Published:Updated:

"ஜெயலலிதா இல்லாத இடத்தில்..!?" - உருகும் நயினார் நாகேந்திரன்

"ஜெயலலிதா இல்லாத இடத்தில்..!?" - உருகும் நயினார் நாகேந்திரன்
"ஜெயலலிதா இல்லாத இடத்தில்..!?" - உருகும் நயினார் நாகேந்திரன்

"ஜெயலலிதா இல்லாத இடத்தில்..!?" - உருகும் நயினார் நாகேந்திரன்

"ஜெயலலிதா இல்லாத இடத்தில்..!?" - உருகும் நயினார் நாகேந்திரன்

ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க-வில் செயல்பட விருப்பம் இல்லாததன் காரணமாகவே அக்கட்சியில் இருந்து விலகி, பி.ஜே.பி-யில் இணைந்ததாக முன்னாள் அமைச்சரான நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நெல்லை மக்களால் ‘பண்ணையார்’ என அழைக்கப்படுபவர் நயினார் நாகேந்திரன். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் பால் தொழிலில் கொடிகட்டிப் பறந்ததுடன், பால் பண்ணை நடத்தி வந்ததால் இந்தப் பெயர் அவருக்கு வந்தது. எம்.ஜி.ஆர் ரசிகரான இவர், ஜெயலலிதாவின் தீவிரமான விசுவாசியாக இருந்தார். சசிகலா குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தார். சில வருடங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட அ.தி.மு.க-வில் கோலோச்சிய ’கானா’ என்று அழைக்கப்படும் கருப்பசாமி பாண்டியனின் விசுவாசத்துக்கு உரியவராகத் திகழ்ந்தார்.

மறைந்த ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கருப்பசாமி பாண்டியன் அ.தி.மு.க-வில் இருந்து விலகி தி.மு.க பக்கம் சாய்ந்தார். அப்போது இவரையும் தி.மு.க-வுக்கு அழைத்தார். ஆனால், இவர் அ.தி.மு.க-வில் தொடர்ந்து நீடித்ததுடன், கருப்பசாமி பாண்டியனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார். அதனால் 1991-ல் அவருக்கு நெல்லை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், வெற்றி பெற்றதும் அவரே எதிர்பார்க்காத வகையில் அமைச்சர் பொறுப்பு தேடிவந்தது. 

"ஜெயலலிதா இல்லாத இடத்தில்..!?" - உருகும் நயினார் நாகேந்திரன்

தி.மு.க-வினருடன் நெருக்கம்!

மின்சாரம், போக்குவரத்து, தொழில் என பவர்ஃபுல் துறைகளில் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாகவும் விசுவாசமாகவும் இருந்த நால்வரில் நயினார் நாகேந்திரனும் ஒருவர். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்த நயினார் நாகேந்திரன்மீது திடீரென ஜெயலலிதாவுக்கு அதிருப்தி எற்பட்டது. அதற்குக் காரணம், தி.மு.க ஆட்சியின்போது அக்கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுடன் ரகசியக் கூட்டணி அமைத்துத் தொழில்களில் ஈடுபடுவதாக ஜெயலலிதா சந்தேகித்தார். அதற்கேற்ப, அவர் ஹோட்டல் தொழிலை மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தினார்.

சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஹோட்டல்களில் ஒப்பந்தம்செய்து தொழில் தொடங்கினார். போக்குவரத்துக்குச் சொந்தமான நிலங்களைக் குத்தகைக்கு எடுத்தார். தி.மு.க-வினருடன் உள்ள நெருக்கம் காரணமாக நயினார் நாகேந்திரனை ஜெயலலிதா விலக்கத் தொடங்கினார். அதனால், 2011-ல் அவர் எம்.எல்.ஏ-வாக இருந்தபோதிலும் கடைசிவரையிலும் அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவே இல்லை. எப்படியாவது அமைச்சராகிவிட வேண்டும் என்பதற்காகச் சசிகலா மூலமாக அவர் மேற்கொண்ட நடவடிக்கையை ஜெயலலிதா கண்டுகொள்ளவே இல்லை. இதனால் 2011-ல் அவரால் அமைச்சராக முடியவில்லை. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்காது எனப் பலரும் நினைத்தார்கள் (அவர் உள்பட). ஆனால், கடைசி நேரத்தில் சீட் கொடுக்கப்பட்டது. தொகுதி மக்களுடனான தொடர்பில் இருந்து விலகி இருந்த நிலையில், தேர்தலில் 606 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

அதன் பின்னர், அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். தொழில்களில் மட்டும் கவனம் செலுத்திவந்த அவர், அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் இருந்ததால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். சசிகலா பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதும் அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்து வந்த நயினார் நாகேந்திரன், கடந்த 26-ம் தேதி  டெல்லியில் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தார். டி.டி.வி.தினகரனுடனும் நெருக்கமாகவும் இணக்கமாவும் பழகக்கூடிய அவர், திடீரென பி.ஜே.பி-யில் இணைந்தது அவருக்கு நெருக்கமான அ.தி.மு.க-வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

"ஜெயலலிதா இல்லாத இடத்தில்..!?" - உருகும் நயினார் நாகேந்திரன்

பி.ஜே.பி-யின் பகீரத முயற்சி!

குமரி மாவட்ட நாடாளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி சார்பாகப் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றபோதிலும், அந்த மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. அத்துடன், தென் மாவட்டங்களில் கால் ஊன்றும் முயற்சியில் தீவிரம் காட்டும் பி.ஜே.பி-க்கு இதுவரை பின்னடைவே ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் தென் மாவட்டங்களில் பி.ஜே.பி-யில் மக்களுக்கு நெருக்கமான தலைவர்களே இல்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் மக்களிடம் செல்வாக்கு உள்ள தலைவர்களைக் கட்சியில் சேர்க்கும் முடிவை அமித்ஷா எடுத்தார். 

இதன்மூலம் சட்டமன்றத்தில் மட்டும் அல்லாமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் உதவிகரமாக இருக்கும் என்பது அமித்ஷாவின் கணக்கு. இதற்காகவே கடந்த சில மாதங்களாக அக்கட்சியினர் தென்மாவட்டங்களில் முக்கியப் பிரமுகர்களைக் குறிவைத்து காய் நகர்த்திய நிலையில், நயினார் நாகேந்திரன் முதல் கட்டமாக அக்கட்சியில் இணைந்து இருக்கிறார். தென் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமுதாய மக்களைப் பி.ஜே.பி-க்குத் திருப்பும் வகையில், தே.மு.தி.க-வில் இருந்த கணேஷ்குமார் ஆதித்தன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் சேர்க்கப்பட்டார். தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களைப் பி.ஜே.பி-யை  நோக்கித் திருப்பும் வகையில் தற்போது அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மாநில அளவில் பொறுப்பு வழங்கவும் அதன்மூலமாகத் தென் மாவட்டங்களில் கட்சியைப் பலப்படுத்தவும் பி.ஜே.பி மேலிடம் முடிவு செய்துள்ளது. அத்துடன், அவரது ஆதரவாளர்களைக் கட்சியில் சேர்க்கும் திட்டமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ஏற்கெனவே டாக்டர் கிருஷ்ணசாமி பி.ஜே.பி-யுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இது தவிர மற்றொரு தலைவர் வெகுவிரைவில் அந்தக் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாகப் பேச்சு எழுந்துள்ளது. இவர்களின் மூலமாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரிடம் கட்சியைக் கொண்டு செல்ல முடியும் என்பது கட்சியினரின் முடிவாக உள்ளது. இது தவிர, அ.தி.மு.க-வில் நிலவும் குழப்பம் காரணமாக அக்கட்சியில் இருக்கும் தென் மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் சேர்க்கும் திட்டத்துடன் நயினார் நாகேந்திரன் களம் இறங்கி இருக்கிறார். அதனால் அ.தி.மு.க-வில் இருந்து பலர் விரைவில் பி.ஜே.பி-யில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

"ஜெயலலிதா இல்லாத இடத்தில்..!?" - உருகும் நயினார் நாகேந்திரன்

''அம்மா இல்லாத கட்சியில் விருப்பமில்லை''!

நயினார் நாகேந்திரன் கூறுகையில்,  ’’நான் பி.ஜே.பி-யில் இணைந்ததும் ஏதோ புதிய கட்சியில் சேர்ந்தது போன்ற எண்ணமே எனக்கு இருக்கவில்லை. காரணம், அங்குள்ள அனைவருமே எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். அதனால் அவர்களோடு இணைந்து பணியாற்றுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. நான் எதையும் எதிர்பார்க்காமல்தான் அந்தக் கட்சியில் சேர்ந்திருக்கிறேன்.  எம்.ஜி.ஆரும், அம்மாவும் இருந்த கட்சியான அ.தி.மு.க தற்போது மூன்று அணிகளாகப் பிரிந்து கிடக்கின்றன. அவர்களுக்குள் நடக்கும் இந்தச் சண்டையை நான் விரும்பவில்லை. அதுபற்றிக் கருத்துச் சொல்லவும் நான் ஆர்வம் காட்டவில்லை. எம்.ஜி.ஆரும் அம்மாவும் இல்லாத கட்சியில் இருக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால்தான் பி.ஜே.பி-யில் சேர்ந்தேன். என்னை இந்தக் கட்சிக்கு வருமாறு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பே பொன்.ராதாகிருஷ்ணன் அழைத்தார். அப்போது வரவில்லை. சற்று தாமதமானாலும் இப்போது வந்திருக்கிறேன்.

நான், பி.ஜே.பி-யில் சேர்ந்ததைப் பலரும் வரவேற்கிறார்கள். ஒரு சிலர் என்னிடம், ‘நீங்க இன்னும் ஒரு மாத காலம் பொறுத்திருந்து பார்த்துவிட்டுப் பிறகு பி.ஜே.பி-யில் சேர்ந்திருக்கலாம்’ என்று கருத்துச் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடி ஒரு மாதம் காத்திருந்தால், இந்தக் கட்சியில் என்னுடைய சீனியாரிட்டி போயிருக்கும். ஒரு சிலர், நான் தவறான முடிவை எடுத்திருப்பதாகச் சொன்னார்கள். அப்படிச் சொன்னவர்களிடமும் நான் நட்புடனேயே இருப்பேன் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். பி.ஜே.பி-யில் இருந்துகொண்டே இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்’’ என்றார் அக்கறையுடன்.  

அடுத்த கட்டுரைக்கு