Published:Updated:

துணிச்சல் பெண்களால் சிக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங்..! வழக்கு கடந்துவந்த பாதை #WhyInGodsName

துணிச்சல் பெண்களால் சிக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங்..! வழக்கு கடந்துவந்த பாதை #WhyInGodsName
News
துணிச்சல் பெண்களால் சிக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங்..! வழக்கு கடந்துவந்த பாதை #WhyInGodsName

துணிச்சல் பெண்களால் சிக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங்..! வழக்கு கடந்துவந்த பாதை #WhyInGodsName

பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றவாளி வசமாக சிக்குவது என்பது அரிதான விஷயமாகிவிட்டது. காரணம், பெண்களுக்கே உரித்தான அச்சம்தான். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை பொதுவெளியில் சொல்லத் தயங்குகின்றனர். அவர்களின் பெற்றோர், உறவினர்களும் இதை அனுமதிப்பதில்லை. காலம் காலமாக நிலவி வரும் பெண்களின் அச்சத்தைப் பயன்படுத்திக்கொண்டுதான் குர்மீத் ராம் ரஹீம்களும், பல சமூக விரோதிகளும் கொடூரச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

பிரதமர் முதல் மனித உரிமை ஆணையம் வரை

தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் சிறைக் கம்பிகளை எண்ணுவதற்கு மூலகாரணமாக இருந்தது, ஒரு பெண் அனுப்பிய மொட்டைக் கடிதம்தான். தம் பெயரை சொல்ல விரும்பவில்லை என்று சொல்லி பிரதமரில் தொடங்கி மனித உரிமை ஆணையம் வரை அத்தனை பேருக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறார் அந்தப் பெண். 2002-ம் ஆண்டு மே 5-ம் தேதி என தபால் முத்திரையிடப்பட்ட மொட்டைக் கடிதம், அப்போதைய பிரதமர் வாஜ்பாய், பஞ்சாப்-அரியான உயர் நீதிமன்றம், மத்திய உள்துறை அமைச்சகம், சி.பி.ஐ., மனித உரிமை ஆணையம் ஆகியோருக்கு ஒரே சமயத்தில் அனுப்பப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பட்டதாரிப் பெண்

இந்தி மொழியில் டைப் செய்யப்பட்டிருந்த அந்தக் கடிதத்தை எழுதிய பெண், தாம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தேரா அமைப்பில் சன்யாசியாக இருந்ததாகவும் கூறி இருந்தார். தாம் ஒரு பட்டதாரி என்றும், தம்முடைய பெற்றோரின் தூண்டுதலின் பேரில் தேரா அமைப்பில் சன்யாசியாகச் சேர்ந்ததாகக் கூறியுள்ளார். தேராவின் ஆசிரமத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தன்னை அழைத்த குர்மீத் ராம் ரஹீம் சிங்,  தம்முடைய அறைக்கு வரும்படி சொல்லியுள்ளார். தயக்கத்துடன் அந்தப் பெண் அறைக்குள் சென்றார். அப்போது அவர்  தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் ஒரு ரிவால்வார் இருந்தது.

மிரட்டி பாலியல் பலாத்காரம்

அந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, குர்மீத் ராம் ரஹீம் சிங்  தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் சன்யாசி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து பல முறை தம்மை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கடிதத்தில் சொல்லி இருக்கிறார். என்னை எந்த ஒரு அமைப்பும் கேள்வி கேட்க முடியாது என்று திமிராகவும் ராம் ரஹீம் கூறி இருக்கிறார். தன்னைப் போலவே மேலும் பல பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக, தனக்குத் தெரியவந்தது என்றும் கடிதத்தில் கூறி இருந்தார்.   பஞ்சாப் மாநிலம் Sangrur மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்ணும் தம்மைப்போல பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் கூறியுள்ளார்.  'இந்த விஷயத்தில், பிரதமர் மற்றும் நீதிமன்றங்கள் தலையிட்டு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார். இந்தக் கடிதத்தை யார் எழுதியது என்று தெரியவந்தால், தனக்கும் தன் குடும்பத்துக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்றும் அச்சம் தெரிவித்திருந்தார்.

நீதிமன்றம் நடவடிக்கை

இதை வழக்கம் போல மொட்டைக் கடிதம் என்று கருதி, யாரும் அதன்பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை.பிரதமர் வாஜ்பாய், இந்தக் கடித்தத்தின் பேரில் நடவடிக்கை எடுக்கும்படி தமது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  உயர் நீதிமன்றம், இந்தக் கடித்தத்தை ஒரு கிரிமினல் வழக்காக மாற்றி, 2002-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சண்டிகரில் உள்ள சி.பி.ஐ அதிகாரிகள், கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.  முறைப்படியான விசாரணை அப்போதுதான் தொடங்கியது.

சி.பி.ஐ விசாரணை

சி.பி.ஐ விசாரணையைத் தடுக்க  ராம் ரஹீம் சிங் எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொண்டார். நீதிமன்றங்களில் தடை வாங்கினார். இதனால், 2003-ம் ஆண்டுக்கும் 2004-ம் ஆண்டுக்கும் இடையே ஒன்றரை வருடங்கள் வழக்கு  விசாரணை தாமதம் ஆனது. குர்மீத் ராம் ரஹீம் சிங்கால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்ட இரண்டு பெண்களை, மிகுந்த சிரமங்களுக்கு இடையே சி.பி.ஐ அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்தனர். இதையடுத்து, கடந்த 2007-ம் ஆண்டு ராம் ரகீமுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தனர்.

பெண்கள் கொடுத்த விலை

பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் துணிச்சலாக அளித்த வாக்குமூலம்தான்  ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். வழக்கம்போல பயந்துகொண்டு, 'நமக்கு ஏன் வம்பு' என்று ஒதுங்கிப் போயிருந்தால், குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் அநியாயம் இன்னும் கட்டுக்கடங்காமல் போயிருக்கும். முற்றுப்புள்ளி வைத்த பெண்கள் பாராட்டத் தகுந்தவர்கள். ஆனால், அதற்கு அவர்கள் கொடுத்த விலை, வாழ்நாள் முழுவதும் வலி தரக்கூடிய துயரமாக இருக்கிறது.