Published:Updated:

“டி.டி.வி.தினகரன் பதுங்குவது ஏன்..?” அடுத்தகட்ட ஆலோசனை

“டி.டி.வி.தினகரன் பதுங்குவது ஏன்..?” அடுத்தகட்ட ஆலோசனை
“டி.டி.வி.தினகரன் பதுங்குவது ஏன்..?” அடுத்தகட்ட ஆலோசனை

“டி.டி.வி.தினகரன் பதுங்குவது ஏன்..?” அடுத்தகட்ட ஆலோசனை

''தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியைக் கைப்பற்ற விடமாட்டேன் என்றும், அவர்களைப் பதவியில் இருந்து இறக்கியே தீருவேன்'' என்றும் முழங்கியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். ''அதற்கு இப்போது அவசரம் இல்லை'' என்று கால அவகாசமும் கொடுத்துள்ள அவர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

''எடப்பாடி பழனிசாமிமீது நம்பிக்கை இல்லை'' என தன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரைத் தனித்தனியாகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனுக் கொடுக்கவைத்த டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி என்று பலரின் கட்சிப் பதவிகளை அதிரடியாகப் பறித்துவருகிறார். இந்த நிலையில், ''செப்டம்பர் 12-ம் தேதி கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவோம்; சசிகலாவைக் கட்சியைவிட்டே நீக்குவோம்'' என்று எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி மற்றும் மைத்ரேயன் எம்.பி., மனோஜ்பாண்டியன் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுக் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற காய்களை நகர்த்தி வருகின்றனர். ஆனால், டி.டி.வி.தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவைக் கொடுத்து, ''எந்த முடிவை எடுத்தாலும் எங்கள் தரப்பு பதிலைக் கேட்டு முடிவெடுங்கள்'' என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். 

பன்னீர்செல்வம் - சசிகலா மோதலில் சசிகலா பக்கம் நின்ற எடப்பாடி பழனிசாமி அணி, தேர்தல் ஆணையத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக மனுக்களைக் கொடுத்திருந்தனர். இப்போது அந்த மனுக்களைத் திருப்பி வாங்க முடியாமல் இடியாப்பச் சிக்கலில் மாட்டிக்கொண்டு திண்டாடுகின்றனர் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார் டி.டி.வி.தினகரன். ''பொதுக்குழுவைக் கூட்ட, எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் அதிகாரம் இல்லை; அது செல்லாது'' என்றும் அவர் சொல்கிறார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் என்ன சொல்லப்போகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் டி.டி.வி.தினகரன். அதே நேரத்தில், எடப்பாடிக்கு எதிராக இப்போது இருக்கும் 19 எம்.எல்.ஏ-க்கள் என்ற எண்ணிக்கையை, இன்னும் அதிகரிக்கச் செய்யும் வேலைகளில் டி.டி.வி.தினகரன் தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. தங்களையும் சீண்டி, தி.மு.க-வையும் சீண்டி இருக்கும் எடப்பாடி அரசு, இந்த டிசம்பருக்குள் காலி என்று கணக்குப் போடுகிறார்கள் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள். அதனால்தான், ''முதல்வரும் துணை முதல்வரும் பதவி விலக கால அவகாசம் கொடுக்கிறேன்'' என்று டி.டி.வி.தினகரன் நேற்று அறிவித்திருக்கிறார். 

இதுதொடர்பாக மேலும் அவர், ''பதவி ஆசையில், பதவி வெறியில் எடப்பாடியும் பன்னீரும் செயல்படுகிறார்கள். துரோகிகளால் எப்படி நல்லாட்சி தரமுடியும்? ஜெயலலிதா வழிகாட்டுதலை இவர்கள் இருவருமே மறந்துவிட்டார்கள். எனவே, அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும். ஜெயலலிதாவுக்குப் பிறகு சசிகலாவுக்குத்தான் கட்சியில் செல்வாக்கு இருக்கிறது. எனவே, அவர்கள் இறங்கிவர வேண்டும் என்று நான் நேரம் கொடுக்கிறேன். துரோகம் செய்த எடப்பாடியும் இரட்டை இலையை முடக்கக் காரணமாக இருந்த பன்னீரும் பதவி விலகினால்தான் இப்போதுள்ள பிரச்னையில் முடிவு ஏற்படும். நாங்கள் எடுத்த முயற்சி வெற்றிபெறும்'' என்றார்.

இந்த அறிவிப்பை உதாசீனப்படுத்தும் வகையில் காஞ்சி கிழக்கு மாவட்டத்தில் நடந்த எம்.ஜி,ஆர் நூற்றாண்டு விழாவில் பேசினார் ஓ.பன்னீர்செல்வம். அவர் பேசுகையில், ''தீய சக்திகளை அழிப்பதற்காகவும், ஏழை, எளிய மக்களைக் காப்பதற்காகவும் அண்ணாவின் பெயரில் எம்.ஜி.ஆர் இயக்கம் தொடங்கினார். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு இப்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சி. எந்த நோக்கத்துக்காக எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை ஆரம்பித்தாரோ, எந்த நோக்கத்துக்காக ஜெயலலிதா இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்தாரோ, அந்த மகத்தான தலைவர்களின் லட்சியங்களை நிறைவேற்ற இந்த ஆட்சி நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் அரசு ஓர் இரும்புக்கோட்டை. இந்தக் கோட்டையில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை. அராஜக ஆட்சிக்கு இடமில்லை'' என்று விளாசினார்.

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''இந்த அரசை எப்படியாவது வீழ்த்திவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்; கொல்லைப்புறத்தின் வழியாக ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. ஜெயலலிதா ஆட்சியைச் சிறப்பாக நடத்த எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். எத்துணை இடர்பாடுகளையும் தவிடுபொடியாக்கும் ஆற்றலை ஜெயலலிதா நமக்குத் தந்துள்ளார். இந்த ஆட்சியை, கட்சியை அசைக்கவோ.... ஆட்டவோ ஒருபோதும் முடியாது. நாம் எதற்கும் அஞ்சப்போவதில்லை. நம் இருபெரும் தலைவர்கள் காட்டிய வழியில் சென்றுகொண்டிருக்கிறோம். நம்முடைய ஆட்சியும் கட்சியும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்'' என்று ஆவேசம் பொங்கப் பேசினார்.

இந்தப் பேச்சுகளை எல்லாம் அப்படியே கேட்ட டி.டி.வி.தினகரன், தன்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள்குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய டி.டி.வி.தினகரன், ''இரு அணிகள் இணைப்புக்கு சசிகலா குடும்பம்தான் பிரச்னை என்றவுடன் நான் ஒதுங்கியிருந்ததுபோல, இப்போது எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என்று எம்.எல்.ஏ-க்கள் சொல்லும்போது அவர் ஒதுங்கியிருக்க வேண்டும். அதுதான் கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்லது. அதைச் செய்வதை விட்டுவிட்டு எம்.எல்.ஏ-க்களின் நம்பிக்கையை இழந்த எடப்பாடியும் இரட்டை இலைச் சின்னத்தை முடக்க டெல்லி படையெடுத்த பன்னீர்செல்வம் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற நினைப்பது துரோகத்தின் உச்சம். இவர்களுக்கு விரைவில் தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள்'' என்று சொல்லி இருக்கிறார்.

இதனிடையே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் டெல்லிக்குச் சென்று, குடியரசுத்தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு