Published:Updated:

’ஜெயலலிதாவைக் கண்டுகொள்ளாத பச்சைமால்’ - குமரி மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு 

’ஜெயலலிதாவைக் கண்டுகொள்ளாத பச்சைமால்’ - குமரி மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு 
’ஜெயலலிதாவைக் கண்டுகொள்ளாத பச்சைமால்’ - குமரி மாவட்ட அ.தி.மு.க-வில் சலசலப்பு 

டி.டி.வி. தினகரனால் கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க. (அம்மா) செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பச்சைமால் சென்னையிலிருந்து இன்று காலை நாகர்கோவில் வந்தார். 

அவரது ஆதரவாளர்கள் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தற்போது கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க-வில் அடுத்தடுத்து குழப்பங்களும் நடந்து வருகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் குமரியில் உள்ள 6 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோற்றது. அதன் எதிரொலியாகக் கடந்த ஆண்டு ஜூன் 8-ம் தேதி தளவாய்சுந்தரத்தை கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். விஜயகுமாரை கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக ஜெயலலிதா அறிவித்தார். அதையடுத்த சில வாரங்களில் ஒரு சிலரைத் தவிர ஒட்டுமொத்தமாக கிளைக்கழகம் முதல் மாவட்டம் வரை அனைத்து நிர்வாகிகளும் மாற்றப்பட்டனர். குமரி மாவட்டத்தில் ஆக்டிவாக இருந்த அ.தி.மு.க-வினர் பலரது பதவி பறிக்கப்பட்டதோடு, அவர்கள் டம்மியாக்கப்பட்டதால் அரசியலில் இருந்தே பலர் ஒதுங்கிவிட்டனர். இதனால் அ.தி.மு.க. மாவட்ட  தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டச் செயலாளர் விஜயகுமார் கட்சிக்காரர்களை மதிப்பது இல்லை, அவர் வந்தபின் கட்சி அழியத் தொடங்கி விட்டது என்று அ.தி.மு.க-வினர் புலம்பிக் கொண்டிருந்தனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஓ.பன்னீர்செல்வம் கட்சித் தலைமைக்கு எதிராகக் குரல் எழுப்பினார். இதனால், குமரி அ.தி.மு.க. பல பிரிவுகளாக சிதறிப் போனது. கழக அமைப்புச் செயலாளராகவும், டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் இருக்கும் தளவாய்சுந்தரம் சென்னையில் செட்டில் ஆகி விட்டார். இந்தசூழலில் டி.டி.வி தினகரன் மூலம் முன்னாள் அமைச்சரான பச்சைமாலுக்கு கழக அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. அ.தி.மு.க. மாவட்டச் செயலாளராக நீண்டகாலம் இருந்த பச்சைமால், மறுபடியும் ஆக்டிவ்வாக செயல்படுவார் என்று நினைத்தபோது, அவரும் சற்று ஒதுங்கி இருந்தார். பெரும்பாலான அ.தி.மு.க-வினர் எந்தப் பக்கம் போவது என குழப்பத்தில் இருந்ததால், மாவட்டச் செயலாளர் விஜயகுமார் எம்.பி. அணி கலக்கத்தில் இருந்து வந்தது. டி.டி.வி. தினகரன் ஆதரவில் பச்சைமால் மாவட்டச் செயலாளர் ஆகும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது மாவட்டச் செயலாளராக பச்சைமால் நியமிக்கப்பட்டு, விஜயகுமார் எம்.பி. நீக்கப்பட்டுள்ளார். ரயில் மூலம் நாகர்கோவில் வந்த பச்சைமாலுக்கு, அ.தி.மு.க-வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவரின் காரின் முன் பைக் ஊர்வலம் சென்றதால் நாகர்கோவில் நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பேருந்தில் சென்ற பயணிகளும், வாகனத்தில் சென்றவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். 

வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த பச்சைமால், அதைத்தொடர்ந்து,  அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆனால், எம்.ஜி.ஆர் சிலையின் அருகில் பல நாள்களாக உள்ள ஜெயலலிதா மணல் சிற்பத்துக்கு பச்சைமால் மரியாதை செலுத்தவோ, அதைக் கண்டுகொள்ளவோ இல்லை. டி.டி.வி. தினகரால் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பச்சைமால், 'அம்மாவை கண்டுகொள்ளவே இல்லை, அம்மாவை மறந்துவிட்டார்' என்ற குரல்கள் அவருடன் வந்திருந்தவர்களிடையே எழுந்ததைப் பார்க்க முடிந்தது. இதனால், சிறிது சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அம்பேத்கர், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பச்சைமால் மரியாதை செலுத்தினார். குமரியில் சிதறிப் போன அ.தி.மு.க-வை பச்சைமால் ஒன்றிணைப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு