி