Published:Updated:

மிஸ்டர் கழுகு: உருவாகிறது ‘ஊழல் எதிர்ப்பு அணி’!

மிஸ்டர் கழுகு: உருவாகிறது ‘ஊழல் எதிர்ப்பு அணி’!

மிஸ்டர் கழுகு: உருவாகிறது ‘ஊழல் எதிர்ப்பு அணி’!

சென்னை மேயர் சைதை துரை​சாமியைப் பற்றிய செய்திகளுடன் ஆரம்பித்தார் கழுகார்!

''சென்னை மாநகராட்சி மேயர் துரைசாமி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார், அவரை கட்சியைவிட்டு நீக்கிவிட்டார்கள், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யப் போகிறார்கள்... என்று சனிக்கிழமை அன்று காட்டுத் தீயைப்போலச் செய்தி பரவியது. அன்றைய தினம் டெல்லியில் நடந்த ஒரு விழாவில் இருந்தார் சைதை துரைசாமி. அந்த விழாவுக்குத் தொழில் துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சென்றிருந்தார். அது சம்பந்தமான செய்தி 23ம் தேதி நமது எம்.ஜி.ஆரில் வந்துள்ளது. ஆனால், சைதை துரைசாமி பெயரை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்கள் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள். இதிலிருந்தே சைதை விஷயத்தில் ஏதோ சூட்சுமம் இருப்பது தெரிகிறது!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''சூட்சுமத்தை நீர்தான் அவிழ்க்க வேண்டும்!''

''சென்னை மாநகராட்சிக் கூட்டம் கடந்த 20ம் தேதி நடந்தது. அதில் பேசிய சைதை துரைசாமி, மு.க.ஸ்டாலினையும்  மா.சுப்பிரமணியத்தையும் கடுமையாக அர்ச்சனை செய்தார். இவர்கள் இருவரும் 1016.79 கோடி ரூபாய் அளவுக்கு மாகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். 'நீங்கள் இருவரும் உத்தமபுத்திரர்களைப்போல உலவிக் கொண்டு இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல தெம்போ, திராணியோ உங்களுக்கு இருக்கிறதா? சூடு சொரணை இருந்தால் சட்டமன்றத்தைக் கூட்டத் தயாரா என்கிறார் ஸ்டாலின். அதே ஸ்டாலினிடம் கேட்கிறேன், மானம், வெட்கம், சூடு, சொரணை, ரோஷம் இருந்தால் இந்த மாமன்றத்துக்கு வந்து பதில் அளிக்கத் தயாரா?’ என்று சைதை கேட்டார். அதன் பிறகு ஸ்டாலினைக் கடுமையாக கமென்ட் அடித்தார். அளவுக்கு மீறி சைதை ஏன் பேசுகிறார் என்று அ.தி.மு.க கவுன்சிலர்களே முகம் சுளித்தார்கள்!''

''ம்!'

மிஸ்டர் கழுகு: உருவாகிறது ‘ஊழல் எதிர்ப்பு அணி’!

''அன்று மாலையே சைதை துரைசாமிக்கு போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்தது. அவரும் போனார். அவர் கார்டனுக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே முதல்வரின் செயலாளர்களில் ஒருவரும் சென்றுள்ளார். கார்டனைவிட்டு வெளியே வரும்போது சைதை துரைசாமி முகம் கறுத்து சுருங்கி இருந்ததாம். இதற்கு அடுத்தநாள் 21ம் தேதி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு ஓர் உத்தரவு கட்சியின் தலைமை நிலையத்தில் இருந்து போனது. அந்த அதிரடி உத்தரவு அதிர்ச்சியாக இருந்தது. 'இனிமேல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு சைதை துரைசாமியை அழைக்க வேண்டாம். கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பெயரையும் போட வேண்டாம்’ என்பதுதான் அந்த உத்தரவு. இந்தத் தகவலை உடனே மாவட்டச் செயலாளர்கள் அந்தந்தப் பகுதிச் செயலாளர்களுக்குச் சொன்னார்கள். வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள்... என்று அடுத்தடுத்து அந்தத் தகவல், கட்சியினர் அனைவருக்கும் பரவியது. மேயர் பெயரை போடக் கூடாது என்று உத்தரவு வருகிறது என்றால், மேட்டர் சீரியஸ்தான் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். 'மேயரிடம் இருந்து ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டுவிட்டது’ என்றும் செய்தி பரவியது.''

''இந்தச் செய்தி வரும்போது அவர் டெல்லியில் இருந்தார் என்று சொல்கிறீரே? ஏதாவது நடவடிக்கை என்றால், டெல்லிப் பயணத்தைத் தடை செய்திருப்பார்களே?''

''டெல்லி விழாவில் சென்னை மாநகராட்சிக்கு விருது தரப்பட்டது. இந்தியா முழுவதும் 30 தலைநகரங்கள், 20 வளர்ந்து வரும் நகரங்களைத் தேர்வு செய்து விருது கொடுத்தார்கள். தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்த விழா அது. அதற்கு போக வேண்டாம் என்று தடுத்தால், பிரச்னை ஆகும் அல்லவா? அதனால் தடுக்கவில்லை. இங்கு தடுப்பணை போட்டுவிட்டார்கள்.''

''சைதை துரைசாமி மீது திடீர் கோபத்துக்கு என்ன காரணம்?''

''மாநகராட்சி கூட்டத்தில் சைதை துரைசாமி சவால்விட்டார் அல்லவா? அதற்கு பதில் அளித்து தி.மு.க முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் சைதைக்கு அவர் பகிரங்கமாக சவால்விட்டு இருந்தார். 'மன்றத்தைக் கேடயமாகப் பயன்படுத்தி சவால்விட்டுக் கொண்டிருக்கும் சைதை துரைசாமியே, உங்களது யோக்கியதை சைதாப்பேட்டையில் 40 ஆண்டுகளாக இருக்கும் எனக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் தவறு செய்திருந்தால், எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க என்னத் தயக்கம்? யார் தடுத்தது? ஒவ்வொரு நாளும் மாநகராட்சி கொடி கட்டிய காரை சைதாப்பேட்டையில் விட்டுவிட்டு, வேறொரு காரில் ராஜகீழ்ப்பாக்கத்துக்கு சென்று வருவதை அங்குள்ள போக்குவரத்துக் காவலர்கள் நன்றாகவே அறிவார்கள். நீ அங்கு வசிப்பதை மறுத்தால் சிறுதாவூர், கொடநாடு பங்களாக்களுக்கு இணையாக இருக்கும் அந்த 10 ஏக்கர் பண்ணை வீடு யாருக்குச் சொந்தமானது?’ என்று கேட்டார். அந்தப் படங்களையும் வெளியிட்டார். தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில், சி.ஐ.டி நகரில்தான் சைதை துரைசாமி பல ஆண்டுகளாக குடியிருந்தார். கடந்த ஓராண்டாக தாம்பரம் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் பண்ணை வீடு கட்டி குடியேறிவிட்டார். காலை முதல் மாலை வரை சி.ஐ.டி நகரில் இருந்துவிட்டு, இரவு ராஜகீழ்ப்பாக்கத்துக்குச் சென்றுவிடுவார். மா.சு. சொன்ன இந்தத் தகவல் ஜெயலலிதாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாம். அதன் பிறகுதான் சைதை பற்றிய முழுத் தகவல்களையும் எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். தகவல்கள் கொட்டியதாம்.''

''சொல்லும்!'

மிஸ்டர் கழுகு: உருவாகிறது ‘ஊழல் எதிர்ப்பு அணி’!

''அ.தி.மு.கவுக்கு சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் நான்கு பேர் உள்ளனர். அவர்கள் ஓரளவு சைதை​யுடன் அனுசரித்துப் போனார்கள். ஆனால், அதற்குக் கீழ் இருந்த பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்களில் 90 சதவிகிதம் பேர் எதிர்கோஷ்டியினர்தான். அதேபோல், மாநகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர்களில் 70 சதவிகிதம் பேர் இவருக்கு பயங்கர எதிரிகள். அவர்கள் சொல்வது எதையும் மேயர் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டுத்தான் அதிருப்திக்குக் காரணம். ஒருமுறை கவுன்சிலர்கள் அனைவரையும் ஜெயலலிதா மிரட்டியது, இவர் கொடுத்த ரிப்போர்ட்டை வைத்துத்தான். மேலும், சசிகலா வட்டாரத்துக்கும் இவருக்கும் எப்போதும் ஆகாது. இப்படிப்பட்ட நிலைமையில் சைதையைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார்கள். மொத்தமும் நெகடிவ்வாக கொட்டியது. ராஜகீழ்ப்பாக்கம் பங்களாவை பல கோடி ரூபாய்க்கு மதிப்பு போடுகிறதாம் உளவுத் துறை. நிர்வாக ரீதியாகவும் பல காரணங்களை அடுக்கிவிட்டார்களாம்!''

''அது என்ன?''

''சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் டாக்டர் பிங்ளே விஜய் மாருதி கடந்த 16ம் தேதி பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னணியில் சில ரகசியங்கள் உள்ளதாம். 'சாலை மற்றும் கட்டுமானப் பணிகளைத் தரமாக செய்யவில்லை என்று 9 ஒப்பந்தக்காரர்களைக் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளார் இணை கமிஷனர். அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ரூ.70 கோடியை நிறுத்தி வைத்துள்ளார். மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் சாலைகளை சேதப்படுத்தி கேபிள் பதித்த கம்பெனிகள் சிலவற்றுக்கு அபராதம் விதித்து ரூ.7 கோடியை மாநகராட்சிக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். இதில், ஒரு கம்பெனி, மேயரைப் பார்த்து குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டது. இதைத் தொடர்ந்து இணை கமிஷனரை மாற்றிவிட்டார்கள். அது மேலிடம் வரை போனது. அவர்கள் உண்மை நிலவரம் அறிந்து கோபம் ஆகிவிட்டார்கள்’ என்று சொல்கிறார்கள். இந்த மாதிரி பல்வேறு விஷயங்களைப் பட்டியல் போட்டுக் கொடுத்ததில்தான் கோபம் ஆகிவிட்டது மேலிடம். போகப் போக பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று சொல்கிறார்கள்.''

''பா.ம.க பொதுக்குழுவில் என்ன நடந்தது?''

மிஸ்டர் கழுகு: உருவாகிறது ‘ஊழல் எதிர்ப்பு அணி’!

''இப்போது அதிகப்படியான அரசியல் பரபரப்பில் இருப்பது பா.ம.கதான். பேத்தி திருமணத்தை வைத்து தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க கூட்டணி உறுதியாகிவிட்டது என்பது மாதிரியான பரபரப்பு கிளப்பிய ராமதாஸ், அடுத்த சில நாட்களிலேயே 'பா.ம.க. தலைமையில்தான் கூட்டணி’ என்பதை அறிவித்தார். அதன் பிறகும் சும்மா இல்லை. கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூடும் என்று அறிவித்தார். கடந்த 21, 22 தேதிகளில் பா.ம.க பரபரப்பாக இருந்தது. 'தமிழகத்தைச் சீரழித்த இரண்டு திராவிட கட்சிகளின் கையில் இருந்து மக்களைக் காப்பாற்றும் எண்ணம் உள்ள அனைத்துக் கட்சிகளும் பா.ம.க தலைமையில் கூட்டணிக்கு வரவேண்டும்’ என்று அழைப்பு விடுத்ததன் மூலம் அனைத்துக் கட்சிகளுக்கும் பெப்பே காட்டிவிட்டார் ராமதாஸ்!''

''கூட்டத்தில் என்ன பேசினார்களாம்?''

''வன்னியர் சங்கத் தலைவர் குரு பேசும்போது, ''திராவிடக் கட்சிகளை பிடிபிடி'' என்று பிடித்துள்ளார். 'திராவிடக் கட்சி்கள் என்றாலே ஊழல்தான். எம்.ஜி.ஆர் சொன்னது என்ன? ஊழலற்ற ஆட்சி. ஆனால், இன்று முதலமைச்சராக இருக்கும்போதே தண்டனை வாங்கியது 'அம்மா’தானே? அண்ணா சொன்னது போலவா கருணாநிதி நடந்துகொண்டார்? இவர்கள் எல்லாம் அரசியலுக்கே லாயக்கற்றவர்கள். வைகோ யார்? அந்த ஊழல் கட்சியில் இருந்தவர்தான். விஜயகாந்தை எதிர்க் கட்சி தலைவர் என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் தமிழகத்தில் எதிர்க் கட்சித் தலைவர் நம்முடைய அய்யாதான்’ என்று சகட்டுமேனிக்கு அனைவரையும் தாக்கித் தீர்த்தார். 'பா.ம.க. சாதிக் கட்சியோ, தலித் மக்களுக்கு எதிரான கட்சியோ இல்லை. அனைத்து சமுதாயக் கட்சி. தலித் மக்களுக்காக அதிகப் போராட்டங்களை நடத்தியுள்ளது’ என்ற பீடிகையுடன் அன்புமணி ஆரம்பித்தது ஆச்சர்யமாக இருந்தது. புகையிலை, மது என்று நல்ல விஷயங்களைப் பற்றி பேசிய அன்புமணி தனது பேச்சை முடிக்கப் போகும்போது, 'சில நேரங்களில் நம் தலைமை சொல்வதைக் கேட்காமல் போனதால் இன்னலுக்கு ஆளாகிவிட்டோம். இனி அவரின் வழிகாட்டுதலோடு செயல்படுவோம்’ என்று முடித்தார்!''

''என்ன சொல்ல வருகிறார்?''

''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி கூட்டணியில் விஜயகாந்தும் இருக்கும்போது பா.ம.க சேர்ந்தது ராமதாஸுக்கு உடன்பாடு இல்லையாம். அதனைத்தான் சொல்கிறார் அன்புமணி. இனி சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் பேச்சைக் கேட்போம் என்று சொல்லியிருக்கிறார் அன்புமணி.''

''ராமதாஸுக்கு சந்தோஷம்தானா?''

''இறுதியாக ராமதாஸ் பேசும்போது,  '2016ம் ஆண்டுடன் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் முடிகின்றன. திராவிட இயக்கத்தின் கடைசி பாகத்தை தி.மு.கவும், அ.தி.மு.கவும் எழுதிக்கொண்டிருக்கின்றன. மக்கள் நலன், தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்துப் புதிய அணியை நாம் உருவாக்க வேண்டும். அ.தி.மு.கவுக்கு நாங்கள் ஊ.தி.மு.க என்று பெயர்சூட்டுகிறோம். அதாவது, ஊழல் தி.மு.கவை குறை சொல்வதால் தி.மு.கவுடன் கூட்டணியா? என்று கேட்பார்கள். இந்தியாவிலேயே ஊழலுக்கு என்று தனி விசாரணைக் கமிஷன் அமைத்தது தி.மு.கவுக்கு மட்டும்தான். அதனால், இந்த இரண்டு ஊழல் கட்சிகளையும் நாம் தள்ளிவைக்க வேண்டும். அதற்கான நேரம் நெருங்கி வந்திருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். அதேபோல இப்போதும் அவர் குரல் கொடுக்கவேண்டும்’ என்று ராமதாஸ் சொல்லிக் கொண்டார். தங்கள் தலைமையில் கூட்டணி என்று சொன்ன ராமதாஸ் பல கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்தார்.''

''யாருக்கெல்லாம் அழைப்பு விடுத்துள்ளார் ராமதாஸ்?''

''ம.தி.மு.க., காந்திய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐ.ஜே.கே, தமிழர் தேசிய முன்னணி, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 8 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இவர்கள் யாரும் இதுபற்றி பதிலே சொல்லவில்லை!''

''ஓஹோ!''

''அரசியல் வட்டாரத்தில் கமுக்கமாக நடக்கத் தொடங்கி இருக்கும் ஒரு பேச்சுவார்த்தை பற்றிய முன்னோட்டங்களை இப்போதே சொல்லிவிடுகிறேன். இது ஆரம்பக்கட்டம்தான்! தி.மு.க, அ.தி.மு.க இல்லாத அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சிலர் இறங்கி இருக்கிறார்கள். விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன் ஆகிய மூவரையும் அதில் இணைக்கும் திட்டம் இருக்கிறதாம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய நான்கையும் இதனுடன் இணைக்கலாம் என்ற திட்டமும் இருக்கிறதாம். 'ஊழல் எதிர்ப்பு அணி’ என்று இதற்கு முத்திரையும் வைக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள். ஜி.கே.வாசனும் விஜயகாந்தும் எப்போதும் நண்பர்கள். விஜயகாந்தும் வைகோவும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமாக பின்னிப் பிணைந்து இருந்தார்கள். இப்படி ஓர் அணி அமையும்போது புதிய கட்சிகளும் தயங்காமல் ஒன்று சேரும் என்கிறார்கள். இது தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத மட்டுமல்ல, பி.ஜே.பி, காங்கிரஸ் அல்லாத அணியாகவும் அமையுமாம்!'' என்ற கழுகார், ''ஒரு சீக்ரெட் சொல்கிறேன்! அது விரைவில் வெடிக்கும்!'' என்று பீடிகையுடன் அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.

''ராஜமுந்திரியைச் சேர்ந்த அந்தத் தம்பதிகள் இருவருமே டாக்டர்கள். மும்பையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே மகன். அவருக்கு ராஜமுந்திரியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைத்தார்கள். அந்த இளைஞனுக்கு நாய்கள் வளர்ப்பில் அதீத ஆசை. லட்சக்கணக்கில் விலை உள்ள நாய்களை வளர்த்து வருகிறார். நிறைய போட்டிகளுக்கும் அழைத்து வருவார். தன்னோடு மனைவியையும் அழைத்துச் செல்வார். இந்த இளம் ஜோடிக்கு இன்னொரு இளைஞருடன் நட்பு ஏற்பட்டது. அந்த இளைஞர் திருமணம் ஆனவர். கணக்கில்லாமல் பணம் வைத்திருக்கக் கூடியவர். நாய்களுக்காக நிறைய செலவும் செய்யக் கூடியவர். ராஜமுந்திரி பெண்ணுக்கும் இந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது. தனது கணவரை பிரிந்து, இந்த இளைஞரோடு செட்டில் ஆகிவிடும் அளவுக்கு அந்தப் பழக்கம் கெட்டியானது.

பாவம் அந்த ராஜமுந்திரிக்காரர். விவரம் புரியாமல் அந்த இளைஞரின் அப்பா​விடம் பஞ்சாயத்துக்குப் போயுள்ளார். 'நீ 24 மணி நேரமும் நாயோடு இருந்தால், உன் பொண்டாட்டி உன்னோடு எப்படி இருப்பாள்? அதனால்தான் அவள் வந்துவிட்டாள், நீ அவளை மறந்துவிடு’ என்று அப்பாக்காரர் தீர்ப்பு சொல்லியிருக்கிறார். இதனை ராஜமுந்திரிக்காரர் ஏற்கவில்லை. ஆனால், அப்பாவும் மகனும் அந்தப் பெண்ணைவிடத் தயாராக இல்லை. இந்த விவகாரம் போலீஸ் மேலிடம் வரைக்கும் போயுள்ளது. அந்தப் பெண்ணை ராஜமுந்திரிக்கு அனுப்பி வைக்கப் போகிறார்களா? அல்லது விவகாரம் வெளிப்படையாகவே வெளிச்சத்துக்கு வருமா என்பது போகப் போகத் தெரியும்!'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

படம்: எம்.முத்துக்குமார்        

 வணக்கம் வைத்தாரா செல்லூர் ராஜு?

மிஸ்டர் கழுகு: உருவாகிறது ‘ஊழல் எதிர்ப்பு அணி’!

நான்கு நாட்களாக மதுரையில் முகாமிட்டு இருந்தார் மு.க.ஸ்டாலின். கடந்த 22ம் தேதி அதிகாலை  மாநகராட்சிப் பூங்காவில் கட்சி நிர்வாகிகளோடு வாக்கிங் சென்றார். மழை தூறிக்கொண்டு இருந்தது. அப்போது ஸ்டாலினுக்கு  எதிர் புறமாக அமைச்சர் செல்லூர் ராஜுவும் அவர் மனைவியும் வாக்கிங் வந்திருக்கிறார்கள். ஸ்டாலினை திடீரென்று பார்த்ததும் செல்லூர் ராஜு மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்துள்ளார். பதிலுக்கு ஸ்டாலின் வணக்கம் வைத்துள்ளார். இருவருமே நிற்கவில்லை. நகர்ந்துவிட்டார்கள். ஆனால், ஸ்டாலினும் செல்லூர் ராஜுவும் சந்தித்துப் பேசியதாகத் தகவல் பரவியது. இதைக் கேட்டதும் செல்லூர் ராஜு பதறிப்போனார்.  

''அப்படி எதுவும் நடக்கவில்லை, ஸ்டாலின் வந்திருப்பது தெரிந்ததும் நான் திரும்பி நடையை கட்டிவிட்டேன்'' என்று பார்ப்பவரிடம் எல்லாம் தன்னிலை விளக்கம் கொடுத்து வருகிறார். தனக்குத் தெரிந்த பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் போன் செய்து, 'அந்த மாதிரி நடக்கலைன்னு போடுங்க’ என்று சொல்லி அவரே நியூஸைப் பரப்பிவிட்டாராம். 'அமைச்சர் சும்மா இருந்திருந்தாலே நாளிதழ்களில் நியூஸ் வந்திருக்காது, உண்மையை எழுதுங்கன்னு சொல்லிச் சொல்லி இவரே எழுத வெச்சுட்டார்’ என்கிறார்கள்.

''கரைத்துவிடுவார் கார்த்தி!''

மிஸ்டர் கழுகு: உருவாகிறது ‘ஊழல் எதிர்ப்பு அணி’!

'தமிழகத்தில் காமராஜர் பெயரைச் சொல்லி தேர்தலில் ஜெயிக்க முடியாது’ என்று சத்தியமூர்த்தி பவனில் நடந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கார்த்தி ப.சிதம்பரம் பேசியதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதைத் தொடர்ந்து, ''நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை’ என்று கார்த்தி மறுப்புத் தெரிவித்துள்ளார். கார்த்தி இப்படிப் பேசிய மேடையிலேயே டாக்டர் செல்லக்குமார் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். டெல்லிக்கும் இது சம்பந்தமான புகார், கார்த்தி மீது போயுள்ளது.

''காங்கிரஸ்காரர்கள் தனது தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்வார்கள். காமராஜர், மூப்பனார் படத்தைக் கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையில் போடவில்லை என்பதற்காகத்தான் ஜி.கே.வாசன் கட்சியையே உடைத்தார். இப்போது கார்த்தி போன்றவர்களது பேச்சால் இன்னும் ஆட்கள் கரைந்துபோவார்கள்'' என்று சொல்கிறார்கள் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள்.