ஸ்பெஷல் -1
Published:Updated:

கூட்டணி இறுக்க... முறுக்கை நொறுக்க...

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: சு.குமரேசன்

த்தியில் ஆளும் கட்சி அந்தஸ்து, தமிழகத் தேர்தல் களத்தில் மூன்றாவது அணி அமைத்தது, தே.மு.தி.க., தி.மு.க ஆகிய கட்சிகளைக் காட்டிலும் களத்தில் பரபரப்பாகச் சுழல்வது... செம ஆக்டிவாக இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான முஸ்தீபுகளில் தொடங்கிய அந்த உற்சாகத்தை, கட்சி இன்று வரை தக்கவைத்திருப்பதில் தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசனுக்கும் முக்கியப் பங்கு உண்டு. பேட்டிக்காகச் சென்றால், ''சீரியஸ் பேட்டியா... காமெடி பேட்டியா?'' எனக் கலகல சிரிப்புடன் தயார் ஆகிறார்.

''நான் பிறந்து வளர்ந்தது தொண்டாமுத்தூர் பக்கம் உளியம்பாளையம் கிராமம். படிப்பில் எப்பவும் நான்தான் ஃபர்ஸ்ட். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எதையும் விட மாட்டேன். ஒரு வருடத்தில் 10 போட்டிகளில் முதல் பரிசு ஜெயிச்சேன். அப்ப ஆரம்பிச்ச மேடை நிகழ்ச்சி ஆர்வம்... 1988-ம் ஆண்டு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் சேர்த்தது. அப்போ, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவுக்கு மாநிலச் செயலாளரா இருந்த ஸ்ரீனிவாசன்தான், இப்போ என் கணவர். காதல் கல்யாணம். சென்னை சட்டக் கல்லூரியில் படிச்சுட்டே, இயக்க வேலைகளில் தீவிரமா இருந்தேன். சட்டப் படிப்பு முடிஞ்சதும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் எட்டு வருடங்கள் ஜூனியரா இருந்தேன். என் அரசியல் ஆர்வத்தைப் பார்த்த இல.கணேசன் சார்தான் தமிழ்நாட்டில் கட்சி சார்பா மீடியாவைக் கையாளும் பொறுப்பை எனக்கு முதன்முதலில் கொடுத்தார்.

என் கணவர் ஸ்ரீனிவாசன் வழக்கறிஞர். சமீபத்தில்தான் சென்னை உயர் நீதிமன்றத்துக்கான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலா அவரை நியமிச்சாங்க. அவர்தான் தீவிர அரசியலுக்கு வருவார்னு நினைச்சாங்க. ஆனா, தடால்னு நான் வந்துட்டேன். எங்களுக்கு ரெண்டு பசங்க. பெரியவன் ஆதர்ஷ், ப்ளஸ் ஒன் படிக்கிறான். சின்னவன் கைலாஷ், ஏழாவது படிக்கிறான்.''

கூட்டணி இறுக்க... முறுக்கை நொறுக்க...

''தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்... ரெண்டு பேரிடமும் ஜூனியரா இருந்திருக்கீங்க. யார் பெஸ்ட்?''

(ஜெர்க் ஆகிறார்) ''என்னப்பா இப்படி மாட்டிவிடுறீங்க? (சிரிக்கிறார்) ரெண்டு பேருமே ஒரு வகையில் எனக்குக் குருதான். ஞானதேசிகன், வக்கீல் தொழில் கத்துக்கொடுத்த குரு. பொன்னார், அரசியல் சொல்லித்தந்த குரு. அவங்க ரெண்டு பேரும் அவங்கவங்க கட்சிக்கு தமிழகத் தலைவரா இருந்தப்போ சேர்த்துவெச்சு, ஒரு போட்டோ எடுத்துரணும்னு அவ்ளோ ஆசைப்பட்டேன். ப்ச்... நடக்கவே இல்லை. பொன்னார் சார் அரசியலில் எனக்குப் பல  வாய்ப்புகள் கொடுத்தார். எல்லாமே கஷ்டமான வேலைகள். ஆனா, அதுதான் என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்தியது. வேலையிலும் சாப்பாட்டிலும் ரொம்பக் கண்டிப்பானவர். அவரோடு சாப்பிட உட்காந்தா, எதையும் மிச்சம்வைக்கக் கூடாது. வெச்சுட்டா தொலைஞ்சோம்... அதை அப்படியே பார்சல் பண்ணி, மறுநாள் காலையில சாப்பிடச் சொல்லிடுவார். அதனாலேயே அவரோடு சாப்பிடுறதுன்னா எனக்கு பயம்!''  

''கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயம் மூன்றாவது அணி அமைக்கும்போது, எக்குத்தப்பான குழப்பங்கள், ஏகப்பட்ட களேபரங்கள்... அப்போ என்னதான் நடந்துச்சு?''

''அச்சச்சோ... அதெல்லாம் ரகசியம்! வெளியே சொல்லலாமானு தெரியலையே. சரி... பரவாயில்லை. ரிஸ்க் எடுக்கிறேன்! எங்க கூட்டணிக்கு பா.ம.க வருமா... தே.மு.தி.க வருமாங்கிற சஸ்பென்ஸ்லயே மூணு மாசங்கள் ஓடிருச்சு. தேர்தல் நெருங்கிடுச்சு. அப்ப கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிகூட நான் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திட்டு இருந்தேன். அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், 'நீங்க கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கிறதுக்குள்ள தேர்தலே முடிஞ்சிரும்’னு கிண்டலா சொல்வார். அப்போ தே.மு.தி.க எங்க கூட்டணிக்கு வந்துடுச்சுனு பேட்டி குடுத்துட்டோம். ம.தி.மு.க எங்ககூட வந்து டிபன் சாப்பிட்டுப் போயிட்டாங்க. நாங்க பா.ம.க-கூட போய் காபி, ஸ்வீட் சாப்பிட்டாச்சு. பொண்ணு - மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பேசி முடிக்கிற மாதிரி, ஒவ்வொரு சம்பிரதாயமா நடக்குது. இப்படிப் பேச்சுவார்த்தை நடத்திட்டே இருக்கும்போது, திடீர்னு தே.மு.தி.க வேட்பாளர்களை அறிவிச்சுட்டாங்க. சேலம் தொகுதிக்கு சுதீஷ் வேட்பாளர். உடனே பா.ம.க முறுக்கிக்கிட்டாங்க. ஆனா, எங்களுக்கே அந்தத் தகவல்கள் எல்லாம் நியூஸ் பார்த்துதான் தெரியும். அதிர்ச்சியில் இருந்தோம். 'பா.ம.க., கொங்கு நாட்டு மக்கள் கட்சியோடு தொகுதிப் பேச்சுவார்த்தை இறுதி ஆகுறதுக்குள்ள தே.மு.தி.க எப்படி வேட்பாளர்களை அறிவிச்சாங்க?’னு மேலிடத்தில் இருந்து பிரஷர்.

கூட்டணி இறுக்க... முறுக்கை நொறுக்க...

அந்தச் சமயம் பொன்னார் சார் அறையில்தான் உக்காந்திருப்போம். என்ன பண்றதுனு தெரியாது. டென்ஷனா இருக்கும். அங்கே முறுக்கு, சீடை பாக்கெட் இருக்கும். எல்லாரும் முறுக்கை எடுத்துச் சாப்பிட ஆரம்பிச்சிருவோம். இப்படி அடிக்கடி டென்ஷனாகி பல முறுக்கு பாக்கெட் காலி ஆகிருக்கு. தேர்தல் நெருங்கிருச்சு. 'தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகள் இல்லாத மூன்றாவது அணி அமைச்சுட்டோம்’னு சொல்லி ராஜ்நாத் சிங்கை வரச் சொல்லிட்டோம். அவர் வர்றதுக்கு முந்தின நாள் இரவு 1 மணிக்கு,  பா.ஜ.க-வின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவ் என்னைக் கூப்பிட்டார். 'எல்லாம் உறுதி ஆகிடுச்சா... ஹால் ரெடியா? நீங்கதான் இன்சார்ஜ். நிகழ்ச்சியை பக்காவா நடத்திருங்க’னு சொன்னார். ஆனா, அப்ப வரைக்கும் மேடையில் வைக்கிற ஃப்ளெக்ஸ்ல யார் யார் படம் போடுறதுனு முடிவாகலை. அதைப் பத்தி பொன்னார் சார்கிட்டே கேட்டா, வெச்சார்பாருங்க ஒரு ட்விஸ்ட்... 'எனக்கே ஒண்ணும் புரியலைம்மா. நீயே பார்த்து பேலன்ஸா ஒரு பேனர் ரெடி பண்ணிடு’னு சொல்லிட்டார். எனக்கு 'என்ன பண்றது?’னே தெரியலை.

நாளைக்குக் கூட்டத்துக்கு பா.ம.க வருவாங்களானு தெரியலை. 'கொங்கு மக்கள் தேசியக் கட்சி நம்ம கூட்டணியில் இருக்கானு யாருக்கும் தெரியலை. விஜயகாந்த், வைகோ, பாரிவேந்தர்... இவங்கதான் கன்ஃபர்ம். அதனால எல்லா கட்சிகளையும் சேர்த்து ஒரு பேனர் அடிச்சோம். அப்புறம் பா.ம.க-வை வெச்சுட்டு கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியை எடுத்துட்டு ஒரு பேனர். இன்னொண்ணுல கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி வெச்சுட்டு பா.ம.க-வைத் தூக்கிட்டு ஒரு பேனர். இப்படி விதவிதமான கூட்டணிகள் காம்பினேஷன்ல அஞ்சு பேனர்கள் அடிச்சோம். இதெல்லாம் நடந்தது நடுராத்திரி. விடியிறதுக்காகக் காத்திருந்தோம்.

விடிஞ்சிருச்சு. காலையில 'யார் யாருக்கு எத்தனை தொகுதி?’னு அறிவிக்கணும். ஆனா, அப்போ வரை கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி முடிவு சொல்லலை. நான் வெறுத்துப்போய், 'கொங்கு நாடு இல்லாத பேனரை மேடையில ஒட்டுங்கப்பா’னு சொல்லிட்டேன். அந்தத் தகவல் பத்திரிகைக்காரங்க மூலமா பரவிருச்சு. உடனே எனக்கு போன் வந்தது. 'ஏங்க கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி உங்க கூட்டணியில வேண்டாம்னு முடிவு பண்ணிட்டீங்களாமே! உங்க பேனர்ல கட்சி பேர் இல்லையே?’னு விசாரிச்சாங்க. நான் உடனே ஈஸ்வரன்கிட்ட பேசினேன். 'உறுதியாக மோடி பிரதமர் ஆகிடுவார். இந்தக் கூட்டணியை விட்றாதீங்க. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். மீட்டிங் வாங்க’னு சொன்னேன். 'சரி’னு அப்போதான் சம்மதம் தெரிவிச்சார். மீட்டிங்குக்குக் கொஞ்ச நேரம் முன்னாடி பா.ம.க-வும் 'வர்றோம்’னு சொல்லிட்டாங்க. அப்புறம்தான் எங்களுக்கு உயிரே வந்துச்சு. எல்லா கட்சி சின்னங்களும் இருக்கிற பேனர் ஒட்டினோம். அப்புறம் ஸ்டேஜ்ல இருக்கிற சேர்களில் தலைவர்கள் பேர் ஒட்டணும். ஆனா, தொண்டர்களுக்கு நபர்களின் முக்கியத்துவம் தெரியாம ராமதாஸ், வைகோ பேர்களை கடைசியில ஒட்டிட்டாங்க. விஜயகாந்த் பேரை நடுவுல ஒட்டினாங்க. உடனே அதை பத்திரிகைக்காரங்க வேக வேகமா போட்டோ பிடிச்சுட்டாங்க. அதைப் பார்த்து யாராவது கோவிச்சுக்கப் போறாங்கனு எல்லா சேர்களையும் திருப்பிவெச்சுடோம். இப்படி தொகுதிப் பிரச்னை, பேனர் பஞ்சாயத்து, சேர் தகராறுனு ஒவ்வொரு நிமிஷமும் கலட்டாவா இருந்துச்சு!''

''மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஒரு நல்ல நட்பு உண்டு. ஆனா, திடீர்னு தமிழகத் தேர்தல் பிரசாரத்தில் மோடி அ.தி.மு.க-வை விமர்சிச்சாரே?''

'' பா.ஜ.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் நல்ல உறவு இருக்குனு ரெண்டு கட்சித் தொண்டர்களுக்குமே தெரியும். ஆனா, தமிழ்நாட்டில் ஸீட் ஜெயிக்கணும்னா, அ.தி.மு.க-வை விமர்சிக்கணும். அப்பத்தான் பா.ஜ.க பக்கம் மக்கள் பார்வை திரும்பும்கிறதுல தெளிவா இருந்தோம். ஆனா, 'நேரடியாக ஜெயலலிதாவை விமர்சிக்கச் சொன்னா, மோடி எப்படி எடுத்துக்குவாரோ?’னு எங்களுக்குத் தயக்கம். ஆனா, ஜெயலலிதாவை விமர்சனம் செய்யாமல் அரசியல் செய்ய முடியாத சூழல். ஒரு வழியாக மோடிகிட்ட விஷயத்தைச் சொல்லிட்டோம். 'ரெண்டு திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டைச் சீரழிச்சிடுச்சு. குஜராத் போன்ற முன்னேற்றத்தை நாடு முழுக்க கொண்டுவர பா.ஜ.க-வுக்கு ஆதரவு கொடுங்க’னு பிரசாரம் பண்ணுங்க’னு அவுட்லைன் கொடுத்தோம். அவரும் புரிஞ்சுக்கிட்டார். அப்புறம்தான் 'மோடி... லேடி’னு தமிழக அரசியல் களம் சூடு பிடிச்சது!''

கூட்டணி இறுக்க... முறுக்கை நொறுக்க...

''மோடியுடன் உங்களுக்கு எந்த அளவுக்குப் பழக்கம்?''

''மோடி குஜராத் முதலமைச்சரா இருந்தப்ப, 'பிரதமர் வேட்பாளராக அவரை அறிவிக்கலாம்’னு பேச்சு இருந்த சமயம், நான் அவருக்கு அறிமுகம் ஆனேன். அப்போ நான் கட்சியில் சாதாரண நிர்வாகி. ஆனா என்கிட்ட அவர் தமிழ்நாட்டு அரசியல் சூழல் பத்தி விசாரிப்பார். 'தமிழ்நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் மொழிப் பிரச்னை இருக்கு. மொழி மீது அந்த மாநில மக்களுக்கு இருக்கிற பற்றை என்னால் புரிஞ்சுக்க முடியுது’னு சொன்னார். 'ட்விட்டரில் ஆக்டிவா இருக்கீங்க. இலங்கைப் பிரச்னை, மீனவர் பிரச்னை பத்தி எல்லாம் அழுத்தமா கருத்து சொல்லுங்க’னு சொன்னேன். 'அதைப் பத்தி முழு விவரமும் தெரிஞ்சுக்கிட்டு எழுதுறேன்’னு சொன்னார். 'இனிமே தமிழ்நாட்டுக்கு வர்றப்போ வேஷ்டி - சட்டை போட்டுக்கங்க. அப்போதான் மக்கள் உங்களை அவங்க மனசுக்கு நெருக்கமா உணர்வாங்க’னு சொன்னேன். 'வெரி குட் ஐடியா. கண்டிப்பா செய்றேன்’னு சொன்னார்.

அப்புறம் வண்டலூர் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கிறார்னு தெரிஞ்சதும், அவரோட பெர்சனல் மெயிலுக்கு, 'தமிழ்நாட்டில் பொங்கல் வரப்போகுது. அதனால மறக்காம வேஷ்டி-சட்டையில வாங்க’னு சொல்லி மெயில் அனுப்பினேன். ஆனா, எங்க கட்சிக்காரங்களுக்கே அவர் அப்படி வருவார்னு நம்பிக்கை இல்லை. சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினப்போ வழக்கமான காஸ்ட்யூமில் இருந்தார். எனக்கு சின்ன ஏமாற்றம். தனியறைக்குப் போயிட்டார். நாங்கள் வெளியே காத்திருந்தோம். 15 நிமிஷம் கழிச்சு வெளியே வந்தார். ஆச்சர்யம்! வேஷ்டி-சட்டையில பளிச்னு வந்து நின்னு 'வணக்கம்’ சொன்னார். என்னைப் பார்த்துச் சிரிச்சுட்டே போனார். எனக்கு அது இன்ப அதிர்ச்சி!''  

''உண்மை சொல்லுங்க... தமிழ்நாட்டில் இன்னமும் உங்க கூட்டணி தொடருதா?''

''முதல்முறையா தமிழகத்தில் ஒரு தேசியக் கட்சி வலுவான கூட்டணி அமைச்சதே பெரிய சாதனைதான். தேர்தல் களத்தில் வெற்றி கிடைக்காமப் போயிருக்கலாம்.  ஆனா, வாக்கு சதவிகிதம் அதிகமாகியிருக்கே. குறிப்பா,  தி.மு.க-வுக்கு ஒரு எம்.பி ஸீட்கூட கிடைக்கலையே! அதுக்கு இந்தக் கூட்டணிதான் காரணம். சந்தேகமே வேண்டாம்... எங்க கூட்டணி இன்னும் தமிழகத்தில் வலுவாத்தான் இருக்கு!''  

''2016-ம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் நீங்க மயிலாப்பூர் தொகுதியைக் குறிவெச்சிருக்கீங்கனு சொல்றாங்களே?''

''இப்பவே அந்தத் தொகுதி மக்களுக்கு ஏதாவது பிரச்னைனா, என் வீட்டுக்குத்தான் வர்றாங்க. அதனால இப்பவே அந்த ஏரியாவுக்கு நான் அன்-அஃபிஷியலா எம்.எல்.ஏ மாதிரிதான் இருக்கேன்!''