Published:Updated:

விவேகானந்தரும் தர்மபாலாவும் ஒன்றா?

பழ.நெடுமாறன்

சிங்கள தேசிய இனவெறிக்கு வித்திட்ட அனகாரிக தர்மபாலா என்ற புத்த பிட்சுவின் அஞ்சல் தலையை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டு அவரைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். இது தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வேல் பாய்ச்சி இருக்கிறது.

தர்மபாலா புத்தத் துறவி வேடம் பூண்ட சிங்கள பேரினவாதி. அவரது துறவுக்கோலத்துக்கும் அவருடைய செயற்பாட்டுக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது என்பதை அவரது வரலாறு அறிந்தவர்கள் அறிவார்கள்.

விவேகானந்தரும் தர்மபாலாவும் ஒன்றா?

''எழில்மிக்க இந்த இலங்கைத் தீவானது ஆரிய சிங்களர்களால் சொர்க்க பூமியாக ஆக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்நிய காட்டுமிராண்டிகள் படையெடுத்துக் கைப்பற்றி அதை அலங்கோலமாக்கிவிட்டனர். சிங்கள மக்களுக்கு மத விரோதம் என்றால் என்னவென்று தெரியாது. ஆனால், கிறிஸ்தவமும் பல தெய்வ வழிபாடுகொண்ட இந்து மதமும் இங்கு நுழைந்து விலங்குகளைப் பலிகொடுத்து, திருடுதல், விபசாரம், ஒழுக்கச் சீரழிவு, மது போன்றவற்றைப் பரப்பி சிங்கள மக்களை மயங்கிக் கிடக்க வைத்தன'' என்றும்

''அந்நியர்களான முகமதியர்கள் கல்நெஞ்சக் கடும் வட்டியாளரான ஷைலக்கைப் பின்பற்றி யூதர்களைப்போல  நம்முடைய நாட்டில் செல்வந்தர்களாக வாழ்கிறார்கள். தென் இந்தியர்களான முகம்மதியர்கள் இலங்கைக்கு வந்து அப்பாவிகளான நம்முடைய மக்களை ஏமாற்றி வணிகத் துறையில் கொள்ளை லாபம் அடித்தனர். ஆனால், நமது மக்கள் பின்தள்ளப்பட்டார்கள்'' என்றும் பேசியவருக்குத்தான் இந்தியாவில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. தர்மபாலாவும் அவருடைய கூட்டாளிகளும்

விவேகானந்தரும் தர்மபாலாவும் ஒன்றா?

இலங்கையை இன வெறி நாடாக மாற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்தியாவிலும் இலங்கையிலும் பிரம்மஞான சபையை தோற்றுவித்த திருமதி பிளாவட்ஸ்கி, கர்னல் ஆல்காட் ஆகிய இருவரும் இலங்கை வந்து புத்த மதத்தில் சேர்ந்தார்கள். தொடக்கத்தில் அவர்களுடன் இணைந்துச் செயல்பட்ட தர்மபாலா, பிறகு அவர்களை அந்நியர்களாகக் கருதி வெறுத்தார். 'பிரம்மஞான சபை என்பது கிருஷ்ண வழிபாட்டைப் பரப்புவதற்கான ஒரு அமைப்பு’ எனக் கடுமையாகச் சாடினார்.

1893-ம் ஆண்டில் சிகாகோவில் உலக சர்வசமய மாநாட்டில் விவேகானந்தர் கலந்துகொண்டு அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார். அந்த மாநாட்டில் தர்மபாலாவும் கலந்துகொண்டார். எனவே, அவரை விவேகானந்தரோடு ஒப்பிட்டு  அஞ்சல் தலை வெளியிட்டதை நியாயப்படுத்த பி.ஜே.பி முயற்சி செய்கிறது. சிகாகோ மாநாட்டில் பேச எழுந்த விவேகானந்தர், 'சகோதர, சகோதரிகளே’ எனத் தொடங்கியபோது அங்கு குழுமியிருந்த அனைத்துச் சமயத்தைச் சேர்ந்தவர்களும் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். பிற சமயங்களைச் சேர்ந்தவர்களையும் சகோதர, சகோதரிகளாகக் கருதிய பேருள்ளம் படைத்த விவேகானந்தரைப் பிற மதத்தினரை வெறுத்த தர்மபாலருடன் ஒப்பிடுவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல.

இந்தியாவில் உள்ள புத்த கயாவில் வழிபடுவதற்காக 1891-ம் ஆண்டில் தர்மபாலா வந்தபோது, அங்கு இந்து புரோகிதர் ஒருவர் வழிபாடு செய்வதைப் பார்த்து கொதித்தெழுந்து போராடினார். அந்தக் கோயிலில் இருந்து இந்து புரோகிதரும் வழிபட வரும் இந்துக்களும் அகற்றப்பட வேண்டும் என பிரசாரம் செய்தார். இத்தகையவர்க்குத்தான் இந்து மதமே இந்தியாவின் மதம் எனக் கூறும் பி.ஜே.பி ஆட்சி, அஞ்சல் தலை வெளியிட்டுப் புகழ்ந்துள்ளது.

சிங்கள இனவெறித் தந்தையான தர்மபாலா, ஈழத் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல, இந்து சமயத்துக்கும் எதிராகச் செயல்பட்டவர். அவருக்கு அஞ்சல் தலையை வெளியிடுகிற பி.ஜே.பி அரசு, ஒட்டுமொத்த தமிழர்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.

அதே இலங்கையில் அதே காலகட்டத்தில் பிறந்த  தமிழரான ஆனந்த குமாரசாமி, லண்டனில் படித்து முனைவர் பட்டம் பெற்றவர்.

1910-ம் ஆண்டில் இந்தியாவில் கலைப் பயணம் செய்தார். இந்தியா முழுவதும் சென்று பல்வேறு கோயில்களிலும் வேறு இடங்களிலும் உள்ள சிற்பங்களையும் சிலைகளையும் அபூர்வ ஓவியங்களையும் கண்டறிந்து அவற்றைக் குறித்து இந்திய கலைகளின் சிறப்பு, இராஜபுதன ஓவியங்கள், சிவ நடனம் போன்ற தலைப்புகளில் ஆங்கிலத்தில் அவர் எழுதிய நூல்கள் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அலகாபாத்தில் ஒரு கலைக்காட்சியை உருவாக்க முயற்சி செய்தார். ஆனால், ஆதரவு அளிப்பதற்கு யாரும் இல்லை. எனவே, அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகருக்குச் சென்று இந்திய சிற்பக்கலை மற்றும் கிழக்கு நாடுகளின் சிற்பக் கலைகள் ஆகியவற்றை எல்லாம் தொகுத்து அருங்காட்சியகம் ஒன்றை அமைத்து அதன் தலைவராகத் தொண்டாற்றினார்.

தமிழ்நாட்டில் அமராவதியில் தான் கண்டெடுத்த சிலைகளைக்கொண்டு யாழின் வடிவம் இதுதான் என்பதை முதல் முதலாக வரையறுத்துக் கூறிய பெருமைக்கு உரியவர்.

இந்திய கலைகளின் சிறப்பை உலகறியச் செய்த ஆனந்த குமாரசாமிக்கு அஞ்சல் தலையை வெளியிடவோ, வேறு சிறப்பைச் செய்யவோ இந்திய அரசு முன்வரவில்லை. காரணம், அவர் ஒரு தமிழர்.

அடுத்த கட்டுரைக்கு