Published:Updated:

" ஐயா ராஜபக்‌ஷே... இவர்களையும் விடுவியும்!”

கதறும் மீனவர்கள்

லங்கை நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களது தண்டனையை ரத்து செய்ததன் மூலமாக கருணை உள்ளவராகக் காட்டப்படுகிறார் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே. ஐந்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டு தமிழகம் வந்த மறுநாளே 14 தமிழ் மீனவர்களைக் கைதுசெய்து உள்ளது, இலங்கை கடற்படை. நித்தமும் நடக்கும் கொடுமையான அத்தியாயமாக மீனவர் கைது  சம்பவம் தொடர்கிறது.

" ஐயா ராஜபக்‌ஷே... இவர்களையும் விடுவியும்!”

வங்கக்கடலின் பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மறுநாள் கரை திரும்பும் வரை அவர்களது குடும்பத்தினர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் காத்திருக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகபட்டினம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்களின் இந்தத் துன்பம் இன்று வரை நின்றபாடில்லை. இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையின் கொலைவெறிக்குப் பலியாகி இருக்கிறார்கள். பல நூறு மீனவர்கள் உடல் ஊனப்பட்டிருக்கிறார்கள். படகின் முதலாளிகளாக இருந்த பலர், இன்று வாழ வழியின்றி முடங்கிக் கிடக்கிறார்கள். இத்தனைக்கும் பிறகும் வாழ வழியில்லாததால், மீண்டும் மீண்டும் மீன் பிடிக்கச் செல்வதும் அவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்துச் செல்வதும் அன்றாட செய்திகளாக மாறிவிட்டன. ஆரம்ப காலங்களில் இலங்கையின் கொடுமைக்கு எதிராகக் கொதித்தெழுந்து போராடிய மீனவர்கள், நாளாக நாளாக 'இதுவும் கடந்துபோகும்’ என்ற வசனங்களைக் கடைப்பிடித்து அமைதியாகிப் போனார்கள். மீனவர்களின் அமைதியை தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்ட இலங்கை கடற்படை, விடுதலைப்புலிகளுக்கு உதவியதாகச் சொல்லி மீனவர்களை இதுவரை பழிவாங்கி வந்தது. புலிகள் அமைப்பு முடிவுக்கு வந்த பிறகு போதைப் பொருள் கடத்துவதாகச் சொல்லி பொய் வழக்கு போடுகின்றது. இந்த சதி வலையில் சிக்க வைக்கப்பட்டவர்கள்தான் தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேரும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 'இப்படி தண்டனை கொடுத்தால்தான் இனி யாரும் மீன்பிடிக்க  வரமாட்டார்கள்’ என்று நினைத்துத்தான் அப்படி தண்டனை கொடுத்தார்கள். இந்தச் செய்தி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், வேறு வழியில்லாமல் அவர்களை விடுவிக்கும் முடிவுக்கு இறங்கி வந்தது ராஜ அரசு.

இந்த 5 மீனவர்களை விடுவித்த ராஜபக்‌ஷே அரசு, இன்னும் சிறையில் இருக்கும் பலரை மறைப்பது ஏன் என்று மீனவர்கள் கொதிக்கிறார்கள்.

கடந்த ஜூன் மாதம் முதல் தேதி மீன்பிடி தடைக்காலம் முடிந்தது. அதன் பிறகு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். அன்று தொடங்கிய இலங்கை கடற்படையின் இந்தச் சிறை பிடிப்பு வேட்டை கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி வரை தொடர்ந்துகொண்டிருந்தது. இந்த நான்கு மாதங்களில் 300க்கும் மேற்பட்ட மீனவர்களும் அவர்கள் சென்ற 82 படகுகளும் சிறை பிடிக்கப்பட்டன. மத்தியில் பி.ஜே.பி அரசு பதவி ஏற்ற நிலையில், மீனவர்கள் கொத்துக்கொத்தாக சிறை பிடிக்கப்பட்ட சம்பவம், மீனவர்களை மீண்டும் போராட்டத்தில் குதிக்க வைத்தது. இதன் விளைவாக சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களில் கடைசியாகப் பிடித்து செல்லப்பட்ட 24 மீனவர்களைத் தவிர, அனைவரும் விடுவிக்கப்பட்டு ஊர் திரும்பிவிட்டனர். இன்னும் சிறையில் 24 மீனவர்கள் இருக்கிறார்கள். கடந்த 23ம் தேதி கைதான 14 பேரையும் சேர்த்தால் இலங்கை சிறையில் இப்போது 38 பேர் இருக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய படகு உரிமையாளர் முனியசாமி, ''30 ஆண்டுகளாக எங்கள் மீனவர்கள் அனுபவித்து வரும் வேதனைகளுக்கு ஆட்சி மாற்றம் முடிவு கட்டும் என நினத்தோம். ஆனால், ஆட்சி மாறியும் காட்சி மாறாத நிலையே தொடர்ந்தது. காங்கிரஸ் ஆட்சியின்போது தாமதமானாலும்கூட சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களுடன் அவர்களது படகுகளையும் விடுவித்தது இலங்கை அரசு. ஆனால் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபின் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதுகூட முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இலங்கை கட்டுப்பாட்டில் தற்போது 85 படகுகள் உள்ளன. தலைமன்னார் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த 15 பேருக்குச் சொந்தமான படகுகள் மீட்க முடியாத நிலையில் மூழ்கிக் கிடக்கின்றன. ஒவ்வொரு படகும் 20 முதல் 25 லட்சம் ரூபாய் மதிப்புடையவை. நாங்கள் யாரும் பரம்பரை முதலாளிகள் இல்லை. கடல் தொழிலின் அடிமட்ட தொழிலாளிகளாக இருந்து கடன்மூலம் வாங்கிய படகுகளைக்கொண்டு தொழில் செய்து வருபவர்கள்தான். இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாகப் படகுகளைப் பறிகொடுத்துவிட்டு பரிதவிக்கிறோம்'' என்றார்.

தூக்கில் இருந்து மீனவர்களைக் காப்பாற்றியது யார் என மோதிக்கொள்ளும் மத்திய, மாநில அரசுகள் இலங்கை சிறைகளில் அடைபட்டு கிடக்கும் அப்பாவி மீனவர்களையும் அவர்களது வாழ்வாதாரமான 85 படகுகளையும் விரைவாக மீட்டு வர முயன்றால் நல்லது.

இரா.மோகன், படம்: உ.பாண்டி