Published:Updated:

தனிமனித தாக்குதலால் கட்சியை வளர்க்க முடியாது!

புதிய கலாசாரம் அமைப்பேன் என்கிறார் ஜி.கே.வாசன்!

ல்யாண வீடுபோல  கலகலப்பாக, பரபரப்பாக இருக்கிறது ஜி.கே.வாசனின் அலுவலகம். பல ஊர்களில் இருந்தும் வந்துகுவியும் தொண்டர்களின் வாழ்த்துகளையும், சால்வைகளையும் வாங்கிக் கொண்டே இருக்கிறார் வாசன். புதிய கட்சிக்கான தொடக்க விழா வரும் 28ம் தேதி திருச்சியில் நடக்க இருக்கிறது. 'வெளியில எங்க கட்சி பத்தி என்ன சொல்றாங்க...?’ என்று கேட்டபடியே கேள்விகளை எதிர்கொண்டார் ஜி.கே.வாசன்.

தனிமனித தாக்குதலால் கட்சியை வளர்க்க முடியாது!

''மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸை நீங்கள்தான் அகில இந்தியக் காங்கிரஸுடன் இணைத்தீர்கள். நீங்கள் கையை காட்டுபவர்களுக்குத்தான் எம்.பி வேட்பாளர், மாநிலத் தலைவர் பதவி என அனைத்துப் பதவிகளும் வழங்கப்பட்டன. இப்போது இந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் பெரும் சரிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும்போது... கட்சியை உதறித் தள்ளிவிட்டு புதுக் கட்சி தொடங்குவது சரியா?'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''2001ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன என்று எல்லோருக்கும் தெரியும். மிகப் பலவீனமாகத்தான் காங்கிரஸ் அப்போது இருந்தது. ஆனால், தமிழ் மாநில காங்கிரஸ் மிகப் பலமாக இருந்தது.  மூப்பனார் மறைந்த பின்னர், நான் த.மா.காவின் தலைவர் ஆனேன். 23 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலைவராகச் செயல்பட்டேன். அப்போது காங்கிரஸ் கட்சி 7 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் கிடையாது. இதை எல்லாம் தாண்டி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பெரிய பேரணி நடத்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தோம். அதன்பின் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றோம். எனவே, காங்கிரஸ் கட்சி சரிவுப் பாதையில் செல்லும்போது  விலகுவதாகச் சொல்வது சரி அல்ல!''

''இவ்வளவு காலம் மத்தியில் சோனியா காந்தியுடன் பணியாற்றி இருக்கிறீர்கள். சோனியா தமிழ்நாட்டை எந்த மனப்பான்மையுடன் பார்க்கிறார்?'

''தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை டெல்லி தலைமை பூர்த்தி செய்யவில்லை. தமிழக நலன் சார்ந்து செயல்படவும் விடவில்லை. ஒருவிதமான மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தைப் பார்த்தார்கள். தமிழக நிலைமைகளைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு என்றாலே கசந்தது. தமிழக விவகாரங்கள், தமிழர் நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து கலந்து ஆலோசனை செய்யத் தயக்கம் காட்டினார்கள். குறிப்பாக இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. என்னுடைய எண்ணங்களை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, அன்றைய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றவர்களிடம் சொல்லி வந்தேன். ஆனால், அவர்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழக அரசியலின் நிஜ நிலவரம் அவர்களுக்குத் தெரியவில்லை. தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை!''

''காங்கிரஸ் கட்சி மீதான உங்களது வருத்தங்கள் என்ன?''

''தொண்டர்களது எண்ணம்தான் என்னுடைய எண்ணமும். காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைய உள்ளன. ஆனால், அகில இந்திய காங்கிரஸ் தலைமையால் அவற்றை பூர்த்தி செய்ய முடியவில்லை. உதாரணமாக, தமிழ்நாட்டில் 48 ஆண்டுகளாக திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சிசெய்து வருகின்றன. இவர்களுடன் கூட்டணி வைத்த காரணத்தால், காங்கிரஸ் வளர முடியாத சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள். தேர்தலில் கூட்டணி வைக்கும்போது அந்தக் கட்சியின் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து, அறிந்து, தலைவர்களுடைய கருத்துகளைப் பெற்றுத்தான் கூட்டணி அமைக்க வேண்டும். இதை எல்லாம் செய்யாமல் தலைமை செயல்பட்டது எல்லோருடைய வருத்தம். அதேபோல், லட்சியத்தை அடைய வேண்டும் என்றால், நல்ல கனவை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் முறையான பாதையில் போக வேண்டும். இதை எல்லாம் செய்யவில்லை என்பதுதான் என் ஆதங்கம்.''

''உங்களுக்கு எதிராகச் சிலர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தபோதிலும், நீங்கள் எந்தப் பதிலும் சொல்லவில்லை. ஏன்?''

''பதிலுக்குப் பதில் சொல்லும் வம்படியில் இறங்க நான் தயாராக இல்லை. புதிய கலாசார அரசியலுக்கு வழிவகுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். இதை நோக்கித்தான் எங்கள் பயணமும். வாழ்க வசவாளர்கள் என்பதுதான் அவர்களுக்கான எனது பதில்!''

''அமைதியாகக் கட்சி நடத்த முடியுமா?''

''மக்களுக்கு எதிராக எந்தக் கட்சிகள் நடந்தாலும், செயல்பட்டாலும் அதை எதிர்த்து களத்தில் குரல் கொடுக்கும் முதல் கட்சி எங்கள் கட்சியாகத்தான் இருக்கும். தனிப்பட்ட தாக்குதலுக்கு எல்லாம் பதில் சொன்னால் கட்சி வளர்ந்துவிடும், மக்கள் நம் பக்கம் திரும்பி நம்மை ஏற்றுக்கொண்டு வாக்களிப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பதிலுக்குப் பதில் சொல்வது, அறிக்கை விடுவது, விவாதிக்கத் தயாரா என்பது எல்லாம் பழைய பாணி. இப்போது நேர்மையாக, ஒழுங்காகச் செயல்பட்டால் போதும். அந்தக் கட்சி மக்களின் எதிர்பார்ப்பைப் பெறும்!''

''யாரோடு உங்கள் கூட்டணி...?''

''திருச்சியில் தெரிந்துகொள்வீர்கள்!'' என்று சஸ்பென்ஸுடன் முடிக்கிறார் ஜி.கே.வாசன்!''

நா.சிபிச்சக்கரவர்த்தி

படம்: சு.குமரேசன்