Published:Updated:

தி.மு.க-வுக்கு எதிராக படுகர்கள்!

நீலகிரி கிடுகிடு

''எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சண்டை போடாமல், போலீஸுக்​கோ, கோர்ட்டுக்கோ போகாமல், பேச்சுவார்த்தை மூலமே தீர்த்து விடுவார்கள். அந்த அளவு கட்டுக்கோப்பான சமூகம்'' - இவை, நீலகிரி மண்ணின் படுகர் சமூகத்​தினரின் வாழ்க்கை முறை குறித்த வர்ணிப்புகள். ஆனால், இப்போது படுகர் சமுதாயத்தின் இளம்படுகர் சங்கத்தின் கட்டட பிரச்னை, கோர்ட் வரை சென்றுள்ளது. இதுதொடர்பாக நான்கு சீமை ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மஞ்சை மோகன், ''படுகர் சங்கத்துப் படிச்ச இளைஞர்களால உருவான இந்த இளம்படுகர் சங்கம் 1962-ல உருவாகிச்சு. 1971-ல தி.மு.க ஆட்சியின்போது அரசு 25 சென்ட் நிலம் கொடுத்துச்சு. அதை வெச்சு கட்டடம் கட்டினோம். இந்தக் கட்டடத்தை நிர்வகிக்க பதிவுசெய்த அமைப்பு ஒண்ணு ஆரம்பிக்கப்பட்டு, 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களா இருக்காங்க. படுகர் இன மக்கள் வாழும் பகுதியை 'நாக்கு பெட்டானு’ சொல்வோம். இதன் தலைவர் அய்யாரு. அவர் சொல்றதுதான் முடிவு.

தி.மு.க-வுக்கு எதிராக படுகர்கள்!

2006 முதல் குண்டன்தான் இதன் தலைவரா 6 வருஷம் இருந்தாரு. இப்ப புத்திச்சந்திரன் எம்.எல்.ஏ ஆனதால, 2013-ல நடந்த எங்க தேர்தலின்போது புத்திச் சந்திரனுக்கும், குண்டனுக்கும் பிரச்னை வந்துச்சு. அதனால புத்திச்சந்திரனை தலைவரா தேர்ந்தெடுத்தோம். ஆனா, இந்தத் தேர்தல் முறைப்படி நடக்கலைனு குண்டன்

தி.மு.க-வுக்கு எதிராக படுகர்கள்!

கோர்ட்டுக்குப் போய்விட்டார். 'நாங்க தேர்தல் எல்லாம் நடத்துறதில்ல. சங்கத்துக்கு உட்பட்டுத்தான் தலைவரை தேர்ந்தெடுக்கிறோம்'னு தலைவர் கோர்ட்ல சொன்னாலும் கோர்ட் ஏத்துக்கல. சட்டப்படி தேர்தல் நடத்தணும்னு சொன்னதால பலபேரு ஓட்டுப்போடல. 3 ஆயிரம் பேர்ல 700 பேரு ஓட்டுப் போட்டதுல குண்டனை தலைவரா ஆக்கிட்டாங்க. ஓட்டுப் போட்டவங்க தி.மு.க-வைச் சேர்ந்தவங்க. இதனால சங்க கட்டடத்தைத் திறக்க முடியல. இவங்க ரெண்டு பேரும் இல்லாம சமூகமே இந்த அமைப்பை ஏற்று நடத்தலாம்னு முடிவு பண்ணி, ரெண்டு பேருக்கும் சம்மன் கொடுத்தோம். சம்மனை ஏத்துக்கிட்ட புத்திச்சந்திரன் சமூகம் சொல்றபடி நடக்கிறதா எழுதிக் கொடுத்தாரு. குண்டன் இதுக்கு ஒத்துக்காததால அவரை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தோம். அதுக்கும் அவர் ஒப்புக் காததால, குண்டனைவிட்டு சமூகம் விலகி நிற்பதுனு முடிவு செஞ்சிருக்கோம்.

சமூகத்தோட கட்டுப்பாட்டை மீறி, கோர்ட்டுக்குப் போனவர் குண்டன்தான். பல எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் இதனை நிர்வகிச்சிருந்தாலும் யாரும் தகராறு செஞ்சதில்லை. இவர் தி.மு.க-வை வைத்துத்தான் இவ்வளவும் செய்கிறார். இதனால சமூகமே தி.மு.க-வுக்கு எதிராக திரும்பியுள்ளது. எனவே தி.மு.க தலைமையிடம் இந்தப் பிரச்னையைக் கொண்டு செல்ல முடிவு

செஞ்சிருக்கோம்'' என்றார்.

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ குண்டன், ''நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் நடத்தி நான் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கேன். புத்திச்சந்திரனும் வேண்டாம், குண்டனும் வேண்டாம்னு இப்போ சொல்றது முட்டாள்தனம். நான்தான் தலைவர்னு கோர்ட் ஆர்டர் இருக்கு. நான் ஏற்கெனவே பல வருஷம் தலைவரா இருந்துட்டேன். இனியும் நான் தலைவரா இருக்கணும்னு விரும்பலை. முதல்லயே இதை நான் சொன்னேன். நானும் வேண்டாம். புத்திச்சந்திரனும் வேண்டாம்னு சொன்னேன். அப்போ யாரும் கேக்கலை. இப்போ சுப்ரீம் கோர்ட் வரை போய் உத்தரவு வாங்குனதுக்கு அப்புறம் இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?. இதுவரைக்கும் இப்படி ஒரு பிரச்னை வந்ததே இல்லை. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னாடிதான் பிரச்னையே ஆரம்பிச்சது. புத்திச்சந்திரன் எம்.எல்.ஏ ஆனதும், 'அரசியலை உள்ளே கொண்டு வராதே’னு சொன்னேன். ஆனா அரசியலை கொண்டு வந்து பிரச்னை பண்ணிட்டாங்க. என்னைவிட்டு சமூகத்தை எப்படி ஒதுக்க முடியும்? முதல்ல 4 சீமைகளை ஒருங்கிணைச்சு கூட்டம் நடத்தட்டும்'' என்றார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தி.மு.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்து​மோ என அஞ்சுகின்றனர் தி.மு.க-வினர். ''நீலகிரி மாவட்டம் தி.மு.க-​வோட கோட்டை. கடந்த சட்ட​மன்றத் தேர்தல்ல தமிழகம் முழுக்க தி.மு.க தோத்தாலும் நீலகிரியில போட்டியிட்ட ரெண்டு இடத்துலயும் ஜெயிச்சது. ஆனா இந்தப் பிரச்னைக்கு அப்புறம் வாக்கு வங்கி பலவீனம் ஆயிடுச்சு'' என தி.மு.க நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

- ச.ஜெ.ரவி