Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

மு.நடராஜன், திருப்பூர்7.

சுயமரியாதை, நீதிக் கட்சி இயக்கத்தின் முன்னோடி ஏ.டி.பன்னீர்செல்வம் பற்றி...?

கழுகார் பதில்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழகத்தில் பன்னீர்செல்வம் என்ற பெயர், அரசியல் குடும்பங்களில் வைக்கக் காரணமானவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம்.  இன்றைய திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திலிருக்கும்,  செல்வபுரம்  என்ற ஊரில் பிறந்து, லண்டனில் பாரிஸ்டர் படித்து, அங்கேயே வழக்கறிஞர் தொழிலும் பார்க்கும் அளவுக்கு மேதைமை பன்னீர்செல்வத்துக்கு இருந்தது. சொந்த ஊருக்கு நல்லது செய்யாமல் இங்கே சம்பாதித்துக்கொண்டிருப்பதா என்று தஞ்சை வந்தார். தஞ்சை நகராட்சித் தலைவர் ஆனார். 1930ம் ஆண்டு எம்.எல்.ஏ ஆனார். மக்கள் பிரதிநிதி என்ற அங்கீகாரத்தோடு லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்றார். சென்னை ராஜதானியின் உள்நாட்டு அமைச்சராகவும் (1935 - 37) இருந்தார்.  இளைஞர்களை அரசியல் பக்கமாக ஈர்ப்பதில் ஆர்வம் காட்டியவர் பன்னீர்செல்வம். ''வாலிபர்கள் அரசியல் விஷயங்களில் ஊக்கம் கொள்ள வேண்டும். அரசியலில் தலையிடுவது பற்றி அபிப்பிராய பேதம் இருந்தாலும் சமுதாயத் துறையில் பாடுபட வேண்டியது கட்டாயம்'' என்று வலியுறுத்தி வந்தார். அவரது ஆங்கிலப் புலமை, அரசியல் தெளிவு காரணமாக இந்திய மந்திரியின் ஆலோசகர் பொறுப்பு 1940ல் கிடைத்தது. அதாவது, லண்டனில் இருந்து இந்திய விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய பதவி அது. பன்னீர்செல்வத்தை லண்டனுக்கு வழியனுப்ப சென்னை கன்னிமாரா ஹோட்டலில் பெரிய விருந்து நடந்தது. அன்றைய தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள். பன்னீர்செல்வம் சென்ற விமானம் ஓமன் கடலில் 2.3.1940 அன்று வீழ்ந்தது. அதுவே பன்னீர் மறைவு தினமாக மாறியது.

'மறைந்தாயே எங்கள் செல்வமே!’ என்று அண்ணா அன்று எழுதினார். 'பாழும் உத்தியோகம் வந்து உயிருக்கு உலை வைத்துவிட்டதே’ என்று பெரியார் கதறினார். தமிழக அரசியலின் ஆரம்பகட்டத்தில் மறக்க முடியாத மரணமாக அது பதிவானது!

டி.ஜெயசிங், கோயம்புத்தூர்

மக்கள் முதல்வர், 'தமிழக முதல்வராக’ ஆக என்ன நடக்க வேண்டும்?

சட்ட முதல்வரும் நீதி முதல்வரும் மனது வைக்க வேண்டும்.

கலைப்ரியன், திருச்செங்கோடு.

காங்கிரஸில் இருக்கும்போது தன்னால் கௌரவமான வாக்குகள் பெற முடியாது என்று அஞ்சி தேர்தலில் போட்டியிடாத ஜி.கே.வாசன், தனிக் கட்சி தொடங்கி என்ன சாதித்துவிடப் போகிறார்?

காங்கிரஸில் இருப்பதால்தான் வாக்குகள் வாங்க முடியவில்லையோ என்று நினைத்திருக்கலாம் அல்லவா?

ரேவதிப்ரியன், ஈரோடு1.

2ஜி வழக்கில் கருணாநிதியின் மகள் செல்வியும் சேர்க்கப்பட்டுள்ளாரே?

கலைஞர் டி.வி.க்கு 200 கோடி ரூபாய் வந்தது சம்பந்தமான அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், கருணாநிதியின் மகள் செல்வி சாட்சியாகச் சேர்க்கப்பட்டு உள்ளார். கருணாநிதியின் மனைவி தயாளு, நீதிபதிக்கு சாட்சியம் அளிக்கும்போது உடன் இருந்தவர் செல்வி. அதனால் அவர் சாட்சியாக ஆக்கப்பட்டு உள்ளார்.

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

உண்மையைச் சொல்லுங்கள்... பேரறிஞர் அண்ணா அதிகம் நம்பியது கருணாநிதியையா... எம்.ஜி.ஆரையா?

கருணாநிதியின் செயலையும் எம்.ஜி.ஆரின் முகத்தையும் நம்பினார் அண்ணா. 'நீ முகத்தைக் காட்டினால் போதும்’ என்ற அண்ணா, 'கருணாநிதியைப் போல என் எல்லாத் தம்பிமார்களும் செயல்பட்டால் கட்சி வளரும்’ என்றும் சொன்னார்.

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

ஜவஹர்லால் நேருவின் 125வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள பி.ஜே.பிக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுக்காதது சரியா?

ஜவஹர்லால் நேரு மீது மரியாதை  இல்லாத கட்சியை காங்கிரஸ் எப்படி அழைக்கும்? இது தேவையற்ற சர்ச்சையைத்தான் மேடையில் உருவாக்கும். எனவே,

பி.ஜே.பியை காங்கிரஸ் அழைக்காதது சரிதான்.

கலைஞர் ப்ரியா, வேலூர் (நாமக்கல்).

ஆறு ஆண்டுகளுக்கு ஜெயலலிதா தகுதி இழப்பு செய்யப்பட்டதாக சட்டசபைச் செயலாளர் துணிச்சலாக அறிவித்துவிட்டாரே?

ஏண்டா அறிவித்தோம் என்று முழித்துக்கொண்டு இருக்கிறாரே?

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

கழுகார் பதில்கள்!

தற்போது நடக்கும் ஆட்சியின் பெருமைகள் எல்லாம் பன்னீர் செல்வத்தைச் சேருமா... ஜெயலலிதாவைச் சேருமா?

பெருமை கொள்ளும் அளவுக்கு ஏதாவது நடந்தால்தானே இந்தக் கேள்வி எழும்?

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

டிசம்பர் 18ம் தேதியை நினைத்தால் திக்திக் என்கிறதே?

அன்று பதற்றப்பட எதுவும் நடக்கப் போவது இல்லை. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ள நாள் அது. அன்றைய தினம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதன் பிறகு தமிழக அரசின்  லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் கர்நாடக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பிவைக்கும், கர்நாடக உயர் நீதிமன்றம். இந்த மேல்முறையீட்டு மனுவை எந்த நீதிபதி விசாரிப்பார் என்பதையும் அதன் பிறகே அறிய முடியும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மாற்றி அமைக்கப்பட்ட வழக்கு என்பதால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனுவையும் எந்த நீதிபதி விசாரிக்கலாம் என்று உத்தரவு போடவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நீதிமன்ற நடைமுறைகளே அடுத்த ஆண்டு பிப்ரவரியைத் தொட்டுவிடும். எனவே பதற்றம் தேவையில்லை.

எஸ்.ஆர்.ஹரிஹரன், சென்னை67.

எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

கஜினி  ரஜினி என்ன வித்தியாசம்?

எதுகை மோனைப் போல ஒலிக்கிறது. எது லட்சியமோ அதனை எத்தனை தடவை மோதியும் அடைய நினைத்தவர் கஜினி. தயக்கம் காட்டியதே இல்லை. ஆனால் ரஜினி அப்படியா?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற முகவரியிலும் அனுப்பலாம்!