Published:Updated:

''வித்யாசாகர் ராவ் நடவடிக்கை மர்மமாக உள்ளது..!'' டாக்டர் ராமதாஸ் சொல்லும் காரணங்கள்

''வித்யாசாகர் ராவ் நடவடிக்கை மர்மமாக உள்ளது..!'' டாக்டர் ராமதாஸ் சொல்லும் காரணங்கள்
''வித்யாசாகர் ராவ் நடவடிக்கை மர்மமாக உள்ளது..!'' டாக்டர் ராமதாஸ் சொல்லும் காரணங்கள்

''வித்யாசாகர் ராவ் நடவடிக்கை மர்மமாக உள்ளது..!'' டாக்டர் ராமதாஸ் சொல்லும் காரணங்கள்

"எடப்பாடி  பழனிசாமி அரசுக்கு ஆதரவை திரும்பப் பெற்றவர்கள் ஆளுங்கட்சியில் நீடிப்பதாக ஆராய்ச்சிசெய்து கண்டுபிடிப்பது தேவையற்றது. அது ஓர் ஆளுநரின் வேலையும் அல்ல. சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வருக்கு ஆணையிடுவதும், பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், மாற்று வழிகளை ஆராய்வதும்தான் ஆளுநரின் பணியாகும். இதைச் செய்யத் தயங்குவது ஏன்? என்பது மர்மமாக உள்ளது.'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவ், தமிழக அரசியல் நிலவரம்குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார். முதல்வர் எடப்பாடி  பழனிசாமி அரசுக்குப் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அதன்பின் நிருபர்களிடம் கூறிய திருமாவளவன், ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் 19 பேரும், இன்னும் அ.தி.மு.க-வில்தான் நீடிக்கின்றனர். அதனால், அது அவர்களின் உட்கட்சிப் பிரச்னை. இதில், ஆளுநர் தலையிட முடியாது’’ என்று தன்னிடம்  ஆளுநர் தெரிவித்ததாகக் கூறியிருந்தார். 

இந்நிலையில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 19 பேர் கடிதம் கொடுத்து  ஒன்பது நாள்களாகிவிட்ட நிலையில், அதுகுறித்த தமது முடிவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

ஒரு மாநிலத்தில் பெரும்பான்மை வலிமையுள்ள அரசுப் பதவியில் நீடிப்பதையும், அது பெரும்பான்மையை இழந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆணையிட்டு, அதன் முடிவுக்கு ஏற்றவாறு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதும்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள கடமை. இதை, உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வுகள் பல தீர்ப்புகளில் உறுதி செய்திருக்கின்றன. அதன்படி செயல்படுவதைத் தவிர்த்து, ஆதரவைத் திரும்பப் பெற்றவர்கள் ஆளுங்கட்சியில் நீடிப்பதாக ஆராய்ச்சிசெய்து கண்டுபிடிப்பது தேவையற்றது. அது ஓர் ஆளுநரின் வேலையும் அல்ல.

எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டதாக, 19 உறுப்பினர்கள் ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் இருவர், 'அவைக்கு வெளியில் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை' என்று கூறியுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில், சுமார் 75 உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இத்தகைய தருணத்தில், ஆளுநர் செய்யவேண்டியது என்ன? என்பதை அரசியலமைப்புச் சட்டம் தெளிவாகக் கூறியிருக்கிறது. சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வருக்கு ஆணையிடுவதும், பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் மாற்று வழிகளை ஆராய்வதும்தான் ஆளுநரின் பணியாகும். இதைச் செய்ய ஆளுநர் தயங்குவது ஏன்? என்பது மர்மமாக உள்ளது.


கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி, மாநில ஆளுநர் பரத்வாஜிடம் கடிதம் கொடுத்தனர். அதையேற்று, அக்டோபர் 11-ம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஆணையிட்டார். அதுதான் ஆளுநரின் பணியாகும். மாறாக, ஆதரவைத் திரும்பப்பெற்ற 11 பேரும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் என்பதால், அது உள்கட்சிப் பிரச்னை என்று கூறி பொறுப்பைத் தட்டிக்கழிக்கவில்லை. இதுபோன்ற கடந்தகால முன்னுதாரணங்களை ஆராயாமல் நம்பிக்கை வாக்குக் கோர ஆணையிட முடியாது என்று ஆளுநர் கூறியிருப்பது, தில்லி தலைமையின் விருப்பப்படி, பினாமி ஆட்சியைக் காக்கத் துடிக்கிறார் என்ற குற்றச்சாற்றை நிரூபித்திருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஏற்றுக்கொண்ட பொறுப்புக்குத் துரோகம் செய்வதைவிட, மிகப்பெரிய பாவம் எதுவும் இருக்க முடியாது. எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படியும், கடந்த கால முன்னுதாரணங்களின் அடிப்படையிலும் தமிழக சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆளுநர் ஆணையிட வேண்டும்'' என்று கூறியுள்ளார்

அடுத்த கட்டுரைக்கு