Published:Updated:

பல இன்னல்களை கடந்து திராவிட இயக்கம் வளர்ந்துள்ளது: கருணாநிதி

பல இன்னல்களை கடந்து திராவிட இயக்கம் வளர்ந்துள்ளது: கருணாநிதி
பல இன்னல்களை கடந்து திராவிட இயக்கம் வளர்ந்துள்ளது: கருணாநிதி
பல இன்னல்களை கடந்து திராவிட இயக்கம் வளர்ந்துள்ளது: கருணாநிதி

சென்னை: பல இன்னல்களை கடந்துதான் திராவிட இயக்கம் வளர்ந்துள்ளது என்று 'விடுதலை' பத்திரிகையின் விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

'விடுதலை' பத்திரிகையின் ஆசிரியராக கி.வீரமணி பொறுப்பேற்று, 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி சென்னை பெரியார் திடலில் நேற்று நடைபெற்ற விழாவில், திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்து பேசியதாவது:

விடுதலை பத்திரிகையைப் போல,நான் 1942-ம் ஆண்டில் முரசொலி என்ற கையேட்டினை தொடங்கினேன்.அதனை துண்டு அறிக்கையாக இலவசமாக வழங்கினோம்.சிதம்பரத்தில் வர்ணாசிரம மாநாடு நடத்தினார்கள்.அந்த மாநாட்டை எதிர்த்து முரசொலியில் நீண்ட கட்டுரை எழுதினேன்.ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு வீதிகளில் விநியோகித்தோம்.

அன்றிரவு முதலிரவுக்காக நான் சிதம்பரம் செல்ல வேண்டும்.திருவாரூரில் இருந்து எனது நண்பன் தென்னனுடன் சிதம்பரம் புறப்பட்டேன்.ரயிலடி உள்ளே போகக்கூடாது என்று எங்களை போலீசார் வழிமறித்தனர்.ஏன் என்று கேட்டபோது,உங்களுக்கு 144 தடை உத்தரவு உள்ளது.வர்ணாசிரம மாநாட்டுக்கு எதிராக எழுதியதால் இந்த உத்தரவு என்றார்கள்.

எனக்கு முதலிரவு என்று தென்னன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.அவர்கள் அனுமதிக்கவே இல்லை.திருவாரூர் திரும்பிவிட்டோம்.அன்று முதலிரவு இப்படித்தான் முடிந்தது.அந்த காலத்தில் கருத்துகளை வெளியிடக்கூட கடுமையான அடக்குமுறை இருந்தது என்பதை எடுத்துச் சொல்வதற்காகவே இந்த சம்பவத்தை நினைவூட்டினேன்.இப்படி பல கஷ்டங்களை அனுபவித்து உள்ளோம்.

##~~##
அப்போதெல்லாம் நானும், வீரமணியும் பெரியாரின் கட்டளைப்படி,பெரியார் கொள்கைகள் பற்றி மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு கூட்டங்களுக்கு செல்வோம்.திராவிடர் இயக்கத்தை அவ்வளவு சாதாரணமாக வளர்க்கவில்லை.சொன்னோம்,எழுதினோம்,பேசினோம் என்று மட்டுமில்லாமல், அடிபட்டிருக்கிறோம்,கல்லெறிபட்டுள்ளோம்.
ஒருதடவை பெரியார் மீது செருப்பு வீசினார்கள்.இன்னொரு செருப்பை தேடிப் பாருங்கள்.அதுவும் கிடைத்தால் காலில் மாட்டிக் கொள்ளலாம் என்று பெரியார் தனது பெருந்தன்மையைக் காட்டினார்.இப்படியெல்லாம் வளர்த்ததுதான் திராவிடர் இயக்கம் என்ற இந்த பேரியக்கம்.இப்போதும் பார்க்கிறவர்கள் அஞ்சும் அளவுக்கு காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது.
வீரமணி நமக்கு கிடைத்தது,நாமெல்லாம் பெற்ற பேறு.அவர் நீண்ட காலம் வாழ வேண்டும்.என்னைவிட அவர் இளையவர்.அவர் நீண்டகாலம் வாழ்ந்து, தமிழுக்கும்,தமிழ் சமுதாயத்திற்கும்,தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.நான் அவருக்கு உதவியாக இருப்பேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
வீரமணி பேசுகையில்
"பத்திரிகை மூலம் மிகப்பெரிய புரட்சி செய்தார் பெரியார்.எனக்கு அவர் கிடைத்தார்.அவரது கொள்கைகள் கிடைத்தன.அவரது தத்துவத்தால் நான் மனிதன் ஆனேன்.என்னைப் போல மற்றவர்களும் ஆக வேண்டும் என்று பாடுபடுகிறேன். பத்திரிகை,சமுதாயத்திற்கு பயனுள்ளதாகவும்,உண்மையை எடுத்துச் சொல்வதாகவும் இருக்க வேண்டும் என்று சொன்னார் பெரியார்.எங்களுக்கு அன்று பெரியார் இருந்தார். இன்று எங்கள் மூத்த சகோதரராக கருணாநிதி இருக்கிறார்.
100 ஆண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் வலிமையான ஆயுதம்தான் விடுதலை பத்திரிகை. சமுதாய எழுச்சிக்கு எங்கள் பயணம் தொடரும். பெரியாரின் கொள்கைகள், லட்சியங்கள், திராவிட இயக்கத்தின் வெற்றி தொடரும். ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும், இனத்தின் மீட்சிக்கு விடுதலை பத்திரிகை போர்வாளாகவும், கேடயமாகவும் எப்போதும் துணை நிற்கும்" என்றார்.
வாழ்த்துரை
இந்த விழாவில்,திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அறிமுக உரையாற்றினார்.அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் பொன்னீலன்,பத்திரிகையாளர்கள் ரமேஷ் பிரபா, ஏ.எஸ்.பன்னீர்செல்வம்,லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர் ஜெக்மோகன் சிங் வர்மா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.