Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

 'படேல் இல்லை என்றால் காந்தி இல்லை’ என்று சொல்கிறாரே மோடி?

எத்தனையோ படேல்களை உருவாக்கியவர் காந்தி.

கழுகார் பதில்கள்!

காந்தியடிகளின் முதல் சீடராக அறியப்பட்டவர் மகன்லால் காந்தி. அவர் இறந்தபோது காந்தியே அவரை தனது குரு என்று சொன்னார். 'என் பணிகளின் ஒரே வாரிசு’ என்று காந்தியால் அழைக்கப்பட்டவர் இந்த மகன்லால். பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக காந்தி தனிநபர் சத்தியாகிரகத்தை அறிவித்தபோது முதல் சத்தியாகிரகியாக வினோபா பாவேவைச் சொன்னார். நேருவுக்கே அடுத்த இடம்தான் தரப்பட்டது. பர்தோலி சத்தியாகிரகத்தை நடத்திய நரஹரி பரிக் என்பவர்தான் காந்தியக் கல்வியை வடிவமைத்தவர். 25 ஆண்டு காலம் காந்தியுடன் இருந்து அவருக்கு முன் செத்துவிட வேண்டும் என்று சொல்லிக்கொண்டு, அதைப்போல இறந்து போனவர் மகாதேவ் தேசாய்.

காந்தியின் எண்ணம் என்று சொல்லப்படும் 'காந்தி விசார்தோஹன்’ என்ற நூலை எழுதியவர் கிஷோரிலால் மஷ்ருவாலா. 'நீ அதிர்ஷ்டம் செய்தவன்’ என்று காந்தியால் பாராட்டப்பட்டவர் ரவிசங்கர் மகாராஷ். இவர்தான் குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டபோது அதனைத் தொடங்கி வைத்தவர். தன்னுடைய தந்தையின் இறப்புக்கும் போகாமல் காந்தியின் நிழலாய் இருந்தவர் மீராபென். காந்தியப் பொருளாதாரத்தை வடிவமைத்தது மட்டுமல்ல, அதனை வாழ்க்கைப் பாதையாக வாழ்ந்தும் காட்டியவர் ஜே.சி.குமரப்பா. இவர்கள்தான் காந்தியத்தை வளர்த்தெடுத்த மகாபுருஷர்கள்.

 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

மீண்டும் சைக்கிள் விடுவதால் யாருக்கு லாபம்? மற்ற அரசியல் கட்சிகளுக்கா... ஜி.கே.வாசனுக்கா?

இரண்டு பேருக்கும்தான்.

தி.மு..க-வோ அல்லது அ.தி.மு.க-வோ அவரைச் சேர்த்துக்கொள்ளலாம். அதனால் தமிழகத்தில் உள்ள ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் வாக்குகள் அந்தக் கூட்டணிக்குக் கிடைக்கும். ஜி.கே.வாசனும் டெல்லி பயம், எதிர்கோஷ்டி தொந்தரவு இல்லாமல் செயல்படலாம். எனவே, நீங்கள் கேட்ட இரண்டு தரப்புக்கும் லாபம்தான். நல்லவேளை நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மையா என்று கேட்கவில்லை.

 எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் விலகினாரா... அல்லது விலகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டாரா?

அவராகவே விலகியதாகத்தான் தெரிகிறது. ஞானதேசிகனை தலைவராக வைத்துக்கொள்ளக் கூடாது என்று டெல்லி நினைத்தது. அதனால்தான் பலரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. மாணிக் தாகூர், டாக்டர் செல்லக்குமார், சுதர்சன நாச்சியப்பன், வசந்தகுமார் என்று பலரது பெயர்களும் பரிசீலனையில் இருந்தன. இதை எல்லாம் தெரிந்துகொண்டு ஞானதேசிகன் முந்திக்கொண்டார்.

 எம்.ராஜமாணிக்கம், மேட்டுப்பாளையம்.

மீண்டும் வைகோ ஏமாற்றப்படுவார் என்கிறேன் நான்...

தி.மு.க கூட்டணியில் வைகோ சேருவார் என்ற அடிப்படையில் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இது ரொம்பவும் முன்கூட்டியே கேட்கப்படும் கேள்வி. பொதுவாகச் சொல்வதாக இருந்தால், இதுவரை சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியோடு வைகோ சேர்ந்து போட்டியிட்டது இல்லை.

 வி.பரமசிவம், சென்னை-25.

இருநாட்டு உறவுகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை உணர்வு இந்தியாவுக்கு இருப்பதுபோல இலங்கைக்கு ஏற்பட, நாம் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவைப் பற்றிய பயம் இலங்கைக்கு இருக்க வேண்டும். சீனா தங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்ற தைரியத்தில் இலங்கை அதிகமாக ஆடுகிறது. இலங்கையின் கடல் பகுதியில் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்தி வைப்பதற்கு கடந்த வாரத்தில் அந்த நாடு அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும் அதை இந்திய வெளியுறவுத் துறை இதுவரை கண்டித்து எச்சரிக்கை செய்யவில்லை. பாகிஸ்தானின் செயல்பாடுகளுக்கு எதிராக நாம் காட்டும் எதிர்வினையில் பாதி அளவாவது இலங்கைக்கு எதிராக காட்டினால்தான் அவர்களுக்கு பயம் இருக்கும்.

 ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

சகாயம் குழுவை நியமிப்பதில் அரசு தயக்கம் காட்டியது ஏன்?

பழைய பழமொழிதான் இதற்கு பொருத்தமானது, 'மடியில் கனம், வழியில் பயம்’.

 ஆர்.காளிதாஸ், சிதம்பரம்.

'வைகோ - ஸ்டாலின் சந்திப்பு கட்சி விரோதம் இல்லையா’ என்று அழகிரி கேட்டுள்ளாரே?

திருமண வீட்டில் வைகோவும் ஸ்டாலினும் சந்திப்பதும், தேர்தல் நேரத்தில் எதிர்க் கட்சி வேட்பாளரை சந்திப்பதும் ஒன்று அல்ல.

 பொன்விழி, அன்னூர்.

'ரஜினியை நம்பி பி.ஜே.பி இல்லை’ என்ற தமிழிசையின் திடீர் பல்டி பற்றி?

நாம் படித்த நரி கதைதான். 'சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்!’

 எஸ்.கிருஷ்ணராஜ், அதிகாரட்டி.

'ம.தி.மு.க உடன் கூட்டணி ஏற்பட்டால் வரவேற்பேன்’ என்கிறாரே கருணாநிதி?

எந்தக் கட்சியாக இருந்தாலும் இனி கருணாநிதி வரவேற்கத் தயாராக இருப்பார்.

 எஸ்.பூவேந்த அரசு, பெரியமதியாக் கூடலூர்.

அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் ஜெயலலிதாவை 'மக்களின் முதல்வர்’ என்று சொல்கிறார்களே சரியா?

ஜெயலலிதா படம் இன்னமும் அம்மா குடிநீர், அம்மா உப்பு போன்ற திட்டங்களில் இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப் பேக்குகளிலும் ஜெயலலிதா படம் இருக்கிறது. மாணவர்களுக்கு அடுத்த மாதம் தர இருக்கும் பேக்குகளிலும் ஜெயலலிதா படம் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது  'தமிழக முதல்வர்’ என்றே விரைவில் அவர்கள் சொல்லிக்கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002  

kalugu@vikatan.com  என்ற முகவரியிலும் அனுப்பலாம்!