Published:Updated:

டிமானிடைசேஷன் முதல் நீட் வரை... இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறீர்கள் மோடி?! #RIPAnitha

டிமானிடைசேஷன் முதல் நீட் வரை... இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறீர்கள் மோடி?! #RIPAnitha
டிமானிடைசேஷன் முதல் நீட் வரை... இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறீர்கள் மோடி?! #RIPAnitha

னிதா தற்கொலை செய்துகொண்ட செய்திதான் இன்று செய்தித்தாள்களின் தலையங்கம்... ஆனால், அனிதா கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.. தமிழகத்தின் கல்வி அமைப்பும், அரசும், நீதிமன்றமும் அவளைக் கொலை செய்துவிட்டது. அனிதாவை மட்டும் இந்த நாடு கொலை செய்யவில்லை. நமக்கு தெரிந்து கடந்த மூன்று வருடங்களில் சுமார் 31,000 பேர். தெரியாமல் எத்தனை பேரோ... ஒரு அரசு மூன்று வருடங்களில் இத்தனை பேர் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாக இருந்துள்ளது என்றால், அது எவ்வளவு வேதனையளிக்கும் தகவல்...?

அனிதா... என்னும் பெயர் தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ‘டாக்டர் ஆக வேண்டும்' என்ற தன்னுடைய 12 ஆண்டுகால கனவுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ஓட்டு வீடு, மழை பெய்தால் ஒழுகும் கூரை, கழிப்பறை வசதிகூட இல்லாத ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, வளர்ந்த ஒரு பெண் பள்ளிப் படிப்பை முடித்து, பல ஆண்டுகளாய் எண்ணிக் கொண்டிருந்த மருத்துவப் படிப்பை நோக்கிப் பயணிக்கும்போது, 'நீட்' என்னும் எமன் அவரின் குறுக்கே நின்று உயிரைக் குடித்துள்ளது. இந்த ஆண்டு எப்படியாவது 'நீட்' தேர்வுக்கு விலக்கு வரும் என்ற நம்பிக்கையில் கடைசி நிமிடம்வரை போராடிக் கொண்டிருந்தார். நீட்-ஐ எதிர்த்து நின்ற மாணவிகளின் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம்வரை சென்றார். அவரின் கனவு மட்டுமல்ல; அந்தக் கிராம மக்கள் அனைவரின் மொத்தக் கனவும் இப்போது கலைந்துவிட்டது.

12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1,176 மதிப்பெண், கட்-ஆப் மதிப்பெண் 196.5பெற்றிருந்தார். இப்படி அவர் படித்த மாநில பாடத் திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றும், 'நீட்' தேர்வில் அவர் பெற்றது 86 மதிப்பெண்தான். இதனால், அவருக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை. அவருடன் சேர்ந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அனைவரும் சேர்ந்து சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். பின்னர், தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களுடைய கோரிக்கையை முன்வைத்தனர். பல போராட்டங்களுக்குப் பிறகும், நீட்-க்கு மத்திய அரசு விலக்கு அளிக்கவில்லை. "ஒருவேளை மருத்துவம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்ய போகிறீர்கள்?" என்று அனிதாவிடம் கேட்டபோது, "முதலில் தயங்கியபடியே இருந்தவர், பி.எஸ்சி. போன்ற ஏதாவது ஒரு படிப்பை படிக்க வேண்டும்" என்று பதில் அளித்தார்.

அதன் பின்னர், அவருக்கு கால்நடை மருத்துவப் படிப்பு படிக்க அரசுக் கல்லூரியில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படி இருந்த சூழலில், அவர் நினைத்த மருத்துவப் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தன் உயிரையே மாய்த்துக்கொண்டார் அனிதா. மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடுகளை எதிர்த்து போராடவும் முடியாமல், தன்னுடைய மருத்துவக் கனவை நிறைவேற்றி கொள்ளவும் முடியாமல் அந்த 17 வயது மாணவி எடுத்த முடிவுதான் தற்கொலை. இதை தற்கொலை என்று சொல்வதை விடவும், மத்திய, மாநில அரசுகள் செய்த கொலை என்று சொல்வதே பொருந்தும்.

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் அடுத்தடுத்து இறந்தவர்கள், மத்திய- மாநில அரசுகள் கொண்டு வந்த பல மாற்றங்களினாலும், அரசுகளிடமிருந்து அவர்களுக்குகிடைக்க வேண்டிய எந்த உதவிகளும், பாதுகாப்பும் கிடைக்காமல் போனதாலும்தான் என்று தெரியவந்துள்ளது. எந்தப் பிரச்னையானாலும் மதத்தையும் சாதியையும் அதில் திணித்துக் கலவரத்தை ஏற்படுத்தும் சூழலும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. உலக அளவில் மதக்கலவரங்களால் பாதிக்கப்படுகிற நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. எங்கு எந்தப் பிரச்னை வந்தாலும், மக்கள் அதனை மதக்கலவரங்களாக மாற்றும் மனநிலை எங்கும் பரவியிருக்கிறது. 2015-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த மதக்கலவர சம்பவங்கள் மொத்தமாக 751. இந்தக் கலவரங்களில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 97. காயமடைந்தோர் எண்ணிக்கை 2264-ஆக பதிவாகியுள்ளது. 

ஆனால், 2015-ம் ஆண்டைவிட 2016-ம் ஆண்டு கலவரங்களின் எண்ணிக்கை 278-ஆக குறைந்துள்ளது. இந்தக் கலவரத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தோர் எண்ணிக்கை 903-ஆக உள்ளது. இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்ட பிரச்னைகளில் இறந்தவர்களைக் காப்பாற்ற முடியாமல் அரசு திணறிய நிகழ்வுகளும் உண்டு. 135 பேரை காவு வாங்கியிருக்கிறது மதக்கலவரங்கள்... இதனை அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. இதன் உச்சக்கட்டமாக சமீபத்தில் நிகழ்ந்த சாமியார் ராம் ரஹீம் கைது செய்யப்பட்டபோது பஞ்சாப், ஹரியானாவில் பற்றி எரிந்த கலவரங்களைச் சொல்லலாம். ஆனால், இந்திய மக்கள் அனைவரையும் ஒரே இரவில் தெருத் தெருவாய் சுற்ற வைத்தது பிரதமர் மோடி கொண்டு வந்த திடீர் பண மதிப்பிழப்பு பிரச்னை. 

2016, நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள்  செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியா முழுவதும் இருக்கும் மக்கள், தங்களிடம் இருக்கும் பணத்தை எப்படி மாற்றுவது? அடுத்த நாள் செலவுக்கு என்ன செய்வது என்று புரியாமல், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் ஏ.டி.எம்-களை தேடி அலைந்தனர். படித்து நல்ல வேலையில் இருக்கும் மக்களுக்கே அந்த மாற்றத்தை எப்படி எதிர் கொள்வது என்பது புரியாமல் இருந்த நிலையில், கிராம மக்களும், படிக்காதவர்களும் என்ன செய்வதென்று புரியாமல் திணறிக்கொண்டிருந்தனர். ஒட்டுமொத்த இந்தியாவும் 'டீமானிடைசேஷன்' என்ற ஒற்றை வார்த்தையைத்தான் ஒரு மாத காலத்துக்கு உச்சரித்துக் கொண்டிருந்தது. இதை அறிவித்த முதல் 50 நாள்களில் மட்டும் இந்தியாவில் 128 பேர் உயிரிழந்தனர். 

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த இறப்புகளிலேயே அதிக எண்ணிக்கையில் பதிவானது விவசாயிகளின் தற்கொலைதான். 2014 முதல் 2017 மே மாதம் வரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மொத்த எண்ணிக்கை 30,425. 'கிங் ஃபிஷர்' விமானத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா கோடிக்கணக்கில் இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டே வெளியேறி, வாழ்க்கையை உல்லாசமாக வாழ்ந்து வருகிறார் அவர். ஆனால், ஆயிரங்களில் கடன் வாங்கிய விவசாயிகள் தங்களுடைய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அன்றாட உணவுக்கே வழியில்லாமல் திண்டாடும் ஒரு விவசாயி, வாங்கிய கடனை குறிப்பிட்ட நாளில் செலுத்த முடியாததால், அவரை வங்கி சார்பில் கடனைச் செலுத்தும்படி கட்டாயப்படுத்துவதன் மூலம் அவர் அதைச் சமாளிக்க முடியாமல், தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார். இத்தனை விவசாயிகளின் இறப்புக்கு குரல் கொடுக்கவும், மீதம் இருக்கும் விவசாயிகளுக்காக போராடவும் தமிழக விவசாயிகள் டெல்லிக்குச் சென்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். 50 நாள்களுக்கு மேல் நாடாளுமன்றத்துக்கு முன்பு போராட்டம் நடத்தியும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க முடியவில்லை. மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்டும் பிரதமர், இந்திய மக்களின் பிரச்னைகள் பற்றி சற்றும் சிந்திக்க முயற்சி செய்ததில்லை. 

விவசாயிகளைக் காப்பாற்றத்தான் அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று பார்த்தால், இந்தியாவின் எதிர்காலமான மாணவர்கள், இளைஞர்களின் வாழ்க்கையும் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. எதிர்பார்த்த படிப்பை படிக்க முடியாத ஏமாற்றத்தில் தற்கொலை செய்துகொண்ட அனிதா, முதல் மாணவி அல்ல. கடந்த ஆண்டு மட்டும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கிடைக்காமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17. பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்றும், கல்லூரிகளில் இருக்கும் விதிகளாலும், சமூகத்தைப்பொறுத்து இட ஒதுக்கீடு செய்வதாலும் கல்லூரிப் படிப்பை தொடர முடியாத மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், மத்திய அரசு செயல்படுத்தும் பாடத் திட்டத்துக்கு ஏற்று, தங்களை மாற்றிக்கொள்ள சிரமப்படுகிறார்கள். இதன் விளைவாக அவர்கள் எடுக்கும் முடிவு தற்கொலை. 

“அவர்கள் கோழைத்தனமாக முடிவெடுக்கிறார்கள்" என குறைசொல்லும் அரசியல்வாதிகள் என்ன தகுதியுடன் இருக்கிறார்கள் என்ற கேள்வியைக் கேட்டால், எந்தத் தகுதியும் இல்லை என்பதுதான் பதில்... நான் என்ன உண்ண வேண்டும், படிக்க வேண்டும், என் கலாசாரம் எப்படி இருக்க வேண்டும் என நிர்ணயிக்க இந்த அரசாங்கம் யார்? மக்களுக்காக வேலை செய்யத்தான் இந்த அரசியல்வாதிகள்... மக்களை இப்படித்தான் வாழ வேண்டும் என சொல்லும் உரிமை இவர்களுக்கு இல்லை... உங்களால் எங்களுக்கு உதவ முடியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு, ஓரமாய் போய் வேடிக்கை பாருங்கள்... அனிதாக்கள் போன்ற இளம்படை கொண்டு, நீங்கள் போலியாய் பிரசவம் பார்த்துக் கொண்டிருக்கும் புதிய இந்தியாவை உருவாக்க ஒரு கூட்டம் தயாராக உள்ளது!

அடுத்த கட்டுரைக்கு