
'ஆட்டுக்குத் தாடி எதற்கு, நாட்டுக்கு கவர்னர் எதற்கு?' என்று அன்று கேட்டவர்கள், இன்று தமிழ்நாட்டுக்கு முழுநேர கவர்னர் வேண்டும் எனக் கேட்கிறார்கள் என்று தி.மு.க-வை கேலிசெய்யும் வகையில் தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டரில் தமது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி வழங்கிய ஆதரவை 19 எம்.எல்.ஏ-க்கள் வாபஸ் வாங்கியதால், அவருக்குப் பெரும்பான்மை இல்லாத சூழல் நிலவிவருகிறது. எனவே, எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிவருகின்றன. இதுகுறித்து, இன்று துரைமுருகன் தலைமையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆளுநரைச் சந்தித்து முறையிட்டனர். ஆளுநர் உடனடி நடவடிக்கையை வலியுறுத்தும் தி.மு.க-வை கேலிசெய்யும் விதமாக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், 'ஆட்டுக்குத் தாடி எதற்கு, நாட்டுக்கு கவர்னர் எதற்கு? என்று அன்று கேட்டவர்கள், இன்று தமிழ்நாட்டுக்கு முழுநேர கவர்னர் வேண்டும் எனக் கேட்கிறார்கள்' என்று பதிவிட்டுள்ளார். அண்ணா, ஒருமுறை ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்னர் எதற்கு? என்று கூறியிருந்தார். அதைக் குறிப்பிட்டு தமிழிசை இவ்வாறு பதிவிட்டுள்ளார்.