Published:Updated:

ஆரம்பித்ததும் நானே... முடித்ததும் நானே!

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி

12 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராகி இருக்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அதிரடி மற்றும் பரபரப்பு கருத்துகளுக்குப் பெயர் போன அவர், இப்போது எதையுமே நிறுத்தி நிதானமாகக் கையாளுகிறார். எதிர்க் கட்சிகளின் நெருக்கடி, சொந்தக் கட்சிக்காரர்களின் கொசுக்கடி ஆகிய இரண்டும் இன்னும் தொடங்காததால்கூட இருக்கலாம். அவரைச் சந்தித்தோம்.

ஆரம்பித்ததும் நானே... முடித்ததும் நானே!

 ''மாநிலத் தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா... இந்தப் பதவிக்காகப் பல தலைவர்கள் கடுமையாக முயற்சித்தார்களே?''

''பதவிக்குக் கடும் போட்டி இருந்தது உண்மைதான். ஆனால், அதை போட்டி என்று சொல்ல முடியாது. கட்சிக்காகப் பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் என்று எடுத்துக்கொள்ளுங்கள். அந்த விருப்பம் காரணமாகப் பலரும் ஆசைப்பட்டிருக்கலாம். அது அவர்களுடைய உரிமை. எனக்குத் தலைவர் பதவி மீண்டும் கிடைக்கும் என்பதைத் துளிகூட எதிர்பார்க்கவில்லை. இதற்காக நான் யாரிடமும் சிபாரிசுக்குச் சென்றதும் கிடையாது.''

''தலைவரான பிறகு உங்களுக்கு முன் உள்ள அதிகப்படியான சவால்கள் என்னென்ன?''

ஆரம்பித்ததும் நானே... முடித்ததும் நானே!

''மிகப்பெரிய அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது. சாமான்ய பதவியல்ல இது. எனக்குப் பொறுப்புகள் அதிகரித்திருக்கின்றன. கடந்த காலங்களில் தமிழக மக்களுக்கு காங்கிரஸ் மீது கோபம் இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்த கோபம் இப்போது குறைந்துள்ளது. கோபங்கள் மன வருத்தங்களாக மாறியிருக்கின்றன. இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய தலையாயப் பணி.''

''12 வருடங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது உங்களது விமர்சனங்கள் காட்டமாக இருக்குமே... இப்போதும் அதே பரபரப்பை எதிர்பார்க்கலாமா?''

''என்னுடைய வயது, அறிவையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது. நிதானத்தோடும் பொறுமையோடும் செயல்படும் தருணம் இது. என்னுடைய கருத்து 'தாறுமாறாக’ இருக்காது. சரியாக இருக்கும். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். நல்லது செய்தால் மனம் திறந்து பாராட்டுவேன். தவறு செய்தால் அதைச் சுட்டிக் காட்டுவேன். அது யாராக இருந்தாலும் சரி. என்னுடைய இயல்பே அதுதான். அதை எப்போதும் மாற்றிக்கொள்ள முடியாது.''

'' 'என்னை ஒரு பொருட்டாகவே காங்கிரஸ் தலைமை மதிக்கவில்லை’ என்று ஞானதேசிகன் கூறியுள்ளாரே?''

ஆரம்பித்ததும் நானே... முடித்ததும் நானே!

''நான் ஞானதேசிகனை 'கனமான மனிதர்’ என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால், அவர் ஓர் உயர்ந்த மனிதர் என்பதை தெரிந்துகொண்டேன். ஞானதேசிகன் கட்சியைவிட்டு சென்றிருந்தாலும் சிறந்த மனிதர் அவர். கடைசி வரை அவர் மீது எப்போதும் எனக்கு மரியாதை இருக்கும். கடந்த மூன்றாண்டுகள் காங்கிரஸ் கட்சிக்காக சிறப்பாகச் செயல்பட்டார். இன்னும் சிறப்பாக அவர் செயல்பட்டிருக்க முடியும். அவரே பணியாற்ற விரும்பினாலும் அவருக்கு இடைஞ்சல்கள் கொடுத்தவர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும். இப்போது யார் ஜி.கே.வாசனை தவறாக வழிநடத்தி காங்கிரஸில் இருந்து பிரிந்து செல்லவைத்தார்களோ, அதே 'நால்வர் அணி’தான் ஒரு காலத்தில் ஞானதேசிகனுக்கும் பெரும் குடைச்சல்களைக் கொடுத்தது. நால்வர் அணியின் வழிகாட்டுதல் நல்ல பயணத்துக்கு உதவாது.''  

''உறுப்பினர் அட்டை பிரச்னை ஓய்ந்துவிட்டதா... மூப்பனாரின் படம் உறுப்பினர் அட்டையில் இருக்குமா?''

''அது ஒரு பிரச்னையே இல்லை. பொய்யாகப் பரப்பப்பட்ட பொய். சின்னா ரெட்டி அந்த உறுப்பினர் அட்டைகளை நிறுத்திவைக்கச் சொன்னது உண்மைதான். அது படங்களுக்காக இல்லை. காமராஜர் படத்தை போட்டாலே அதில் மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, சிவாஜி கணேசன், மரகதம் சந்திரசேகர் என அனைவரும் அடக்கம். மொத்த தலைவர்களையும் உள்ளடக்கிய தலைவர்தான் காமராஜர். அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது!''

''திராவிட கட்சிகளைத் தவிர்த்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளராமல் போனதற்கு என்ன காரணம்?''

ஆரம்பித்ததும் நானே... முடித்ததும் நானே!

''காங்கிரஸ் என்பது ஒரு மக்கள் இயக்கம். அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு இருக்கும் சதவிகித ஓட்டுகளிலே எனக்கு நம்பிக்கை கிடையாது. காரணம், மொத்த ஜனத்தொகையில் 10 சதவிகிதம் வாக்காளர்கள்தான் கட்சிக்காரர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 90 சதவிகிதத்தினர் பொதுமக்கள்தான். தேர்தலுக்கு முன்னர் நிலவும் சூழ்நிலைகளால்தான் கட்சியின் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு தேர்தலில் முழுமையாக தோற்கடிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அடுத்த தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெறவில்லையா? வெறும் இரண்டு இடங்களை பெற்ற பி.ஜே.பி இன்றைக்கு பெரும்பான்மையோடு வரவில்லையா? தமிழகத்தில் காங்கிரஸ் மீது மாறிமாறி குதிரை சவாரி செய்து போட்டியிட்டன திராவிடக் கட்சிகள்.  எங்களுடைய ஆதரவோடுதான் அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். எங்களை வளரவிடாமல் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டதுதான் மிச்சம்.''

''காங்கிரஸில் இருந்து வெளியேறி பலரும் ஜி.கே. வாசனின் புதிய கட்சியில் இணைகிறார்களே?''    

''காங்கிரஸ் தொண்டர்களைப் பொறுத்தவரை 90 சதவிகித காங்கிரஸார் இன்னும் எங்களுடன்தான் இருக்கின்றனர். அவர்கள் தெளிவாக இருக்கின்றனர். வேறெங்கும் செல்லவில்லை. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அன்று மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸைத் தொடங்கினார். அன்று 100 பேர் ஆதரவு தெரிவித்தார்கள். இன்று ஒருவர்கூட ஆதரிக்கவில்லை என்பதுதான் உண்மை. முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் 15 பேர் எங்களிடம் இருக்கிறார்கள் என தம்பட்டம் அடிக்கிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மொத்தம் 400 பேரில் 15 பேர் என்பது ஒரு பெரிய எண்ணிக்கை இல்லை. நிதர்சனத்தில், தற்போது ஐந்து எம்.எல்.ஏ-க்களில் மூவர் எங்களிடம்தான் உள்ளனர். போனவர்கள் திரும்பி வருவார்கள்!''

''ஜி.கே.வாசனின் புதிய கட்சி காங்கிரஸுக்கு மாற்றாக அமையுமா?''

''காங்கிரஸை அவர்களோடு ஒப்பிடாதீர்கள். அவர் தொடங்கும் கட்சி என்பது லெட்டர் பேட் கட்சிகளுக்கு வேண்டுமானால் சவாலாக இருக்குமே தவிர, காங்கிரஸ் போன்ற பேரியக்கத்துக்கு ஒருபோதும் சவாலாக இருக்க முடியாது. இன்னும் ஒரு வார காலத்தில் அது உங்களுக்கே தெரியும். காலில் விழாத குறையாக கட்சியைவிட்டுப் போகாதே என்று வம்படியாகக் கதறினேன். 'போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்’ என்று சொல்லிப் பார்த்தேன். மீறிப் போவேன் என்று அடம்பிடித்தார் ஜி.கே.வாசன். இப்போது எந்தப் பதவியிலும் இல்லாததால் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்.''

''ஜி.கே.வாசன் த.மா.க-வை காங்கிரஸுடன் இணைத்தபோது காங்கிரஸின் மாநிலத் தலைவர் நீங்கள்தான்... தற்போது அவர் வெளியேறும்போதும் நீங்கள்தான் மாநிலத் தலைவர் எப்படி உணர்கிறீர்கள்?''

''ஜி.கே.வாசனுக்கு ஆரம்பித்து வைத்ததும் நானே... முடித்து வைத்ததும் நானே!''

''2016 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகிவிட்டீர்களா?''

''இப்போதே தயாராகத்தான் இருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும். இல்லையென்றால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது!''

- நம்பிக்கையுடன் இருக்கிறார் புதிய தலைவர்!

- நா.இள.அறவாழி

படம்: சு.குமரேசன்