Published:Updated:

''தமிழர் பெருமை சொன்ன கல்வெட்டுகள்!''

நாகையில் தமிழ் மண்ணே வணக்கம்!

''தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்வதுதான், அறிவின் திறவுகோல். 'தமிழ் மண்ணே வணக்கம்’ நிகழ்ச்சியின் நோக்கமும் அதுதான்'' என்று பேச ஆரம்பித்தார் எழுத்தாளர் சு.வெங்கடேசன். நாகப்பட்டினம் சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில், 'தமிழ் மண்ணே வணக்கம்’ நிகழ்ச்சி அரங்கேறியது.

 அதில் பேசிய சு.வெங்கடேசன், ''வரலாற்றுத் துறையில், பண்பாட்டுத் துறையில் எவற்றை நாம் இழந்திருக்கிறோம் என்பதைப் பகிர்ந்துகொள¢ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஐரோப்பியச் சந்தையில், மிளகு விலை 3 டாலர் உயர்ந்ததால் ஏற்பட்ட விளைவு... இந்தியா 450 ஆண்டுகளாக அடிமை நாடாக இருந்தது. நாம், மொழி சார்ந்தோ, பண்பாடு சார்ந்தோ தூரத்தில் இருக்கி¢றோம். மின்மயானம் வந்த பிறகும்கூட, கொள்ளிச் சட்டியை நாம் விடுவதாக இல்லை. ஒரு பழக்கத்தின் அர்த்தம் மாறிவிட்டது. வாழ்க்கை மாறிவிட்டது. ஆனால், பழக்கம் மாறாமல் இருக்கிறது. அந்தப் பழக்கத்தின் அர்த்தம் புரிந்தால், நாம் நிச்சயம் மாறுவோம்.

''தமிழர் பெருமை சொன்ன கல்வெட்டுகள்!''

நம் சமூகத்தில், மேல் ஆடை அணியும் உரிமை சாமானியனுக்கு இல்லாமல் இருந்தது. 1920-ல் தந்தை பெரியார் நாகையில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றார். அவரை, மேல்சட்டை அணியாத ஒருவர் வரவேற்றார். அவரை அழைத்த பெரியார், 'ந¦ ஏன் மேலாடை அணியவில்லை?’ என்று கேட்டார். 'எங்கள் ஊரில் மேல்தட்டு மக்களெல்லாம் இருக்கிறார்கள்’ என¢று அவர் பதில் சொன்னார். 'நீ ஒரு சுயமரியாதைத் தமிழன்’ என்று சொல்லி, தனக்குப் போர்த்துவதற்காக வைத்திருந்த துண்டை எடுத்து அந்த மனிதருக்குப் போர்த்திவிட்டு, 'இனிமேல் நீயும் மேலாடை அணிய வேண்டும்’ என்று கூறினார். மண் என்பது மக்களும் பண்பாடும் நிறைந்தது. மொழி என்பது பண்பாடும், வாழ்க்கையும் இணைந்தது. எந்தப் பண்பாட்டில் இலக்கியம் தோன்றியது, கல்வி தோன்றியது என்று புரிந்துகொள்ளாமல், நம்முடைய பண்பாட்டை நாம் இழந்துவிட்டோம்.

இந்தியாவில் 70 ஆயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில், 45 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்மொழி கல்வெட்டுகள். இந்தியாவின் அறிவின், இலக்கியத்தின், சிந்தனையின் வெளிச்சமாக விளங்கியது தமிழ் மொழிதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அசோகரின் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான், இந்தியா அறிவுச் சமூகமாகப் போற்றப்பட்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலகத்தின் மூத்த மொழியான கிரேக்கத்தில்கூட ஏழு பெண் எழுத்தாளர்கள்தான் இருந்தார்கள். ஆனால், சங்க இலக்கிய தமிழ்ச் சமூகத்தில் 47 பெண் தமிழ் எழுத்தாளர்கள் இருந்தார்கள். தமிழ்ச் சமூகம் எவ்வளவு பழைமையானது, பெருமை வாய்ந்தது. 'கீழக்கரை’ என்ற கிராமத¢தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுதான், கல்லணையை அடையாளம் காட்டியது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பாரம்பர்யம் வலிமைமிக்கதாக மட்டுமல்ல, அறிவியலில், மருத்துவத்தில், மொழியியலில், சமத்துவத்தில் உயர்ந்து இருந்திருக்கின்றன. ஆகவே, நம் மண்ணின் பெருமையையும், வரலாற்றையும் உயர்த்த வேண்டும். அதைக் குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்படும் தமிழ் மண்ணே வணக்கத்தின் 'மைய அச்சு’வை அடுத்த தலைமுறைக்கும் தூக்கிச் செல்ல வேண்டும்'' என்று உரையை நிறைவு செய்தார்.

'மாறி வரும் உணவுப் பழக்கம்’ குறித்து பேசினார், இயற்கை மற்றும் உணவியல் வல்லுநர் மருத்துவர் கு. சிவராமன். ''உடைகளில் மட்டுமல்ல, உணவு விஷயத்திலும் நவீனம் என்ற பெயரால் மிகப் பெரிய சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். உணவுப் பழக்கவழக்கங்களால் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, புற்றுநோய் என வாழ்வியல் நோய்கள் நம்மைத் தொற்றிக்கொண்டிருக்கின்றன. பழங்களில் கொய்யாதான் மிகவும் சத்தானது என்று உலக அளவிலான ஆய்வு அறிக்கையில் சொல்கிறார்கள். ஆனால், அதை நாம் ஏளனமாகப் பார்க்கிறோம். சிறுதானியங்கள் எவ்வளவு சிறந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை நாம் உட்கொள்ளத் தயங்குகிறோம். தெரியாத உணவுகளை உண்பதைவிட, நமக்கு நன்கு அறிந்த நம்முடைய பாரம்பர்ய உணவுகளை உண்பதே சிறந்தது. அதுதான், நம்மை நோய்களில் இருந்து காப்பாற்றும். நம்முடைய பாரம்பர்ய உணவுகளை நோக்கி நம் மக்களைத் திருப்புவோம்'' என்றார் கு.சிவராமன்.

நம் அடுத்த பயணம் தர்மபுரியில்!

படங்கள்: கே.குணசீலன்

அடுத்த கட்டுரைக்கு