Published:Updated:

அரசியலில் கிரிமினல்களை ஒழித்துக்கட்ட முடியாதா?

ஸ்பெஷல் பிராஞ்ச்

அரசியலில் கிரிமினல்களை ஒழித்துக்கட்ட முடியாதா?

ஸ்பெஷல் பிராஞ்ச்

Published:Updated:
அரசியலில் கிரிமினல்களை ஒழித்துக்கட்ட முடியாதா?

கிரிமினல்கள், ஊழல்வாதிகள், சமூக விரோதிகள் என கேடு​கெட்ட மனிதர்களிடம் சிக்கி சின்னா​பின்னமாகிக் கிடக்கிறது இந்திய நாட்டின் அரசியல். சட்டமன்றங்களையும் நாடாளுமன்றத்​தையும் உள்ளாட்சி அமைப்புகளையும் தங்களின் ஆக்டோபஸ் கரங்களால் ஆக்கிரமித்து மக்களைச் சுரண்டியும் தேசத்தின் வளங்களை கபளீகரம் செய்தும் அழிச்சாட்டியம் புரிகின்றனர், நயவஞ்சக அரசியல்வாதிகள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் மீதான வழக்கு விவரங்களை வேட்புமனுவில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்கிற விதி (2004ல்) அமலுக்கு வந்த பிறகுதான், கிரிமினல் அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்ற யதார்த்த நிலை பளிச்சிட்டது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் குற்றப் பின்னணிகொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 462. இது, 2009ல் 1,158 வேட்பாளர்களாகவும் 2014ல் 1,404 வேட்பாளர்களாகவும் எகிறியது.

அரசியலில் கிரிமினல்களை ஒழித்துக்கட்ட முடியாதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் மேல்முறையீடு செய்வதற்கான அவகாசம் முடியும் வரையில் அல்லது மேல்முறையீடு செய்தால் அதன் இறுதித் தீர்ப்பு வரும் வரையில், பதவியில் தொடர முடியும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4) கூறியது. அந்த ஓட்டை வழியாகத்தான், சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் ஆகியவற்றுக்குள் நுழைந்து குளிர்காய்ந்தனர் கிரிமினல் பின்னணிகொண்ட அரசியல்வாதிகள். எனவே, அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்கிற கோஷம் எழுந்தது.

'லோக் பிரஹாரி’ என்ற தன்னார்வ நிறுவனத்தின் செயலாளர் எஸ்.என்.சுக்லா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் லில்லி தாமஸ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில், ''அப்பீல் மனு முடியும் வரை காத்திருக்கக் கூடாது. கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற உடனேயே எம்.பி,     எம்.எல்.ஏ பதவிகள் ரத்தாகும்' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அது, அரசியல்வாதிகளின் தலையில் இடியாய் இறங்கியது. அந்த அதிரடி தீர்ப்பால்தான் லாலு, ரஷீத் மசூத், ஜெகதீஷ் சர்மா,   ஜெயலலிதா ஆகியோரின் 'மக்கள் பிரதிநிதி’ பட்டம் பறிபோயின. கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர்களால், '6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது’ என்பது தேர்தல் ஆணைய விதி. அதாவது, தண்டனைக் காலம் முடிந்த பிறகு, ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படியென்றால், இரண்டு பொதுத் தேர்தல்களில் அவர்களால் நிற்க முடியாது.

அரசியலில் கிரிமினல்களை ஒழித்துக்கட்ட முடியாதா?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டு அரசியல்வாதிகள் அலறினர். இந்தத் தீர்ப்பை மட்டுப்படுத்த காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு, அவசரச் சட்டத்தைக் கொண்டுவரப் பார்த்தது. பின்னர் அந்த முயற்சியைக் கைவிட்டது. 'மக்கள் பிரதிநிதி’களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் தரம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை நிலைநிறுத்த வேண்டும். கிரிமினல்களின் ஆதிக்கத்தை அரசியலில் இருந்து முற்றிலுமாகத் துடைத்தெறிய வேண்டுமானால், தேர்தல் சீர்திருத்தம் ஒன்றுதான் வழி. ஆனால், அதை அமலுக்குக் கொண்டுவரத்தான் முடியவில்லை.

தேர்தல் ஆணையத்தின் யோசனை!

இப்போது, ஒருவரை குற்றவாளி என்று உறுதிசெய்து நீதிமன்றம் தண்டனை அளித்தால் மட்டுமே, தேர்தலில் போட்டியிட அவருக்குத் தடை விதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணையில் இருக்கும்பட்சத்தில் ஒருவர் சிறையில் இருந்தால்கூட தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, ''கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட மிக மோசமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்'' என்று கூறுகிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி. ''கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், வழக்கு நிலுவையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை தேர்தல் கமிஷன் 1998ம் ஆண்டே மத்திய அரசுக்கு அனுப்பியது. ''ஒருவர், குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத வரை, அவரைக் குற்றவாளி என்று கருதக்கூடாது' என்கிறது இந்திய நீதிபரிபாலனம். ''அரசியல் காரணங்களுக்காகக்கூட ஒருவர் மீது பொய் வழக்கு போடுவதற்கு வழி உண்டு. ஆகவே, இது சரியாக இருக்காது' என்று சொல்லி, தேர்தல் ஆணையத்தின் யோசனையை ஏற்க மறுத்துவிட்டது, மத்திய அரசு. எம்.எல்.ஏ அல்லது எம்.பியை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றுக்கு மட்டுமே உண்டு. அந்த அதிகாரம், தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்கிற சீர்திருத்தத்தையும் மத்திய அரசு ஏற்கவில்லை.

''நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. எம்.பிக்கள் மீதான வழக்கு என்பதால் விசாரணை நத்தை வேகத்தில் நடக்கிறது. எம்.பிக்கள் மீது நாட்டின் பல நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் அனைத் தையும் விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜே.எம்.லிங்டோ. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அந்த வழக்குத் தொடரப்பட்டது. அப்போது இருந்த எம்.பிக்களில் 162 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தை அறிந்து உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அப்பீல் ஆயுதம்!

மக்கள் பிரதிநிதிகள் தங்கள் மீதான வழக்குகளை, தங்களின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இழுத்தடிக்கிறார்கள் என்று ஒரு பொதுநலன் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதில்,   ''எம்.பி,  எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை ஓராண்டில் முடிக்க வேண்டும்' என்று கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ''குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்ட ஒரு வருடத்துக்குள் கீழ் நீதிமன்றங்களில் தீர்ப்பளிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிபதி, இது குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் விளக்கம் அளிக்க வேண்டும். தலைமை நீதிபதிக்கு திருப்தி ஏற்பட்டால், அவர் கால அவகாசத்தை நீட்டிக்கலாம். அனைத்து நீதிமன்றங்களும் இதுபோன்ற வழக்குகளில் தினந்தோறும் விசாரணையை நடத்தி விரைவாக வழக்கினை முடிக்க வேண்டும்' என்கிற உத்தரவைப் பிறப்பித்தது.

கிரிமினல்கள், ஊழல்வாதிகள் உள்ளிட்ட மக்கள் விரோதிகளை அப்புறப்படுத்தி, அரசியலைத் தூய்மைப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டேதான் உள்ளன. ஆனால், அவை போதுமானதாக இல்லை. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.

அரசியலில் கிரிமினல்களை ஒழித்துக்கட்ட முடியாதா?

'அப்பீல்’ என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தி காலத்தை ஓட்டி வருகிறார்கள் அரசியல்வாதிகள். தீர்ப்பு வருவதற்குள் அவர்களின் பதவிக் காலமே முடிந்து விடுகிறது அல்லது சம்பந்தப்பட்டவர்களின் ஆயுள் காலமே முடிந்துவிடுகிறது.

தேர்தலுக்கு முன் மோடியின் சூளுரை!

''நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கிரிமினல் பின்னணிகொண்ட எம்.பிக்களை பொறுத்துக்கொள்ள மாட்டோம். அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்தே விரட்டியடித்து அரசியலைத் தூய்மை ஆக்குவோம்.

மே 16க்குப் பிறகு அதுதான் எனது வேலையாக இருக்கும். அரசியலில் கிரிமினல்கள் நுழைவதை என்னால் தடுக்க முடியும். இந்திய அரசியலை சுத்தப்படுத்துவேன் என உறுதி அளிக்கிறேன். பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் குற்றப் பின்னணி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் சிறையில் தள்ளப்படுவார்கள். நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து குற்றப் பின்னணிகொண்டவர்கள் ஓராண்டுக்குள் சிறையில் அடைக்கப்படுவார்கள். 5 ஆண்டுகளுக்குள், கிரிமினல்களிடம் இருந்து நாடு மீட்கப்படும். பஞ்சாயத்துகள் வரையிலான அனைத்து அதிகார மட்டத்திலும் குற்றப் பின்னணி உடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் சூளுரைத்தார் நரேந்திர மோடி.

அரியணையில் அமர்ந்தபின்...

தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, நாற்காலியில் அமர்ந்த பிறகு வேறொரு பேச்சு என்பது நம் அரசியல்வாதிகளுக்கு புதிதா என்ன?  இதில், மோடி ஒன்றும் விதிவிலக்கல்ல. பிரதமரான பிறகு மோடியின் பேச்சில் சுருதி குறைந்தது. ''குற்றப் பின்னணிகொண்ட எம்.பிக்களின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து ஓராண்டுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோருவோம்' என்று நாடாளுமன்றத்தில் பேசினார் மோடி. அத்துடன் நிற்கவில்லை. ''வெளியே இருக்கும் மக்களுக்கு நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் கிரிமினல்கள்போலத் தோன்றுகிறது. அந்த எண்ணத்தை உடனடியாக மாற்ற வேண்டும்' என்றார்.

மே 16 அன்று மோடி பதவியேற்றபோது, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் 30 சதவிகிதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 'தூய்மை இந்தியா’ திட்டத்தை முதலில் தனது அமைச்சரவையில் இருந்து தொடங்கி, அதன் பிறகுதான், துடைப்பத்தைத் தூக்கிக்கொண்டு அவர் தெருவுக்கு வந்திருக்க வேண்டும். 'அரசியலைத் தூய்மைப்படுத்துவேன்’ என்ற தனது பேச்சை மக்களிடம் மறக்கடிக்கச் செய்யும் உள்நோக்கமும் 'தூய்மை இந்தியா’ திட்டத்துக்குள் அடங்கி இருக்கிறது என்ற அரசியல் விமர்சகர்களின் கருத்து மறுப்பதற்கில்லை.

கிரிமினல்களிடம் இருந்து அரசியலை மீட்பதற்கான முயற்சிகள் தொடர வேண்டும்.

ஸ்பெஷல் பிராஞ்ச் டீம்: எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, ஆ.பழனியப்பன், பி.ஆண்டனிராஜ், பா.ஜெயவேல், செ.சல்மான், சி.ஆனந்தகுமார்,  எஸ்.மகேஷ், ஏ.ராம்,  எம்.புண்ணியமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism