Published:Updated:

ஊழலை எதிர்க்கும் ரஜினி, பி.ஜே.பி-யில் எப்படி சேரமுடியும்?

கொந்தளிக்கும் ஜி.ராமகிருஷ்ணன்

த்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கூட்டுப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளன. இந்த நிலையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்தோம். சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஊழலை எதிர்க்கும் ரஜினி, பி.ஜே.பி-யில் எப்படி சேரமுடியும்?

''தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின்  அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறதே?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''தஞ்சாவூரில் நடந்த சம்பவத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இரவு நேரத்தில் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது. இதனைக் காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். தமிழகத்தில் இன்று மக்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்னைகளுக்கு எங்கள் கட்சி குரல் கொடுத்துவருகிறது. இது பிடிக்காத சில விஷமிகள் இதுபோன்று செய்துள்ளனர். புதுச்சேரியில் நடந்த  ஓர் ஆலய பிரவேசப் போராட்டத்துக்காகத்தான் எங்கள் அலுவலகம் தாக்கப்பட்டது. பெரியார் மண்ணில் இன்னமும் தலித் மக்களுக்கு எதிரான இதுபோன்ற கொடுமைகளைக் கண்டித்துப் போராட வேண்டியுள்ளது. சாதியை வைத்து சிலர் அரசியல் செய்து வருவது மிகவும் தவறு. சாதி அரசியலை வேருடன் ஒழிக்க வேண்டியது அவசியம்.'

''தமிழகத்தில் முக்கியப் பதவிகளுக்கு எல்லாம் 'ஆலோசகர்’ என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளதே?''

''இதுபோன்ற பதவிகளை உருவாக்கி வைத்திருப்பது தவறான ஒன்று. ஓய்வுபெற்ற அதிகாரிகளை ஆலோசகராக நியமித்தால் பதவியில் இருக்கும் அதிகாரிகள் திறமையற்றவர்களா என்ற கேள்வி எழுகிறது. உதாரணமாக சட்டசபைச் செயலாளர் ஜமாலுதீன் பிரச்னை. ஜெயலலிதா மீதான தண்டனை குறித்து அரசிதழ் வெளியிட்டதால் சிக்கலுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். அவருக்கு முதலில் பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்டதே தவறு.'

''ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான தீர்ப்பு தமிழக அரசியலில் என்ன மாதிரியான மாற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது?''

''உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட சட்டவரைவு திருத்தத்துக்குப் பிறகு பதவியில் இருக்கும் ஒரு முதல்வர் தண்டிக்கப்பட்டு, பதவியிழந்துள்ளது இதுவே முதன்முறை. இது ஊழலுக்கு எதிராகப் போராடும் எங்களைப் போன்ற கட்சியினருக்கு வலுச்சேர்த்திருக்கிறது. இது அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஓர் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. எல்லா அரசியல்வாதிகளும் கலங்கிப் போயுள்ளனர்.'

''ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''மக்களின் பாதுகாப்பற்ற நிலைக்கு இது  எடுத்துக்காட்டு. சமீபத்தில் மதுரை விமலாதேவியின் கெளரவக்கொலை ஒன்றேபோதும். ஒரு தலித் இளைஞனை திருமணம் செய்துகொண்ட பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துவந்து பிரித்துள்ளனர். அதன்பின் காப்பகத்தில் இருந்த பெண்ணை போலீஸாரே வீட்டுக்்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்தச் சமயத்தில் எங்களது கட்சி சார்பாக, அந்தப் பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று மெயில் மூலமாகவும் நேரிலும் புகார் அளித்தும் எஸ்.பி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி என்பது அமைச்சர்களை மட்டு்ம் கொண்டது இல்லை. அரசு நிர்வாகமும் அதிகாரிகளும் சேர்ந்தது. அதிகாரிகளே இப்படி அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என்றால், அமைச்சர்கள் பற்றி கூற வேண்டுமா?'

ஊழலை எதிர்க்கும் ரஜினி, பி.ஜே.பி-யில் எப்படி சேரமுடியும்?

''ரஜினியை பி.ஜே.பியில் இணைக்க சிலர் முயற்சி செய்து வருகிறார்களே?''

''ரஜினி பி.ஜே.பியில் இணைவதோ, தனிக் கட்சி ஆரம்பிப்பதோ அவரது தனிப்பட்ட உரிமை. ஆனால், ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று நினைக்கும் அவர், ஊழல் கட்சியான பி.ஜே.பியில் சேர்வதன் மூலம் ஊழலை எதிர்க்கவே முடியாது. அவருக்கும் அது நல்லதல்ல.'

''மோடி ஆட்சியின் செயல்பாடுகள், திட்டங்கள் எப்படி இருக்கின்றன?''

'ஆட்சி செய்வதைப்போல மாயையைத்தான் அவர் உருவாக்கி வைத்துள்ளார். மக்களின் நலனைவிட கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத்தான் அதிக அளவு சலுகை தருகிறார்கள். உதாரணமாக, அவர் பதவியேற்ற மூன்று நாட்களில் 108 உயிர்காக்கும் மருந்துகளின் மீதான விலைக் கட்டுப்பாட்டை அவரது அரசு நீக்கியது. இதனால் கேன்சர், இதய நோய், சர்க்கரை, ரத்த அழுத்தம், ரேபிஸ் ஆகியவற்றுக்கான மருந்துகளின் விலை ஐந்து மடங்கு உயரும். இந்தியாவில் இருக்கும் ஐந்து முக்கியமான மருந்து உற்பத்தி நிறுவனங்களில், மூன்று பன்னாட்டு நிறுவனங்கள்.  அடுத்து நில ஆர்ஜித சட்டம், காடுகள் மீதான சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவர உள்ளனர். அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களிடையே வகுப்புவாதத்தைப் புகுத்த முயற்சி எடுத்து வருகிறார்கள். தூர்தர்ஷன் ஓர் அரசு நிறுவனம். அதில் ஆர்.எஸ்.எஸ் தலைவரை எப்படி பேசவைக்கலாம்? இவரது 100 நாள் ஆட்சியில் 4,600 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுவே அவர்களது ஆட்சியின் நிலை. இதனை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி வருகிறோம்!'

மா.அ.மோகன் பிரபாகரன்

படம்: ஆ.முத்துக்குமார்