Published:Updated:

''சமுத்திரத்தில் கிடந்தாலும் சங்குக்கு ஜலதோஷம் பிடிப்பதில்லை!''

கட்சி மாறமாட்டேன் என்கிறார் வாகை சந்திரசேகர்!

எம்.ஜி.ஆருக்குப் பிறகு தி.மு.க-வில் இருந்து நடிகர்கள் ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், சரத்குமார், தியாகு என்று வரிசையாக விலகினர். வாகை சந்திரசேகர் மட்டும் அடம்பிடித்து ஸ்டாலின் நெஞ்சில் இடம்பிடித்துக் கொண்டார். சமீபத்தில் 'அ.தி.மு.க-வில் வாகை சந்திரசேகர்’ என்ற செய்தியைப் பார்த்து நீண்டகால தி.மு.க பக்தர்கள் ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தினர். இந்த சூழ்நிலையில் வாகை சந்திரசேகரை சந்தித்தோம். நாம்

''சமுத்திரத்தில் கிடந்தாலும் சங்குக்கு ஜலதோஷம் பிடிப்பதில்லை!''

கேள்வியை ஆரம்பிக்கும் முன்பே அவர் பேச ஆரம்பித்தார்.

''நான் 35-வருடங்களாக தி.மு.க-வில் இருக்கிறேன். எனக்குப் பின்னால் வந்து சேர்ந்த நிறைய நடிகர்கள் கட்சிக்குள் வந்தார்கள், கட்சியைவிட்டு சென்றார்கள். நான் மட்டும் தலைவர் கலைஞர், தளபதி ஸ்டாலினை மனதில் ஏற்று இன்று வரை உறுதியாக இருக்கிறேன். 1984-ல் கலைஞர், 'சிவாஜி, எஸ்.எஸ்.ஆருக்குப் பிறகு, நீதான் தமிழ் வசனத்தைச் சரியாக உச்சரிக்கிறாய். அதனால், நான் கதை வசனம் எழுதிய 'தூக்குமேடை’ நாடகத்தில் நடி’ என்றார். அப்போது, எம்.ஜி.ஆர் ஆட்சி. சினிமாவைச் சேர்ந்த பலர் தடுத்தார்கள்.  'தூக்குமேடையில் நடிக்காதே. கலைஞர் வசனத்தைப் பேசாதே. எம்.ஜி.ஆர் கோபத்துக்கு ஆளாவாய்’ என்று என்னைப் பயமுறுத்தினார்கள். அச்சத்தைத் தூக்கி எறிந்துவிட்டு 'தூக்கு மேடை’ படத்தில் நடித்தேன்.

ஜெயலலிதா முதல்வரானதற்கு நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து அனுப்பினார்கள். அப்போது, தலைவர் சரத்குமாரும் செயலாளர் ராதாரவியும் 'பொருளாளர்’ என்று என் பெயரைப் போடச் சொன்னார்கள். 'ஒருபோதும் என் பெயரைப் போடாதீர்கள்’ என்று சொன்னேன். சிறந்த மேயராகப் பணியாற்றியதற்காக தளபதி ஸ்டாலினுக்கு வெளிநாட்டில் 'கெண்டக்கி கேனல் விருது’ கொடுத்தார்கள். அப்போது தளபதி ஸ்டாலின், 'குறிஞ்சி மலர்’ தொடரில் நடித்த நடிகர். அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததோடு, நிறைவேற்றியும் காண்பித்தேன். தளபதி ஸ்டாலினை தவறாக விமர்சித்தார் என்கிற ஒரே காரணத்துக்காக தி.மு.க-வில் இருந்த குஷ்புவையே கடுமையாக எதிர்த்தேன். 'சமுத்திரத்தில் கிடந்தாலும் சங்குக்கு ஜலதோஷம் பிடிப்பதில்லை’ என்கிற மாதிரி நடிகர் சங்கத்தில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராதாரவியோடும் ஜெயலலிதாவை ஆதரிக்கும் சரத்குமாரோடும் பழகினாலும் நான் தி.மு.க-வின் கம்பீரத்தை ஒருநாளும் இழந்தது இல்லை!

திரைப்பட நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல், இளைய ராஜா ஆகியோரை மேடையில் நிற்க வைத்துவிட்டு, ஜெயலலிதா உட்கார்ந்து இருந்ததைக் கண்டித்து அறிக்கை விட்டேன். அதைப் பார்த்து ரஜினிகூட என்னிடம் போனில் பேசினார். தற்போது தமிழ் சினிமா சார்பில் ஜெயலலிதாவுக்காக உண்ணாவிரதம் இருந்தனர். தி.மு.க-காரனாகிய நான் எதிர்ப்புத் தெரிவித்து அதில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தேன். அப்படிப்பட்ட நான், 'அ.தி.மு.க.வில் சேரப் போகிறேன்’ என்று செய்தி பரப்புகிறார்கள்.''

''யார் இதனைப் பரப்பியது?''

''என்னைப் பற்றி தவறான செய்தியை தி.மு.க வட்டாரம் சொன்னது என்கிறார்கள். நான் தி.மு.க-வின் அங்கம். என் மீது நில அபகரிப்பு வழக்கு போடப்பட்டு இருக்கிறது. 'என்னை, தளபதி கண்டுகொள்ளவில்லை’ என்று அவர்களாகவே ஒரு காரணம் சொல்கிறார்கள். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க தரப்பில் ஆஜரான நான்கு வக்கீல்களில் ஒருவரான, குமரேசனை உடனடியாக என் வழக்குக் குறித்து விசாரிக்குமாறு திண்டுக்கல்லுக்கு அனுப்பியவர் தளபதி ஸ்டாலின்தான். அதனால் அவருக்கும் எனக்கும் எந்த மன வருத்தமும் இல்லை.''

''இதுபற்றி ஸ்டாலின் உங்களிடம் பேசினாரா?''

''சொன்னா நம்ப மாட்டீங்க... காலையில் செய்தியைப் பார்த்தவுடன் முதலில் வந்தது தளபதி போன்தான். 'சந்திரசேகர் உங்களைப்பற்றி எனக்கும், கட்சிக்கும் நல்லா தெரியும். நீங்க ஒண்ணும் ஃபீல் பண்ணாதீங்க. இதுமாதிரி செய்தியை அலட்சியமா விட்டுடுங்க...’ என்று சொன்னார். அடுத்து தலைவரின் பி.ஏ. சண்முகநாதன் சார் போன். 'தலைவர் ஒண்ணும் வருத்தப்படாதேன்னு சொல்லச் சொன்னார். அந்தச் செய்திக்கு ஒரு மறுப்பு கொடுக்கச் சொன்னார்’ என்றார். 'நிச்சயமாக இது அ.தி.மு.க-வினர் பரப்பிய செய்தியாக இருக்காது. உங்களோட நெருக்கமா, நட்பா பழகுற யாரோதான் இதை கிளப்பிவிட்டாங்களா?’ என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். எதிரிகளைத் தைரியமாக எதிர் கொள்வேன். துரோகிகளை என்ன செய்வேன்? என்று பொறுத்திருந்து பாருங்கள்!

தளபதி துணை முதல்வராக இருந்தபோது, ஒரு பத்திரிகை, அவருடைய பிறந்தநாளுக்கு சிறப்பு மலர் வெளியிட்டு இருந்தது. அதில், தளபதி குறித்து ரஜினி அளித்த பேட்டியில், 'திரைப்பட விழா ஒன்றில் நானும், ஸ்டாலினும் அருகருகில் அமர்ந்து இருந்தோம். அப்போது நிறைய நடிகர்கள் ஸ்டாலினிடம் வணக்கம் வைத்துவிட்டுச் சென்றனர். எல்லோருக்கும் பதிலுக்கு வணக்கம் வைத்தார். ஒரேயொருவர் அருகில் வந்தபோது எழுந்து நின்று, வணக்கம் வைத்து சிரித்தபடி, அவருடைய குடும்ப நலத்தை விசாரித்தார். அவர் பெயர் வாகை சந்திரசேகர். அந்த அளவுக்கு ஸ்டாலின் மனசுல நல்ல இடத்தையும், கட்சியில நல்ல பெயரையும் சம்பாதிச்சு இருக்கார் சந்திரசேகர்’ என்று ரஜினி சார் எனக்கு சர்டிஃபிகேட் கொடுத்து இருந்தார். அந்த நம்பிக்கைதான் நான் தி.முக-வில் சம்பாதித்தது. அதற்கு களங்கம் ஏற்படுத்தும் காரியத்தை எப்போதும் செய்ய மாட்டேன்!''

- எம். குணா, படம்: வீ.நாகமணி