Published:Updated:

“திருக்குறள் என்றாலே இந்துத்வாதான்!” - பி.ஜே.பி-யின் சர்ச்சைக் குரல் #VikatanExclusive

“திருக்குறள் என்றாலே இந்துத்வாதான்!” -  பி.ஜே.பி-யின் சர்ச்சைக் குரல் #VikatanExclusive
“திருக்குறள் என்றாலே இந்துத்வாதான்!” - பி.ஜே.பி-யின் சர்ச்சைக் குரல் #VikatanExclusive

ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் என இரு அணிகள் இணைப்பு, அமைச்சரவையில் மாற்றம் எனத் தமிழ்நாட்டின் அரசியல் களம் அனல் பரப்பிக்கொண்டிருக்கிறது. உக்கிரமான இந்தத் தருணத்தில், சென்னை வந்திருந்த பி.ஜே.பி-யின் தமிழ்நாட்டிற்கான மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவை பிரத்யேகப் பேட்டிக்காக அந்தக் கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சந்தித்தோம். அந்த மழை நாளில், ஹாட்டான கேள்விகளோடு அவரின் அறைக்குள் நுழைந்தோம்.

“கேள்விகள் இருக்கட்டும். மழையில் நனைந்து வந்துள்ளீர்கள். முதலில் இந்தச் சாயாவைக் குடியுங்கள். அதுதானே விருந்தோம்பல்” என்றார் புன்னகைத்தபடி. தேர்தல், அரசியல் கேள்விகள் மட்டுமல்லாமல், சித்தாந்தரீதியான சில கேள்விகளையும் முன் வைத்தோம். சிலவற்றுக்குச் சிரித்தபடியும், சில கேள்விகளுக்கு ஆக்ரோஷமாகவும் பதிலளித்தார். அவர் அளித்த பேட்டி...

"பி.ஜே.பி-யின் சித்தாந்தமான இந்துத்துவ கோட்பாடு, தமிழ், தமிழர், திராவிடம் என்ற அரசியலுக்கு எதிரானது. ‘வலிமையான தலைமை இல்லாத அ.தி.மு.க-வை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பி.ஜே.பி தன்னுடைய கொள்கைகளைத் தமிழ்நாட்டில் நிலைநிறுத்த முயற்சி செய்கிறது’ என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?”

“கடல் கடந்து வளர்ந்த மொழி தமிழ். தமிழ்மொழி என்ற கர்வம் எங்களுக்கும் உண்டு. அதன் கலாசார வேரை நாங்கள் உணர்ந்தே உள்ளோம். அற்புதமான தமிழ் கலாசாரத்தை, இந்திய தேசியத்தின் ஒருகூறாகவே பார்க்கிறோம். திருக்குறளை எங்கள் வழிகாட்டியாகக் கருதுகிறோம். அதன் வளமையை இந்துத்துவாவின் ஓர் அம்சமாகப் பார்க்கிறோம். ஆம், 'திருக்குறள் என்றாலே, இந்துத்துவா; இந்துத்துவா என்றால் திருக்குறள்'. தமிழ்நாட்டின் மீது நெருக்கமான பற்றுக் கொண்டிருப்பதாலேயே, 'ஸ்மார்ட் சிட்டி', 'அம்ருத்' போன்ற திட்டங்களில் தமிழகத்துக்கு முன்னுரிமைகொடுக்கிறார் பிரதமர் மோடிஜி. அவர் பிரதமர் ஆன பிறகே, இலங்கை அரசிடம் பேசி தமிழக மீனவர்கள் விடுதலைக்கு வித்திட்டார். ஆனால், முந்தைய காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி ஆட்சியில் என்ன நடந்தது? தமிழ், தமிழர் என்று கூறிக்கொண்டு, இவர்களின் ஆட்சியில்தான் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். திராவிடம் என்று முழங்கிய தி.மு.க சாதித்தது என்ன? குடும்ப ஆட்சி, எங்கும் நிறைந்திருந்த லஞ்ச ஊழல்கள்தானே. இவையெல்லாம்தான் திராவிடத்தின் சாதனையா? போலிப் பெருமிதம் பேசி, மக்களைச் சுரண்டுவதில் தி.மு.க-வும் காங்கிரஸும் இரட்டைக் குழந்தைகள்."

“உங்கள் தி.மு.க எதிர்ப்பு மட்டுமல்ல; அ.தி.மு.க தலைவர்கள், பி.ஜே.பி-யிடம் காட்டும் நெருக்கமும் வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாகத் தெரிகிறதே?”

“ஜெயலலிதா இருந்தவரை மோடிஜிக்கு ஆதரவாகவே இருந்தார். ஜெ. மறைவுக்குப் பிறகு, ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருவருமே பி.ஜே.பி-யின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரித்தனர். ஊழலற்ற தமிழ்நாட்டை உருவாக்குதே எங்கள் லட்சியம். அதை அ.தி.மு.க-வும் உணர்ந்துள்ளதால், எங்களுடன் இணைந்து பயணிக்கிறது."

“உச்ச நீதிமன்றத்தால் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர் ஜெயலலிதா. ஓ.பி.எஸ்ஸும் - ஈ .பி.எஸ்ஸும் ஒன்றிணைந்து ‘அம்மாவின் ஆட்சியை அமைப்போம்’ என்று முழங்குகின்றனர். நீங்கள் அ.தி.மு.க-வுடன் இணைந்து பயணிப்போம் என்று கூறுவது முரணாக உள்ளதே...?”

“அ.தி.மு.க-வுடன் எல்லாவற்றிலும் நாங்கள் உடன்பட்டுச் செல்லவில்லை. மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் விஷயத்தில் இணைகிறோம். அதேநேரம், ஒப்பீட்டளவில் 'தி.மு.க-வை விட அ.தி.மு.க பரவாயில்லை' என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறை மோடிஜியைச் சந்திக்கும்போதும், ‘ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம்’ என்றே இருவரும் (ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்) உத்தரவாதம் கொடுத்துள்ளனர். அந்த நம்பிக்கை எங்களுக்கும் உள்ளது."

“மத்திய அமைச்சரவையில், அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று ஒரு தகவல் வெளிவருகிறதே அது, உண்மையா?”

“அதில் உண்மையில்லை. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதும் தலைவராக இருந்து கட்சிக்காகச் செயல்படுவேன்" என்று அமித்ஷாவே விளக்கம் கொடுத்துள்ளார். அவர், தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தடம்பதிக்கத் தனியாகவே பல திட்டங்களை வைத்துள்ளார். 'அமித் ஷா மிஷன் சவுத்-2019' என்றே நாங்கள் அழைக்கிறோம்" (சிரிப்பு).

“ ‘ஒரே நாடு, ஒரே கொள்கை, ஒரே வரி’ என்று பி.ஜே.பி. முன்வைக்கும் கொள்கை, இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் வகையில் அமையவில்லையா? குறிப்பாக, ஜி.எஸ்.டி. போன்ற வரிமுறையால், மாநிலங்களின் தன்னாட்சி உரிமைகள்  பாதிக்கப்படுகிறதல்லவா?”

“நாம் எல்லோரும் இந்தியர்கள். அந்த உணர்வின் வெளிப்பாடே பி.ஜே.பி-யின் செயல்பாடுகளாகும். ஜி.எஸ்.டி-யைப் பொறுத்தவரை, அதை நாங்கள் திட்டமிடவில்லை. ஜி.எஸ்.டி. என்பது முந்தைய ஆட்சியின்போது தயாரிக்கப்பட்டது. நாங்கள் அதைச் செழுமைப்படுத்தினோம். ஒவ்வொரு பொருளின் வரியும் ஜி.எஸ்.டி கவுன்சிலில் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. இதில், அனைத்து மாநில அமைச்சர்களும் பிரதிநிதிகளாகப் பங்கேற்றனர். அனைத்து மாநிலப் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி நடைமுறை, பன்முகத்தன்மையாக உங்கள் பார்வைக்குத் தெரியவில்லையா?”

“நடிகர் ரஜினியின் அரசியல் முயற்சி, 'மெர்சல்' இசை வெளியீட்டின்போது வெளிப்பட்ட நடிகர் விஜய்-க்கான அரசியல். இவற்றை எப்படி பார்க்கிறீர்கள்?”

"ஊழலற்ற ஆட்சி, மக்களுக்கான வளர்ச்சி, இதுவே பி.ஜே.பி-யின் கொள்கை. இதற்கு ஆதரவாக ரஜினி, விஜய் என யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம்."

“தமிழ்நாட்டில் பி.ஜே.பி. ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா? நீங்கள் வெற்றிபெற்றால் என்ன செய்வீர்கள்?”

“ஊழலற்ற ஆட்சி, குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டுதல் என்பதே எங்களின் அடிப்படை நோக்கம். தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவோம். தமிழ் ஆர்வலர்களுக்கு ஆதரவாக இருப்போம். மொத்தத்தில் திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி அமைப்போம்.”

அடுத்த கட்டுரைக்கு