Published:Updated:

''இது மலையை நகர்த்தும் வேலையா?” ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் கொதித்த வைகோ!

''இது மலையை நகர்த்தும் வேலையா?” ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் கொதித்த வைகோ!
''இது மலையை நகர்த்தும் வேலையா?” ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் கொதித்த வைகோ!

''இது மலையை நகர்த்தும் வேலையா?” ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் கொதித்த வைகோ!

சீமைக் கருவேல மரம் ஒழிப்பு, கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை மூடல் என்று பல போராட்டங்களை முன்னின்று நடத்தி  வெற்றி பெற்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, வரும் 3-ம் தேதி அறப்போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நெல்லை மாவட்டத்திலிருந்து 12 ஊராட்சிகளைப் பிரித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கோவில்பட்டி தாலுக்காவில் இணைப்பதற்கு முடிவெடுத்திருக்கும் தமிழக அரசைக் கண்டித்து அறப்போராட்டம் நடத்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

திருநெல்வேலி  மாவட்டம் - குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 44 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. அதில் முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, வெங்கடாசலபுரம், ஜமீன்தேவர்குளம், பிள்ளையார்நத்தம் ஆகிய 12 ஊராட்சி மன்றங்களை நெல்லை மாவட்டத்திலிருந்து பிரித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கோவில்பட்டி தாலுக்காவில் இணைப்பதற்குத் தமிழக அரசு முடிவெடுத்துச் செயல்பட்டபோதே, அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்தப் பின்னணியில் சட்டமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது, இந்த 12 ஊராட்சிகளும் உள்ளடக்கிய 44 ஊராட்சிகளைக் கொண்ட குருவிகுளம் ஒன்றியம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் இணைக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருவேங்கடத்தைத் தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டது. இந்த 12 ஊராட்சிகளையும் கோவில்பட்டி தாலுகாவில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனை எதிர்த்து 12 ஊராட்சிகளும் திருவேங்கடம் தாலுகாவிலேயே நீடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சார்பாக அதே உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதியரசர்கள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் 16.8.2017 அன்று விசாரணைக்கு வந்தது. ஆகஸ்ட் 16-ம் தேதி அன்று தமிழக அரசுக்கு பிறப்பித்த ஆணையில்,  “பிரச்னைக்குரிய 12 ஊராட்சிகளும் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி தாலுக்காவில் சேர்க்க வேண்டுமா அல்லது நெல்லை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திருவேங்கடம் தாலுக்காவிலேயே நீடிக்க வேண்டுமா என்று தமிழக அரசு முடிவு எடுத்து செப்டம்பர் 5 -ம் தேதி நடைபெறும் விசாரணை அன்று தனது கருத்தை எழுத்துமூலமாகத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்கள்.

இந்தப் பிரச்னை குறித்து ஆகஸ்ட் 30 -ம் தேதி அன்று தலைமைச் செயலாளர்  கிரிஜா வைத்தியநாதனிடம் பொதுமக்கள் நலனைக் கருதி 12 ஊராட்சிகளும் திருவேங்கடம் தாலுக்காவிலேயே நீடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை விளக்கி வைகோ பேசினார். அப்போது கிரிஜா வைத்திநாதன், ஆவன செய்வதாகப் பதில் கூறியுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் இப்பிரச்னை குறித்து விளக்கமாக வைகோ பேசி இருக்கிறார். 

அதே நாளில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடமும் பிரச்னையை விளக்கமாக வைகோ கூறியபோது, திருவேங்கடம் தாலுக்காவிலேயே 12 ஊராட்சிகளையும் நீடிக்கச் செய்வதாக உறுதி அளித்து இருக்கிறார். ஆனால், ஆகஸ்ட் 31-ம் தேதி அன்று பிற்பகலில் அமைச்சர் வேலுமணி, ''உள்ளாட்சித் துறை நிர்வாக ஆணையர் இதுகுறித்து உங்களிடம் பேசுவார்'' என்று அவரிடத்தில் செல்போனைக் கொடுத்துள்ளார். அந்த ஆணையரிடம் வைகோ பிரச்னையை விளக்கியபோது, வைகோ கருத்தை மறுத்து, “வருவாய்த் துறையிலும், காவல் துறையிலும் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. கோவில்பட்டி தாலுக்காவோடு சேர்க்கப்பட்டுவிட்டது. இப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் இப்படி ஆணையிட்டு இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.

வைகோ அதற்கு, ''மீண்டும் நெல்லை மாவட்டத்திலேயே இந்த ஊராட்சிகள் நீடிப்பதற்கு வருவாய்த் துறை, காவல் துறை ஆவணங்களில் திருத்தம் செய்ய முடியாதா..? இது என்ன மலையை நகர்த்தும் வேலையா..? முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர்,  மக்கள் பிரச்னைகளில் அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டபோது, 'மக்களுக்காகத்தான் சட்டமும்... விதிகளும்; விதிகளுக்காக மக்கள் இல்லை' என்று அதிகாரிகளுக்குப் புத்திமதி சொல்லி நிர்வாகத்தை நடத்தினார். உங்களைப் போன்ற அதிகாரிகள்தான் இந்த அரசுக்குக் கெட்டபெயரை ஏற்படுத்துகிறார்கள். அமைச்சர்களுக்குத் தவறான யோசனைகளைக் கூறி, பொதுமக்கள் நலனைக் காற்றில் பறக்கவிடுகிறார்கள். நான் மக்களைத் திரட்டி அறப்போராட்டம் நடத்துவேன்’' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், செப்டம்பர் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருவேங்கடத்தில் வைகோ தலைமையில், '12 ஊராட்சிகளும் திருவேங்கடம் வட்டத்திலேயே நீடிக்க வேண்டும்' என வலியுறுத்தி அறப்போராட்டம் நடைபெறுகிறது. அதில், அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்க வேண்டும்' என வைகோ அழைப்பு விடுத்துள்ளார். 

போராட்டக்களத்தில் இறங்கிவிட்டார் வைகோ..!

அடுத்த கட்டுரைக்கு