Published:Updated:

இலங்கை அகதி செந்தூரன் உயிரை காப்பாற்ற கோரி மதிமுக உண்ணாவிரதம்!

இலங்கை அகதி செந்தூரன் உயிரை காப்பாற்ற கோரி மதிமுக உண்ணாவிரதம்!
இலங்கை அகதி செந்தூரன் உயிரை காப்பாற்ற கோரி மதிமுக உண்ணாவிரதம்!
இலங்கை அகதி செந்தூரன் உயிரை காப்பாற்ற கோரி மதிமுக உண்ணாவிரதம்!

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதி செந்தூரன் உயிரை  காப்பாற்றக்கோரி,  மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி உறுப்பினர்கள் இன்று  உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து சரியான ஆவணங்கள் ஏதுமின்றி கடல் வழியாக தமிழகம் வந்ததாக  செந்தூரனும் அவருடன் சில இலங்கை அகதிகளும் கைது செய்யப்பட்டனர். இதில்,  செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் 39 பேரும், பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் 8  பேரும் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற  கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 6-ம் தேதி செந்தூரன் உண்ணாவிரதம்  மேற்கொண்டார்.

அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டு 21 நாட்களானதால் அவரது உடல் நிலை மோசம்  ஆனது.இதை அடுத்து போலீசார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்  அவரை அனுமதித்தனர்.

செந்தூரனை பார்த்து நலம் விசாரிப்பதற்காக மதிமுக தலைவர் வைகோ நேற்று  மருத்துவமனைக்கு சென்றார்.அப்போது வைகோ உள்ளே செல்வதற்கு அனுமதி  மறுக்கப்பட்டது.இதனால் அவர் 45 நிமிடங்கள் வெளியே காத்திருந்தார்.

உயர் போலீஸ் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னர் அங்கே காவலுக்கு இருந்த  போலீசார் வைகோவை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தூரன் உயிரை  காப்பாற்றக்கோரி மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி உறுப்பினர்கள் இன்று  உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர்  கொளத்தூர் மணி இன்று காலை தொடங்கிவைத்தார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு  இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் மாலை 6 மணிக்கு நிறைவு  செய்கிறார்.

அதை தொடர்ந்து, 28-ம்  தேதியிலிருந்து சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள, 47  ஈழத்தமிழர்களை விடுவிக்கக் கோரி, தாயகத்தில், ஒவ்வொரு நாளும், செந்தூரன்  கோரிக்கை நிறைவேறும் வரையில், தொடர் உண்ணாவிரத அறப்போர் நடைபெறும் என  மதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,"எந்த நேரத்திலும் செந்தூரன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.இளமையும்,  அழகும் மிக்க இந்த ஈழத்து இளைஞனை, மரணம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்  கொண்டு இருக்கிறது.அவரது உயிருக்கு ஊறு நேர்ந்தால், அதற்கு தமிழக அரசும்,  காவல்துறையும்தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.

எனவே செந்தூரனின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அவரையும்,  ஈழத்தமிழர்களையும், சிறப்பு முகாம்களில் இருந்து விடுவித்து, உடனடியாக திறந்த  வெளி முகாம்களுக்கு அனுப்பி வைக்குமாறு, தமிழக அரசை வேண்டிக்  கொள்கிறேன்”என்று வைகை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.