Published:Updated:

சிறை வாழ்க்கையை சிரிக்க சிரிக்க விவரித்த கலைவாணர்! என்.எஸ்.கிருஷ்ணன் நினைவுக் கட்டுரை #KalaivanarNSKrishnan

சிறை வாழ்க்கையை சிரிக்க சிரிக்க விவரித்த கலைவாணர்! என்.எஸ்.கிருஷ்ணன் நினைவுக் கட்டுரை #KalaivanarNSKrishnan
சிறை வாழ்க்கையை சிரிக்க சிரிக்க விவரித்த கலைவாணர்! என்.எஸ்.கிருஷ்ணன் நினைவுக் கட்டுரை #KalaivanarNSKrishnan

திரையுலகில் வள்ளல்தன்மையுடன் திகழ்ந்த இருவர் கலைவாணர் என்.எஸ்.கே மற்றும் எம்.ஜி.ஆர். “என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அதற்கு முழு முதற் காரணமானவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான்!” என எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட நகைச்சுவை மேதை, கலைவாணர் என்.எஸ்.கே. அவரது நினைவு நாள் இன்று. இருவரது திரையுலக அறிமுகமும் 1936 ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தில்தான் நிகழ்ந்தது. 

திரைப்படங்களில் தனக்கென ஒரு பாணியைக் கையாண்டு மக்களைச் சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர். நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்த என்.எஸ்.கிருஷ்ணன், வறுமையினால் நாடகக் கொட்டகையில் சோடா விற்கும் பையனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். தந்தை சுடலைமுத்துப்பிள்ளை, தாயார் இசக்கிஅம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்துக் கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. சிறுவயதிலேயே நாடகங்களில் ஆர்வம் ஏற்பட்டு நடிக்கத் தொடங்கினார். சதிலீலாவதியில் அறிமுகமானாலும் முதற்படத்தை முந்திக்கொண்டு அவரது இரண்டாவது படமான மேனகா வெளிவந்தது. மேனகாவின் வெற்றி, பட்டிதொட்டி எங்கும் கலைவாணரின் நகைச்சுவையைக் கொண்டு சேர்த்தது.
 
முகத்தை அஷ்ட கோணலாக்கி அங்குமிங்கும் ஓடி, அடிபட்டு, உதைபட்டு, கேனைத்தனமாகச் சிரித்து, மக்களைச் சிரிக்கவைப்பதுதான் அதுவரை தமிழ்சினிமாவில் நகைச்சுவைக் காட்சி என்பதன் வரையறையாக இருந்துவந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் வருகைக்குப்பின் நகைச்சுவையின் தரம் உயர்ந்தது. நகைச்சுவை என்பது வெறுமனே உடல் மொழி மட்டுமல்ல; உடல் மொழி, வார்த்தை ஜாலங்கள் இவைகளைத் தாண்டி மக்களைச் சிந்திக்கவும் வைப்பது என்பதைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆணித்தரமாக முன்வைக்க ஆரம்பித்தார் கலைவாணர். மக்களிடம் அவர் புகழ் கூட ஆரம்பித்தது. நகைச்சுவை நடிகனாக மட்டுமே அவர் சினிமாவைக் கடந்துசென்றுவிடவில்ல. எந்த விஷயத்திலும் தனக்கென ஒரு பார்வையை அவர் கொண்டிருந்தார். நடிப்பு பாடல் புதிய சிந்தனை பகுத்தறிவு என சினிமாவில் அவர் இயங்கினார். தனிப்பட்ட தன் வாழ்வில் அதிகபட்ச மனிதநேயத்தைப் பின்பற்றினார். திறமைசாலிகளைப் போற்றினார். அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார். 40 களில் கொடிகட்டிப்பறந்த தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா இவர்களுடன் நகைச்சுவையில் கொடிகட்டிப்பறந்தபோதும் தனக்கென ஒரு நாடகக்குழுவையும் நடத்திவந்தார் என்.எஸ்.கே. 

நாடக வருமானம் என்பது அவரது சினிமா வருமானத்தில் மிகச் சொற்பமே என்றாலும் தனது நாடகக்குழுவில் உள்ளவர்களின் நலனுக்காக அதைத் தொடர்ந்து நடத்தினார். நட்டத்தில் இயங்கும் நாடகக்குழுக்களைத் தானே ஏற்று நடத்துவது அல்லது அந்தக் குழுவின் நாடகங்களில் நடித்து அதைப் பிரபலப்படுத்துவது எனக் கலைஞர்களுக்காகவும் கலைக்காகவுமே தன் வாழ்வை அர்ப்பணித்தார் கலைவாணர். நடிகர்கள் நிறைவாக வாழ்ந்து கலைக்காகவும் கலைஞர்களுக்காவும் பாடுபடவேண்டும் என்பதை விருப்பமாகக் கொண்டிருந்தவர், தானே அதில் முதல்கலைஞனாகச் செயல்பட்டார்.

'வசந்தசேனா' படப்பிடிப்புக்காகப் புனே சென்றபோது காதல் ஏற்பட்டுக் கல்யாணத்தில் முடிந்தது டி.ஏ மதுரத்துடனான அவரது நட்பு.  தமிழ்சினிமாவில் முதல் தம்பதிக்கலைஞர்களான இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடி இவர்களுக்குப் புகழைத் தந்தன.

தோல்வியடையும் எனக் கருதப்பட்ட திரைப்படங்களைக்கூடத் தன் நகைச்சுவைக்காட்சிகளால் வெற்றி பெற வைத்தவர். அந்நாளில் பிரபல நிறுவனங்களின் படங்களில் அவரது குழுவினரின் தனிக்கதைகள் இடம்பெறும். தோல்வியடையும் படங்களைப் போட்டு அதில் கதைக்குத் தக்கபடி தனது நகைச்சுவையை இணைத்து வெளியிடச் செய்வார். படம் பெரும் வெற்றிபெறும். வெறும் நடிகராக மட்டுமன்றி இயக்கம், எடிட்டிங், திரைக்கதை, வசனம், பாடல் எழுதுவது என சினிமாவின் சகல துறையிலும் தேர்ந்தவர் கலைவாணர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவையும் இதற்குச் சான்று. 

பழம்பெருமை பேசி தமிழர்கள் வீணாகிவிடக்கூடாது என்ற கொள்கை கொண்ட என்.எஸ்.கே தனது திரைப்படம் ஒன்றில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என நகைச்சுவையோடும் சில விஷயங்களைச் சொல்லியிருந்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் அது நிகழ்ந்து கலைவாணரின் தீர்க்க தரிசனத்துக்குச் சான்றாக அமைந்தது.  

கலை என்பது மக்களை மகிழ்விக்க மட்டுமன்றி மக்களைச் சிந்திக்கவைத்து அதன்மூலம் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதே என்ற கொள்கையுடைய கலைவாணர், தன் படங்களில் சுயமரியாதைக் கருத்துகளையும் பகுத்தறிவுக்கருத்துகளையும் பரப்பினார். ஒரு பெரிய இயக்கம், பல தலைவர்கள் ஒன்றுகூடிச் செய்யவேண்டிய சமூகப்பணியைத் தனி ஒருவனாகத் திரைப்படங்களில் நிகழ்த்திக்காட்டினார் அவர். சுயமரியாதைத் தலைவர்கள், திராவிட இயக்கத்தலைவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தவர்கள் என அத்தனை தலைவர்களாலும் கொண்டாடப்பட்டது ஒன்றே அவரது நேர்மையான சமூகத்தொண்டுக்கு அடையாளம். 'கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன்' என்ற தன் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.

திரையுலகை உலுக்கிய வழக்குகளில் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலைவழக்கு முக்கியமானது. இந்த வழக்கில் அன்றைய சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதர் பட்சிராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு மற்றும் கலைவாணர் என்.எஸ்.கே ஆகியோர் மீது வழக்கு பதிவானது. வழக்கின் ஆரம்பத்திலேயே ஸ்ரீராமுலு நாயுடு விடுவிக்கப்பட்டார்.

ஆனால், இந்தவழக்கில் தியாகராஜ பாகவதர் மற்றும் கலைவாணர் என்.எஸ்.கே இருவரும் கைதாகினர். வழக்கில் சென்னை செசன்ஸ் கோர்ட்டு இருவருக்கும் ஆயுள்தண்டனை வழங்கியது. 1945 ம் ஆண்டு மே 3ந்தேதி இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட இந்த வழக்கின் மேற்முறையீட்டில் தண்டனை உறுதியானது. இதையடுத்து சென்னை மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர். 

லண்டன்பிரிவியு கவுன்சிலில் இந்த வழக்கில் மீண்டும் மேற்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவேண்டுமென பிரிவியு கவுன்சில் உத்தரவிட்டது. வழக்கறிஞர் எத்திராஜ் இவர்களுக்காக வாதாடினார். ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய தீர்ப்பு வெளியானது.  பாகவதர் மற்றும் என்.எஸ்.கே இருவரும் நிரபராதிகள் என சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. 2 வருடங்கள் 2 மாதங்கள 13 நாள்கள் சிறைவாசத்திற்குப்பின் கலைவாணர் விடுதலையானார். 

இந்த வழக்கிற்காக பலரும் உதவி செய்தனர். இருப்பினும் அன்றைக்கு வழக்குச் செலவு அதிகமாக இருந்தது. பிரச்னைக்கு ஒரே தீர்வாக ஒரு திரைப்படம் தயாரிப்பதென முடிவெடுத்தது கலைவாணரின் குடும்பம். 'பைத்தியக்காரன்'என்ற அந்தப் படத்தில் பலரும் ஊதியம் இன்றி கலைவாணரின் குடும்பத்துக்குச் செய்யும் கைமாறாக எண்ணிப் பணியாற்றினர். தான் பெரிதும் மதித்துவணங்குபவர்களில் ஒருவரான கலைவாணருக்கு ஏற்பட்ட இன்னலில் தானும் பங்கெடுக்க விரும்பி படத்தில் ஒரு வேடத்தினை ஏற்று நடித்தார் எம்.ஜி.ஆர். 

ஆச்சர்யமாக படம் தயாரிக்கப்பட்டு வந்தநேரத்திலேயே கலைவாணர் விடுவிக்கப்பட்டார். இதனால் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த மதுரத்தை இரட்டை வேடமாக்கி இன்னொரு மதுரத்துக்கு ஜோடியாகக் கலைவாணரை நடிக்கவைத்தனர். படம் பெரு வெற்றிபெற்றது. படத்தில் தன் சிறை அனுபவங்களை 'ஜெயிலிக்குப் போய் வந்த...' எனப் பாட்டாகப் பாடி மக்களை மீண்டும் மகிழ்விக்கத் தொடங்கினார் கலைவாணர். சிறைமீண்டதற்குப்பின் தனிப்பட்ட வாழ்விலும் திரையுலகிலும் கலைவாணரின் புகழ் இன்னும் பலமடங்கு உயர்ந்தது. 

தன் வாழ்வின் இக்கட்டான நேரங்களில் என்.எஸ்.கே வின் அறிவுரையைக்கேட்டு நடப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் சிறப்பான குணங்களாக நாம் பேசுகிற விஷயங்களுக்குச் சொந்தக்காரர் என்.எஸ்.கே. இப்படி தன் வாழ்வின் முக்கிய பங்கு வகித்த கலைவாணர் குறித்து  “கலைவாணர் ஒரு புரியாத புதிர்!” என்ற தலைப்பில் 1966 ம் ஆண்டு ஆனந்த விகடன், தீபாவளி மலரில் ஓர் கட்டுரை எழுதியிருந்தார். 

அதில் கலைவாணர் பற்றி அவர் தெரிவித்த கருத்து இதோ....

“ஒரு மனிதன் தனது வாழ்க்கையைத் தெரிந்தோ தெரியாமலோ இருவிதத் தன்மைகளைக் கொண்டதாக அமைத்துக்கொள்ளுகிறான்.
ஒன்று: தனக்காக. இன்னொன்று: பிறருக்காக. தனக்கு என்று அமைத்துக்கொள்ளும் வாழ்க்கையில் அவனுடைய உடல் முக்கிய குறிக்கோளாக அமைகிறது. அந்த உடலைப் பேணிகொள்ளும் முயற்சிகளை அவன் பலவாறு மேற்கொள்ளுகிறான். கவர்ச்சியாக அலங்காரம் செய்து கொள்வதும், விதம் விதமான உடைகளை உடுப்பதும், அணிவகைகளில் ஆர்வம் செலுத்துவதும் அவன் தனக்காகச் செய்து கொள்ளும் செயல்கள். மேலும், தனக்குப் பிடித்தமானதைத் திரட்டிக் கொள்வது, தன் மனைவியை விரும்பிக் காப்பது, தன் குழந்தைகளைப் பராமரிப்பது, தன் உற்றாரை ஆதரிப்பது, இவை எல்லாம் கூட அவன் தனக்காகத் தன் வசதிக்காகச் செய்து கொள்ளும் சில காரியங்கள்தான்.

இதேபோல் பிறருக்காக அவன் செய்கின்ற காரியங்களும் உண்டு. பிறர் என்ற இந்தச் சொல், அவனைத் தவிர மற்றவர் என்ற பொருளில் குறிப்பிடப்படவில்லை. அவனுக்கு உற்றாராக, நலம் தருவோராக பயன்படுவோராக இருப்பவர்கள் பிறர் என்ற சொல்லால் அழைக்கப்படக்கூடியவர்கள் அல்ல; அவனைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவனுடன் எந்தத் தொடர்பும் கொள்ளாமல், ஏன், அவனுக்குச் சிறிதளவும் பழக்கமே இல்லாதவர்கள்தான் இந்தப் பிறர். அத்தகையவர்களுடைய மகிழ்ச்சியைக் கண்டு திருப்தி அடைவதும், அவர்களின் நன்மைக்காகத் தன்னை, தன் பொருளை, தன் அறிவை அளிக்க முன்வருவதும் உள்ளத்திற்கு மகிழ்ச்சியைத் தருவதற்காக. தனக்காக மற்றவரிடம் ஒன்றை வேண்டுவது யாசகம். பிறருக்காகப் பிறரிடம் ஒன்றை வேண்டுவது பெருந்தன்மை. முதலாவது உடலுக்காக, இரண்டாவது உள்ளத்திற்காக.

இவ்வாறு இருவகைப்பட்ட வாழ்க்கை அமைப்புக்களையும் கலைவாணர் நன்றாக அறிந்தவர். அறிந்தே அவற்றைத் தன் புகழ் வந்ததனால் அவர் அதிலே செருக்குக் கொண்டது கிடையாது. அந்தப் புகழ் எத்தகையது; அதன் ஆக்கிரமிப்பால் விளையக்கூடிய முடிவுகள் என்ன என்பதை முற்றும் உணர்ந்தவர். புகழ் மிகுதியின் அடித்தளத்தில் அவரது அறிவும் பண்புமே அவரை நேர் வழியில் இயக்கிக்கொண்டிருந்தன. வந்து குவிகின்ற புகழ் வராமல் போனாலும் ஏமாற்றத்தால் துன்பப்பட்டுத் தவிக்கின்ற பலவீனமான நிலைமை அவரிடம் இருக்கவே இல்லை. மகாத்மா காந்தியை உண்மையிலேயே மதித்தவர் அவர். கதரும் கட்டுவார். ஆனால், காங்கிரஸ்காரர் அல்ல. அறிஞர் அண்ணா அவர்களைத் தலைசிறந்த தீர்க்க தரிசியாக, மக்கள் நலத்தின் வழி காட்டியாகப் போற்றியவர் அவர்; ஆனால் தி.மு.கழக உறுப்பினர் அல்ல.

பெரியார் ராமசாமி நாயக்கர் அவர்களை அரசியல் வழிகாட்டியாகக் கருதினார். ஆனால், திராவிடக் கழகத்தில் அங்கத்தினர் அல்ல.
மக்களால் போற்றப்பட்ட அவர், மக்களிடம் காணும் குறைகளை எடுத்துக் காட்டத் தயங்குவதில்லை. தங்கள் குறைகளை இடித்துக் கூறுகிறாரே என்று யாரும் கலைவாணரைக் குறை கூறுவதில்லை. அதற்கு மாறாக போற்றவே செய்வார்கள்.
சக நடிகர்களிடம் கூட குறைகண்டால் எடுத்துக் கூறித் திருத்துவார். ஆனால், அவர்களால் போற்றி, மாலைகளே சூட்டப்படுவார்.
இப்படி எல்லோரும் போற்றும் ஓர் அதிசயச் சக்தியாகத் திகழ்ந்த அவர் ஒரு புரியாத புதிர் என்று நான் சொல்லும்போது, உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். கலைவாணரைப் பற்றி எல்லாம் புரிந்ததுதானே, புரியாத ஒரு புதிராக அவர் இருந்தது எப்படி என்று கேட்கவும் செய்யலாம். 

கலைவாணருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தால்தான் நான் சொல்லும் உண்மையை விளக்க முடியும்.
இங்கே சில அனுபவங்களை, எக்காலத்திலும் மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளை உங்கள் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
மாய மச்சேந்திரா படத்தில் நடிப்பதற்காக நாங்கள் எல்லோரும் கல்கத்தாவில் தங்கியிருந்தோம். டைரக்டர் ராஜா சந்திரசேகர் அவர்கள்தான், பட கம்பெனிச் சொந்தக் காரரான பி.எல்.கேம்கா அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பாலமாக இருந்தார்.

பணம் வேண்டுமென்றாலும், வேறு எது வேண்டும் என்றாலும் அவர் மூலமாகத்தான் நாங்கள் பெறுவோம். பாடல்களை கிராமபோன் ரெக்கார்டிங்கில் பதிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டது. கலைவாணர், பின்னணி இசைக் கலைஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள், அந்தப் பாட்டுப்பதிவுக்காக ஏதும் ஒரு தொகை தங்களுக்குத் தரப்படவேண்டும் என்று கேட்டார்கள். முதலாளி மறுத்துவிட்டார் என்று டைரக்டர் கூறினார்.

பாடல் பதிவுக்கு எந்த நாள் குறிக்கப்பட்டதோ அதற்கு முதல் நாள் வரை, பேச்சு நடந்தது. அதற்குப் பயனில்லாமல் போகவே, மறுநாள் அந்தப் பணியில் கலந்து கொள்ள முடியாது என்று கூறி விட்டார்கள். மறுநாள் விடியற் காலையிலேயே எல்லோரும் எழுந்தார்கள். எழுந்தார்கள் அல்ல; எழுப்பப்பட்டார்கள். வேறு யாராலும் அல்ல, கலைவாணரால்தான். என்ன? என்று கேட்டார்கள்.

இன்னைக்கு ரெக்கார்டிங் இல்லே? போக வேண்டாமோ? என்றார் கலைவாணர். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை.
நீங்களும் தானே சம்மதித்தீர்கள்! பணம் வாங்காமல் யாருமே வேலை செய்ய மாட்டோம் என்று அவர்களிடம் சொன்னீர்களே! ஏன் இப்போது போகச் சொல்லுகிறீர்கள்? பணம்தான் தரவில்லையே! போனால் அவமானம் இல்லையா? டைரக்டர் கேலிபண்ண மாட்டாரா? என்று எல்லோரும் கலைவாணரைப் பார்த்துக் கேட்டார்கள். அப்போது கலைவாணர் சொன்ன பதில் இதுதான்;

'நம்மை யார் கேலி பண்ணப் போறாங்க! ராஜா சந்திரசேகர்தானே! அவர் நம்ம ஆளுதானே! ஆனால் முதலாளி யாரு தெரியுமா? கல்கத்தாக்காரர்! நம்மைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? தமிழ் நாட்டிலிருந்து வரும் கலைஞர்கள், நடிகர்கள் அவர்களுக்கு ஒரு யூனிடி கிடையாது; ஒற்றுமை கிடையாது; கட்டுப்பாடு கிடையாது. தமிழ்நாட்டு ஆளுங்க எல்லோருமே இப்படித்தான் இருப்பாங்க என்று எண்ணி இழிவாகப் பேசினா, அந்தக் கறையை எப்படித் துடைக்க முடியும்? முதலில் நாம் செய்ய வேண்டியதைச் செய்துவிடுவோம், அப்புறம் போராடி நம்ம உரிமையைக் கேட்டுக் கொள்வோம். அதன் பிறகு எல்லோரும் பாடல் பதிவில் கலந்துகொண்டார்கள். நானும் கூடப் போனேன். நான் பாடப் போனேனா என்று கேட்டு விடாதீர்கள்!

ராஜா சந்திரசேகர் கொஞ்சம் தாமதமாக வந்தார். கலைவாணரைப் பார்த்தவுடனே அவருடைய கண்கள் தெரிவித்த நன்றி இருக்கிறதே, அதை எந்த வார்த்தையாலும் விவரிக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் பாட்டுப் பதிவில் கலந்துக் கொள்ளமுடியாது என்று சொல்லி, கலைவாணருடைய கருத்துப்படி போய்க் கலந்துக் கொண்டார்களே, அவர்களுக்கும், எனக்கும் கலைவாணர் ஒரு புரியாத புதிராகத் தோன்றினார். ஏன் முதலில் போராட்டத்தில் கலந்து கொண்டார்! மற்றவரையும் போராடும்படி சொன்னாரே! ஆனால், பின்பு ஏன் திடீரென்று பாடல் பதிவில் கலந்து கொள்ள வற்புறுத்தினார்?

அன்று யாருக்கமே புரியாத ஒரு புதிர்தான் அது. சிலர் இப்படியும் சொன்னார்கள் மறைவாக; கலைவாணர், தான் நல்ல பேர்வாங்கிக் கொள்வதற்காக நம்மைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று. ஆனால் சில நாள்களுக்குப் பிறகு, அந்தப் பாடல் பதிவில் கலந்து கொண்டவர்களுக்கு ஏதோ ஒரு பணம் வந்து சேர்ந்தபிறகுதான், அவர் தனக்காக அப்படிச் செய்யவில்லை; மற்றவர்களுக்காகவும் தான் செய்தார் என்பதைப் புரிந்துகொண்டார்கள். இவர்தான் கலைவாணர்.

நியாயம் என்று தனக்குத் தெரிந்த எதையும் வெளியில் சொல்லாமலே அதற்காகப் போராடாமலே அவரால் இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார். இதுதான் கலைவாணரின் உள்ளம்.

ஆனால், ஒரு செயல் நிகழும்போது அவரைப் பற்றி ஒரு புதிராகத்தான் நினைப்பார்கள். முடிவுக்குப் பிறகுதான் உண்மை விளங்கும்.
லட்சுமணதாஸ் என்ற சிறப்புப் பெற்ற கதையாசிரியர் (உரையாடல் ஆசிரியர், பாடலாசிரியர்) கலைவாணரை என்னடா கிருஷ்ணா என்று தான் அழைப்பார், எல்லோருக்கும் கலைவாணரை அவர் டா போட்டு அழைப்பதும் அதைப் பற்றிக் கலைவாணர் சிறிதும் பொருட்படுத்தாமல் சகஜகமாகப் பழகுவதும் வியப்பாக மட்டுமல்ல, வேதனையாகவும் கூட இருந்தன. சிலருக்கு அளவுக்கடங்காத கோபம் கூட உண்டாயிற்று. அவர் எப்படிக் கலைவாணரை ஏக வசனத்தில் அழைக்கலாம்? இதுவே அவர்களின் சினத்திற்குக் காரணம்.
ஒரு நாள் சிலர் லட்சுமணதாஸ் அவர்களைத் தனியாக அழைத்து இழிவாகப் பேசி பயமுறுத்தவும் செய்தனர்.

மறுநாள் கலைவாணர் எல்லோருடனும் சாப்பிடுகையில் கவி லட்சுமணதாஸைப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு மற்றவர்களிடம், “லட்சுமணதாஸ் யார் தெரியுமா? ஓர் ஊரில் ஒரு சமயம் காண்ட்ராக்டர் எங்களுடைய பல நாடகங்கள் நடந்து முடிச்சதுக்கப்புறம் எங்களை விடுவதாக இல்லை. கையில் காசு இல்லாமல் ஊர் திரும்ப முடியாது. அப்போ லட்சுமணதாஸ் என்ன செய்தார் தெரியுமா? அந்தக் காண்ட்ராக்ட்ரோட போராடிப் பணத்தை வசூல் பண்ணி, நாங்கள் எல்லோரும் ஒழுங்கா ஊர் திரும்ப வழி செய்தார்.

அப்போது நான் இப்போ மாதிரி பெரிய ஆர்ட்டிஸ்ட் இல்லே! சாதாரண நடிகன்தான். அப்பவே அவர் பெரிய கவிஞர். அவர் என்னைப் பெரிய மரியாதையோட பேசணுமின்னு  நான் எதிர்பார்க்க முடியுமோ? ‘என்னடா கிருஷ்ணா?’ன்  அவர் கூப்பிடாம வேறுயாரு கூப்பிடறது?” என்றார். எல்லோருக்கும் அந்த விளக்கத்தின் மூலம் புரியாதிருந்த புதிர் புரிந்தது.

இதில் ஒரு புதிய விளைவு என்ன வென்றால், கவி லட்சுமணதாஸ் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கலைவாணரை என்னப்பா! வாப்பா! என்று முறையை மாற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.

தஞ்சையில் புயல் விபத்து நேரிட்டது அல்லவா? அதைப் பற்றி அவசரமாகக் கலைவாணரிடம் பேசச் சென்றேன். அவரிடம் புயல் விபத்து பற்றியும், அதனால் ஏற்பட்ட சேதங்கள் பற்றியும், ஏழை மக்கள் படும் அல்லல் பற்றியும் நான் பேசியபோது அவர் கண்ணீர் விட்டார். அப்போது தாங்க முடியாத துயரத்தோடு அவர் சொன்னார்; இந்நேரம் அரிசி மூட்டைகள் வாங்கிக் கொடுத்திருக்கணுமே? துளித்து விட்டது. அவருடைய கண்ணீரின் காரணம் என்ன என்பதை அறிந்த பிறகு யாரால்தான் கண்ணீர் விடாமல் இருக்க முடியும்!
அவர் தன் வாழ்வுக்காகவா கண்ணீர் சிந்தினார்? தன் புகழுக்காவா கண்ணீர் விட்டார்! இல்லையே! தன் நாட்டு மக்களில் பலர் அவதிப்படுகிற நிலையையும், அந்தத் துன்பத்திலிருந்து அவர்களை மீட்டுக் காக்கும் பணியை உடனடியாகத் தன்னால் செய்ய முடியாத சூழ்நிலையையும் பற்றி நினைத்தல்லவா கண்ணீர் சிந்தினார்!

கலைவாணர் தனக்காகக் கண்ணீர் விட்டதாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் சொல்ல முடியாது. அவர் அனுபவிக்காத உலக வாழ்க்கை கிடையாது. அவர் வைரம் பூண்டிருந்தார். ஆனால், அது நிரந்தரமானது என்று நினைத்ததில்லை. அதுதான் தன்னை உயர்த்துகிறது என்று நம்பியதும் இல்லை. யாரையோ திருப்திப்படுத்தவே அவர் அதை அணிந்தார்.

கொள்கையைச் சொல்வதிலும், மற்றவர்களுக்குக் கொடுப்பதிலும் அவர் கொண்டிருந்த ஆர்வம் கடலிலும் பெரியது; மலையிலும் உயர்ந்தது.
அவர் தனக்காக எதையும் செய்ய வில்லை; பிறருக்காகவே செய்தார். அவர் முன்னேறியது அவரது உழைப்பால் அவருக்கு இருந்த நம்பிக்கையால். பிறருடைய சக்தியை வைத்துக்கொண்டோ பாதுகாப்பிலோ முன்னேறவில்லை. அவருக்குப் பல கலைகளும் தெரியும். பாட்டு எழுதித் தருபவர் பாட்டை எழுதித் தராவிட்டால் அவரே பாட்டெழுதி விடுவார். ஆனால், பாடல் எழுதுபவருக்குச் செய்ய வேண்டிய உதவியைச் செய்யாமல் இருந்து விடமாட்டார். இதுபோல் அவரிடம் வந்து சேர்வோர் அனைவருமே அவருடைய ஆற்றலைச் சிறிது நேரத்திற்குள் தெரிந்துகொண்டு விடுவார்கள். ஆனால், அந்த அடித்தளத்தில் எத்தகைய புரட்சிப் பண்பு படிந்திருக்கிறது என்பதை நடக்க நடக்கத்தான் புரிந்துகொள்வார்கள்.

கலைவாணர் அவருடைய கடைசி காலகட்டத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்தாரே, அப்போது ஒரு நிகழ்ச்சி.
அவரைக் காண அங்கு சென்றவர்களில் குறிப்பிட்ட பலரிடமும் ராமச்சந்திரனைப் பார்க்கணும்; அவனை வரச்சொல்லுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். மதுரம் அம்மையார் அவர்களும் போன் வழியாக எனக்குத் தகவல் கொடுத்தார். யாரும் அவரைப் பார்த்துத் தொந்தரவு செய்யக் கூடாது என்று டாக்டர் அட்வைஸ் செய்திருப்பதாக அறிந்ததால், நான் நேரில் போய்ச் சந்திக்கத் தாமதித்தேன். ஆனால் உடனடியாக நேரில் போய்க் கலைவாணரைப் பார்க்கவில்லையே தவிர, அவருடைய நலத்திற்கான ஆர்வமும் எல்லாவிதத் தொடர்பும் கொண்டிருந்தேன். பிறகு இரண்டொரு நாள்களிலேயே நேரில் பார்க்கச் சென்றேன்

அவர் என்னைப் பார்த்ததும், ராமச்சந்திரா, நான் எதுக்காகக் கூப்பிட்டனுப்பினேன் தெரியுமா? பல பேர் வராங்க. வந்து பார்த்துட்டுப்போ றாங்க. பத்திரிகைக்காரங்க, அவர் வந்து பார்த்தார். இவர் போய்ப் பார்த்தார் என்று செய்தி வெளியிடறாங்க. நீ மட்டும் வந்து பார்த்ததாகச் செய்தி வர்றதில்லை. அதனால் நீ வந்து பார்க்கலைங்கற செய்திதான் வெளியே தெரியும். எனக்காக நீ செய்து வருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ வரலைன்னா  மக்கள் தவறாக நினைப்பாங்க. அந்தக் கெட்ட பேர் உனக்கு வேண்டாம்தான் உன்னை வரச்சொன்னேன் என்றார்.

என்னை வற்புறுத்தி அழைத்ததன் காரணம் இதுதான் என்பது எனக்கு மட்டுமல்ல; யாருக்குத்தான் இந்த வகையில் புரிந்திருக்க முடியும்? அவர் தனக்காவா என்னை அழைத்தார்? எனக்காக அல்லவா என்னை அழைத்திருக்கிறார்!

அந்தப் புரியாத புதிரைப் பற்றி என்ன சொல்வது! எப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் பண்பு அவரது அந்த அழைப்பில் வெளிப்பட்டது!
அப்படிப் புரியாத புதிராக இருந்த காரணத்தால்தான் என்றென்றும், வரலாறு உள்ள வரைக்கும் நிலைத்து விளங்கும் தகுதி அவரிடம் நிறைந்திருக்க முடிந்தது.”