Published:Updated:

அகதிகள் முகாம் முற்றுகை போராட்டம்: வைகோ கைது!

அகதிகள் முகாம் முற்றுகை போராட்டம்: வைகோ கைது!
அகதிகள் முகாம் முற்றுகை போராட்டம்: வைகோ கைது!
அகதிகள் முகாம் முற்றுகை போராட்டம்: வைகோ கைது!

சென்னை: இலங்கை அகதிகள் முகாம்களை மூட வலியுறுத்தி  முற்றுகை போராட்டம் நடத்த சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அக்க்ட்சியை சேர்ந்த தொண்டர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி கரையான் சாவடியில் இலங்கை அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு செந்தூரன், தர்கர், பகீரதன், பிரதீபன், பரமேஸ்வரன், கங்காதரன், ஜெயமோகன், சந்திரகுமார் ஆகிய 8 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி முகாம் உள்பட அனைத்து முகாம்களிலும் உள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக் கோரி பூந்தமல்லி முகாமில் செந்தூரன் கடந்த 6-ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
 
இந்நிலையில், அவரது உயிரை காப்பாற்றக்கோரியும்,முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் மதிமுக சார்பில் இன்று காலை முற்றுகை போராட்டம்  நடந்தது.

மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ இதில் கலந்து கொள்வதற்காக குமணன் சாவடி வந்தார். போராட்டத்தை விளக்கி வைகோ பேசினார்.அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சவை கண்டித்தும்,அகதிகள் முகாமை மூட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
 
ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய வைகோ,"பூந்தமல்லி அகதி முகாமில் செந்தூரன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உயிரை  காப்பாற்ற வேண்டும். அவரை கடந்த வருடம் ஜுன் மாதம் 18-ம் தேதி உரிய ஆவணம் இல்லாமல் வந்ததாக செங்கல்பட்டு முகாமில் அடைத்தனர்.பின்னர் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு 2 மாதம் ஜெயிலில் இருந்தார்.அவர் மீது ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்றதாக அங்கு வழக்கு போடப்பட்டது.ஆனால் அங்குள்ள நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
 
ஆனால் தமிழக போலீசார் செந்தூரனை கேரள போலீசார் உதவியுடன் கைது செய்து செங்கல்பட்டு முகாமில் அடைத்தனர். அங்கு அவர் தன்னை விடுதலை செய்யக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். அதிகாரிகளும், கியூ பிரிவு போலீசாரும் உத்தரவாதம் அளித்ததால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். ஆனால் சொன்னபடி அதிகாரிகள் நடந்து கொள்ளவில்லை.
 
இதற்கிடையே செந்தூரன் உள்பட 5 பேரை பூந்தமல்லி முகாமுக்கு மாற்றி விட்டனர். இங்கு அவர் 6-ம் தேதி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.அவரது உயிரை காப்பாற்ற வேண்டும், அகதி முகாம்களை மூட வேண்டும்.இதற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறோம்”என்றார்.
 
அதனைத் தொடர்ந்து பூந்தமல்லி முகாம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக வைகோ  தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்.அவர் மேடையில் இருந்து இறங்கியதும் அங்கு தயாராக இருந்த போலீசார் வைகோ வையும்,நிர்வாகிகளையும் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
 

##~~##
இந்த போராட்டத்தில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா,மாவட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன்,இளைஞர் அணி துணை செயலாளர் பூவை கந்தன்,நகர செயலாளர் சங்கர் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
இதற்கிடையே வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து தொண்டர்கள் பூந்தமல்லி- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டன.போலீசார் அவற்றை வேறு பாதையில் திருப்பி விட்டனர்.
 
மறியலின்போது பூந்த மல்லி புதுச்சத்திரத்தைச் சேர்ந்த மதிமுக கிளை செயலாளர் செல்லக்கனி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அவரை போலீசார் காப்பாற்றி கைது செய்தனர்.