Published:Updated:

ஜி.கே.வாசனுக்கு கட்சி என்ன குறை வைத்தது?

ஆதாரங்களை அடுக்கும் கோபண்ணா!

மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இரண்டாக உடைந்துவிட்டது. புதிய கட்சியை உருவாக்கும் வேலையில் மும்முரம் ஆகிவிட்டார் ஜி.கே.வாசன். அவரது ஆதரவாளர்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைமையை நோக்கி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கத் தொடங்கியுள்ளனர். அவை தொடர்பான பதில்களுக்காக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் 'தேசிய முரசு’ ஆசிரியருமான கோபண்ணாவைச் சந்தித்தோம்.

ஜி.கே.வாசனுக்கு கட்சி என்ன குறை வைத்தது?

 ''தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மீண்டும் அமைக்கவே புதிய கட்சியைத் தொடங்குவதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளாரே?''

''தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 1988-ம் ஆண்டு ஜி.கே.மூப்பனார் நியமிக்கப்பட்டார். அப்போது, அன்றைய பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி தமிழகத்தில் 13 முறை சுற்றுப்பயணம் செய்து, காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் அமைக்க கடும் பிரசாரம் செய்தார். 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 22 சதவிகித வாக்குகளைப் பெற்று 26 இடங்களில்தான் ஜெயிக்க முடிந்தது. ஆனால், சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4.33 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியை அமைக்க  விரும்புகிறவர்கள் இத்தகைய பிளவு முயற்சியில் இறங்க மாட்டார்கள். இப்போதைய தேவை, ஒற்றுமையே தவிர பிளவு அல்ல என்பதை ஜி.கே.வாசன் உணர வேண்டும்''.

''அகில இந்திய தலைமை தமக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று ஜி.கே.வாசன் குற்றம் சொல்கிறாரே?''

ஜி.கே.வாசனுக்கு கட்சி என்ன குறை வைத்தது?

''ஜி.கே.மூப்பனார் தொடங்கிய த.மா.கா-வை காங்கிரஸோடு இணைக்கும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. முதல் நாளிலேயே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளராக ஜி.கே.வாசன் நியமிக்கப்பட்டார். பிறகு, தொடர்ந்து 12 ஆண்டுகள் ராஜ்ய சபா எம்.பி-யாக இருந்தார். ஒரு முறை மாநிலத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு அவரை அறங்காவலராகவும் சோனியா நியமித்தார். 2004-ல் மத்திய இணை அமைச்சர், 2009-ல் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் பதவிகள் என அவருக்கு வழங்கப்பட்டன. ஜி.கே.வாசன் பரிந்துரையில் சோ.பாலகிருஷ்ணன், ஞானதேசிகன் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். அவருடைய ஒப்புதலின் பேரில்தான், கிருஷ்ணசாமியும் தங்கபாலுவும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த 11 வருடங்களாக தமிழக காங்கிரஸ் கட்சி நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஜி.கே.வாசன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இந்தக் காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் 50 சதவிகிதத்தினர் வாசனின் ஆதவாளர்கள்தான். ஆனால், கட்சித் தலைமை தமக்கு எதையுமே செய்யவில்லை என்று கூறுவதைவிட ஓர் அவதூறுப் பிரசாரம் வேறெதுவும் இருக்க முடியாது''

''கட்சியின் உறுப்பினர் அட்டையில் காமராஜர், மூப்பனார் படங்கள் இடம்பெறக் கூடாது என்று சொன்னதுதான் பிளவுக்குக் காரணமா?''

''அது அப்பட்டமான பொய். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு நீண்டகாலமாக அவர்கள் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள். காங்கிரஸின் அணுமுறைக்கு மாறாக, சில பிரச்னைகளில் செயற்கையாக ஜி.கே.வாசனிடம் மாநில உணர்வுகள் திடீரென மேலோங்கின. புதிய கட்சி தொடங்குவதற்கு காரணங்களைத் தேடிக் கொண்டிருந்தவர்கள், இப்படி ஒரு பொய் காரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர். மூப்பனார் சிலை அமைக்க தி.மு.க ஆட்சியில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், ஆறு ஆண்டுகள் ஆகியும் சிலை அமைக்க இவர்கள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இதுதான் மூப்பனார் மீதான அவர்களின் உண்மையான அக்கறையா? கட்சியை உடைத்ததைவிட  பச்சைத்துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆட்சியில் இருந்தபோது பலன்களை எல்லாம் அனுபவித்துவிட்டு, கட்சிக்கு சோதனையான நேரத்தில், 'அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள்போல’ கட்சியைவிட்டு வெளியேறுவது அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாதம். கட்சியை முன்னின்று பலப்படுத்த வேண்டிய நேரத்தில் பலவீனப்படுத்தும் நோக்கத்தில் புதுக் கட்சி தொடங்குவதை உண்மையான காங்கிரஸ் கட்சியினர் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை 'உண்ட வீட்டுக்கு ரெண்டகம்’ செய்வதாகத்தான் கருதுவார்கள்.''

''தமிழக காங்கிரஸ் செயல்படுவதற்கு முழுமையான சுதந்திரத்தை அகில இந்தியத் தலைமை வழங்கவில்லை என்று ஞானதேசிகன் கூறுகிறாரே?''

ஜி.கே.வாசனுக்கு கட்சி என்ன குறை வைத்தது?

''தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட ஞானதேசிகனால், இரண்டு ஆண்டுகளாக நிர்வாகிகள் நியமிக்கப்படாததற்கு கோஷ்டி தலைவர்கள் கேட்ட 'தனி ஒதுக்கீடு’தான் காரணமே தவிர, காங்கிரஸ் தலைமை அல்ல. கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஜி.கே.வாசன் 50 சதவிகிதத்துக்கும் மேலாக தனி ஒதுக்கீடு கேட்டதை மற்ற தலைவர்கள் ஏற்கவில்லை. அதனால்தான், அகில இந்திய தலைமையால் மாநில நிர்வாகிகளை நியமிக்க முடியவில்லை.''

''தமிழகத்தில் காங்கிரஸ் தோல்விக்கு அகில இந்திய தலைமைதான் காரணம் என்கிறாரே ஞானதேசிகன்?''

''நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டதற்கு மாநிலத் தலைவராக இருந்த ஞானதேசிகனின் அணுகுமுறையே காரணம். தி.மு.க மீது விரோத உணர்வு, அ.தி.மு.க மீது பரிவு, பி.ஜே.பி மீது எதிர்ப்பில்லாத போக்கு போன்ற காரணங்களால்தான் காங்கிரஸ் தனித்து விடப்பட்டது. மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து இருந்தால், குறைந்தபட்சம் 30 இடங்களிலாவது வெற்றி பெற்று இருக்க முடியும். தமிழகத்தில் காங்கிரஸ் வாக்கு வங்கி நான்கு சதவிகிதமாகச் சுருங்கிவிட்டது. 38 தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் இழந்ததற்கு ஞானதேசிகன் ஏன் கவலைப்படவில்லை? 'இந்தத் தோல்வி ஆய்வு செய்ய வேண்டியதே தவிர, கவலைக்குரியதல்ல’ என்று ஞானதேசிகன் கூறுகிறார். தோல்வியைத் தோல்வி என்று ஏற்றுக்கொண்டு கட்சியை வளர்ப்பதில் ஈடுபாடு காட்டாதது ஏன்? தோல்வியடைந்த 39 வேட்பாளர்களையும் அழைத்து தோல்விக்கான காரணங்களை ஆராய ஞானதேசிகன் ஏன் முன்வரவில்லை? இதைச் செய்வதற்கு கட்சித் தலைமையோ, கட்சியின் அமைப்பு முறையோ தடையாக இருந்தது என்று கூற முடியுமா? ஆளும் கட்சியின் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்து, மக்களை காங்கிரஸ் பக்கம் திரட்ட ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடவில்லையே?''

- எஸ்.முத்துகிருஷ்ணன்

படங்கள்: சு.குமரேசன், தி.குமரகுருபரன்