Published:Updated:

பிரைவசியை உறுதிசெய்த உச்சநீதிமன்றம்... தீர்ப்பை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?! #RightToPrivacy

பிரைவசியை உறுதிசெய்த உச்சநீதிமன்றம்... தீர்ப்பை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?! #RightToPrivacy
பிரைவசியை உறுதிசெய்த உச்சநீதிமன்றம்... தீர்ப்பை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?! #RightToPrivacy

'தனிமனித ரகசியம் காப்பது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமையே' என பிரைவசி குறித்த வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். ஆதார் அட்டைக்காக மக்களின் தனிமனித தகவல்களைச் சேகரிப்பது, தனிநபர் ரகசியம் காக்கும் உரிமைக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, தொட்டதற்கெல்லாம் ஆதார் அட்டை கட்டாயம் என அறிவித்துவரும் மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவைத் தரும்.

வாட்ஸ்அப் போன்ற அப்ளிகேஷன்கள் பயனாளர்களின் பிரைவசியைத் திருடுவதாக எழுந்த சர்ச்சையில் ஒரு நிலைப்பாடும், ஆதார் தொடர்பான பிரச்னையில் ஒரு நிலைப்பாடும் இருந்துவந்தது. பிரைவசி தொடர்பான வழக்குகளைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமையா என்பது குறித்து விசாரிக்க முடிவுசெய்தது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான  ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 'தனிமனித ரகசியம் காப்பது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமையே' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த  ஒன்பது நீதிபதிகளுமே, தனிமனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என்ற கருத்தில் மாறுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரைவசி என்றால் என்ன?

பிரைவசி எனப் பொதுவாக அழைக்கப்பட்டாலும், தனிநபர் ரகசியம் மற்றும் அந்தரங்கத் தகவல்கள் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பிரைவசி குறித்த போதுமான புரிதல் பலரிடமும் இல்லை. 'நான் வெளிப்படையானவன். என்னுடைய எந்தத் தகவல்களையும் வெளியே சொல்லத் தயங்கமாட்டேன்' எனப் பலரும் சொல்லிக்கேட்டிருப்போம். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் முந்தைய நாள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதில் தொடங்கி காதலிக்கு அன்பளிப்பாக வழங்க வாங்கியிருக்கும் பரிசுப்பொருள் வரை அத்தனைத் தகவல்களையும் வெளியிடுவது ஒருவரின் தனிநபர் ரகசியம். இவை வெளியே தெரிந்தால் பிரச்னை இல்லை என அவர் நினைக்கலாம். ஆனால், இவ்வளவு வெளிப்படையாக இருக்கும் நபர்கள், தங்களின் சமூக வலைதளங்களின் பாஸ்வேர்டை வெளியே சொல்லுவதில்லையே? அதுதான் தனியுரிமை. இந்திய அரசியல் சாசனத்தின்படி, ஒவ்வொருவருக்கும் தனியுரிமை உண்டு.

மாதக்கடைசியில் வங்கிக்கணக்கில் இரண்டு இலக்கத் தொகையை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்வது தனிநபர் ரகசியம். இது அந்த நபரின் சுய விருப்பத்தில் நடக்கிறது. ஆனால், அதே நபர் எதற்காக செலவு செய்திருக்கிறார். அவரின் வருமானம் எவ்வளவு போன்ற தகவல்களை அவரின் சம்மதமின்றி மற்ற நபரோ, நிறுவனமோ திரட்டி அதன் மூலம் ஆதாயம் பார்ப்பது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். நமக்கே தெரியாமல் நம்மைப் பற்றிய தகவல்கள் திருடப்படுவதுதான் பிரச்னை. அவை தவறான விஷயங்களுக்குப் பயன்படும் ஆபத்தும் இருக்கிறது.

வியாபாரமாகும் தனிமனிதத் தகவல்கள் :

'ஏதாவதொன்று இலவசமாகக் கிடைக்கிறது என்றால், நீங்கள் தான் அங்கே வியாபாரப் பொருள்' என்று டெக் உலகத்தில் பிரபலமான சொல்லாடல் ஒன்று உண்டு. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் சேவைகள் என அனைத்துக்கும் இந்த சொல்லாடல் பொருந்தும். ஒரு பொருளை இலவசமாகப் பயன்படுத்த வைத்து, அதன்மூலம் அதைப் பயன்படுத்தும் பயனாளரின் தகவல்களைத் திரட்டி, அந்தத் தகவல்களை வைத்து வியாபாரம் செய்வதுதான் இந்நிறுவனங்களின் முக்கியமான நோக்கம்.

இன்றைய தேதியில், கூகுளுக்குத் தெரியாத ரகசியமே கிடையாது. சில வருடங்களுக்கு முன், ஜிமெயில் மூலம் அனுப்பும் அத்தனை மெயில்களையும் அந்நிறுவனம் படிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மெயிலில் இருக்கும் தகவல்களுக்கு ஏற்ப விளம்பரங்கள் காட்டப்பட்டன. ஓர் இணைப்பை அனுப்புவதாக மெயிலில் டைப் செய்து, எந்த கோப்பையும் இணைக்காமல் சென்ட் பட்டனைத் தட்டினால், 'நீங்கள் எந்த கோப்பையும் இணைக்கவில்லை பாருங்கள்' என ஜிமெயில் எச்சரிக்கை காட்டியது. பிரைவசியை காவு வாங்குகிறது என எதிர்ப்புகள் கிளம்பியதும், ஆட்டோமேட்டட் பிராஸசிங் காரணமாக அனைத்தையும் படிக்க வேண்டியதாக இருந்தது என முதலில் சமாளித்தாலும், அதன்பின் இவற்றை நிறுத்திக்கொண்டது கூகுள் நிறுவனம்.

தனிமனிதத் தகவல்களைப் பாதுகாப்பதில் ஐரோப்பிய யூனியன் மற்றும் வளர்ந்த நாடுகள் எப்போதுமே கில்லி. அதற்கான சட்டதிட்டங்களும் அங்கு கடுமையாக இருக்கின்றன. வாட்ஸ்அப் நிறுவனத்தை, ஃபேஸ்புக் விலைக்கு வாங்கிவிட்டபின்னரும், வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்களை அக்சஸ் செய்த குற்றச்சாட்டுக்காக பெரும் அபராதத் தொகையை அந்நிறுவனம் கொடுக்க வேண்டியிருந்தது.

அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்வதற்காக, லேப்டாப் ஒன்றைப் பள்ளி நிர்வாகமே தந்திருக்கிறது. அதில், மாணவன் வீட்டுப்பாடம் செய்வதைக் கண்காணிக்க அப்ளிகேஷன் ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். அது கேமராவை ஆன் செய்து, மாணவனின் வீட்டில் நடப்பவற்றைப் பள்ளி நிர்வாகத்துக்குக் காட்டியிருக்கிறது. ‘எனக்குத் தெரியாமல் என் வீட்டை நீங்க எப்படிப் பாக்கலாம்’ என மாணவனின் தந்தை நீதிமன்றம் சென்றிருக்கிறார். ‘நாங்க மாணவனின் நல்லதுக்குத்தானே செய்கிறோம்’ எனப் பதில் சொல்லியிருக்கிறது நிர்வாகம். ஆனால், முடிவில் மாணவனின் தந்தைக்குப் பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடு தரச் சொன்னது நீதிமன்றம்.

உணவு, உடை, உறைவிடம் போல இன்றைய யுகத்தில் பிரைவசி என்பதும் ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவையாகிவிட்டது. ஒவ்வொரு மனிதனுக்கும் இருள் பக்கம் என ஒன்றிருக்கும். அவற்றை அந்த மனிதனுக்குத் தெரியாமல், அவரின் சம்மதமின்றிப் பயன்படுத்துவது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள தலைவர்கள் :

இந்த தீர்ப்பானது ஆதார் அட்டை விவகாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு இனி என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.