Published:Updated:

‘தமிழிசையால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை!’

புயலை கிளப்பும் கடிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'ங்கள் கட்சிக்குள் இருக்கிற கோஷ்டி பூசல், தமிழிசை தலைவராக வந்த பிறகு தீர்ந்துவிடும் என்று நம்பினோம். ஆரம்பக் காலத்தில் இருந்தே கட்சியில் இருக்கிற எங்களைப் போன்றவர்களுக்கும், முன்னாள் நிர்வாகிகளுக்கும் உரிய மரியாதை கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால், புதிய நிர்வாகிகள் பட்டியலில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு பதவிகள் வழங்கப்படாது என்று தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்ததுக்கு மாறாக, புதிய நிர்வாகிகள் பட்டியலில் பலரும் கிரிமினல் பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள்' என நம்மிடம் கொதிப்போடு பேசினார்கள் பி.ஜே.பியின் முன்னாள் நிர்வாகிகள் சிலர்!

‘தமிழிசையால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை!’

 புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடுவதுக்கு முன்பாக, அமித்ஷாவுக்கும் ராஜீவ் பிரதாப் ரூடிக்கும் இவர்கள் அனுப்பிய கடிதத்தின் நகலையும் நம்மிடம் கொடுத்தனர். தமிழக பி.ஜே.பியை படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கும் அந்தக் கடிதம் இதோ...

'வணக்கம்...

சகோதரி தமிழிசை தலைமையில் தமிழக பா.ஜ.க வளர்ச்சியை நோக்கி பயணிக்க இருக்கிறதா அல்லது வீழ்ச்சியை நோக்கி பயணிக்க இருக்கிறதா என்பது அவர் எடுக்கும் தைரியமான முடிவைப் பொறுத்தே அமையும் என்பது திட்டவட்டம். அவருக்கு தக்க அறிவுரையும், தைரியமும் ஊட்டும் வண்ணம், மூத்த தொண்டர்களை அரவணைத்துச் செல்ல அறிவுரை வழங்கி, அவரது செயல்பாட்டை தமிழக பி.ஜே.பியின் வளர்ச்சியை நோக்கி பயணிக்க வைக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

பொன்.ராதாகிருஷ்ணன் மாநிலத் தலைவராக வந்த பிறகு நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் கடும் பின்னடைவை தமிழக பி.ஜே.பி சந்தித்தது. நாடு முழுவதும் மோடி அலை வீசியதையும் மீறி, அ.தி.மு.க வெற்றிபெற்றதுக்கு பொன்னாரின் தவறான முடிவுகளே காரணம். கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக மாவட்டத் தலைவரை தூண்டிவிட்டவர் பொன்னார். நீலகிரி தொகுதியில் மோகன்ராஜுலுவின் சீடர் குருமூர்த்திக்கு சீட் கொடுக்கப்பட்டது. அவர் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு, போட்டியில் இருந்து விலகி நம் கட்சியை கேவலப்படுத்தினார். சமீபத்தில் நடந்த நெல்லை மேயர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட வெள்ளையம்மாள் என்பவர், எதிர்க் கட்சியிடம் மிகப்பெரிய தொகையை பெற்றுக்கொண்டு வாபஸ் பெற்றுவிட்டார்.  நம் கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் வைகோ, ராமதாஸ், சீமான், பழ.நெடுமாறன் போன்றவர்களிடம் இன்றைக்கும் பொன்னார் நெருக்கமாக இருக்கிறார். பொன்னாரும் அவரது ஆதரவாளர்களும் முக்கியப் பதவிகளில் இருப்பதால், தமிழிசையால் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது.

‘தமிழிசையால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை!’

முக்கியப் பதவிகளில் உள்ள பொன்னாரின் ஆதரவாளர்கள்:

மோகன் ராஜுலு: அமைப்புப் பொதுச்செயலாளராக 15 வருடங்களாக இருக்கிறார்.  இவர் மீது வடபழனி காவல் நிலையத்தில் 775 / 2013 குற்றப்பத்திரிகை நிலுவையில் உள்ளது.

வானதி சீனிவாசன்: மேலிடத் தலைவர்களின் அறிமுகத்தை வைத்துக்கொண்டு, விளம்பரங்களின் மூலம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் கெட்டிக்காரர். கட்சிக்காக கடின உழைப்பைத் தராதவர். தொலைக்காட்சிகளில் மட்டும் தலையைக் காட்டுபவர்.  

சுரேந்திரன் (மாநில துணைத்தலைவர்): பொன்னாருக்கான தேவைகளை நிறைவேற்றுவதைத் தவிர, கட்சிக்கு எந்த வேலையும் செய்யாதவர். ஆனாலும், தன் பொறுப்பில் உள்ள 5  மாவட்டங்களின் தலைவர்களை ஆட்டிப்படைத்து வருகிறார். சமீபத்தில் மதுரையில் இவர் மீது கொலை  முயற்சி வழக்கு ஒன்று  சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் (வழக்கு எண். 811 / 2014) உள்ளது.

கருப்பு என்ற கருப்பு முருகானந்தம் (மாநில பொதுச்செயலாளர்): தஞ்சையில் பி.ஜே.பி வேட்பாளராக நிறுத்தப்பட்ட கருப்பு முருகானந்தம் மீது ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன. அவர், காவல் துறையின் மிக மோசமான லிஸ்டில் இருந்தவர் என்று சொல்கிறார்கள். அவருக்கு மாநில பொதுச்செயலாளர் பதவி கொடுத்து, அவரை காப்பாற்றி வருகிறார்கள்.

எஸ்.ஆர்.சரவணப்பெருமாள்: உடல்நலக் குறைவு காரணமாக  வருடத்தில் முக்கால்வாசி நாட்களை மருத்துவமனையிலேயே கழிப்பவர்.

இந்த ஐந்து பேரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும். அதுவரை தமிழிசையால் சுதந்திரமாக செயல்பட முடியாது' என்று முடிகிறது அந்தக் கடிதம்.

கடித விவகாரம் டெல்லி வரை போயிருப்பதால், பி.ஜே.பி தலைமை விரைவில் விசாரணையைத் தொடங்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு